ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் உபாதைகள் குணமாக..?

சாப்பிடுவதால், கழுத்தில் நிணநீர் வீக்கம், பௌத்திரம், குடல் கிருமிகள், சளியினால் தலைபாரம், உடல் பருமன், குடலில் வாயு உபாதை என்றெல்லாம் ஏற்பட்டு பெரும் அவதியுறுகிறேன். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் உபாதைகள் குணமாக..?

நான் தொழில் காரணமாக, அடிக்கடி வட இந்தியா செல்கிறேன்.  அங்கு சாப்பிடுவதால், கழுத்தில் நிணநீர் வீக்கம், பௌத்திரம், குடல் கிருமிகள், சளியினால் தலைபாரம், உடல் பருமன், குடலில் வாயு உபாதை என்றெல்லாம் ஏற்பட்டு பெரும் அவதியுறுகிறேன். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?
-சடகோபன், சென்னை.

குடல் உட்புறத்தை நெய்ப்புறச் செய்யும் நான்கு வகையான பொருட்களாகிய நெய்- மஜ்ஜை- மாமிசக் கொழுப்பு- நல்லெண்ணெய் ஆகியவற்றில்  உடல் உபாதைக்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்து குடிக்கச் செய்து, அவற்றின் வரவு திருப்தியான அளவில் வந்தவுடன் அறிகுறிகள் மூலம் அறிந்தவுடன் குடிப்பதை நிறுத்தி, உடலை வியர்க்கச் செய்து உடல் உட்புறக் குழாய்களில் அடைபட்டிருக்கும் அழுக்குகளை நெகிழச் செய்து குடலுக்குக் கொண்டு வந்து, வாந்தி, பேதி, எனிமா மூலமாக வெளியேற்றும் பண்டைய ஆயுர்வேத வைத்திய முறை தங்களுக்குக் கை கொடுக்கலாம்.
இந்த நான்கு நெய்ப்புப் பொருட்களில், உங்களுக்கு நல்லெண்ணெய்யை அருந்தச் செய்து, குடலை நெய்ப்பாக்கி, அதன் பிறகு மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைச் செய்வது பெரும் நன்மையளிக்கும். நல்லெண்ணெய்யை அருந்துவதால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து உபாதைகளின் தீவிரமும் மட்டுப்பட்டு, உடலை லேசாக்கி வலுவுறவும் செய்யும். பெருங்குடலில் நீரை அதிகம் உறிஞ்சிக் கொண்டு, வெளியிடும் கசிவின் தன்மையைக் குறைத்து மலத்தை இறுக்கிக் கெட்டியாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்தும் நிகழ்வினை நல்லெண்ணெய் தடுத்து விடுவதால் பௌத்திரம், பெருங்குடல்வாயு உபாதை போன்றவை நன்றாக்கிக் குறைத்துவிடும்.
மேற்குறிப்பிட்ட நல்லெண்ணெய்யை அருந்தும் சிகிச்சை முறையை செய்துகொள்ளும்போது,  திரவமான, இளஞ்சூடான, வழுவழுப்பில்லாத கசிவு ஏற்படுத்தாத பலவற்றுடன் கலக்கப்படாத, சரியான அளவுடன் கூடிய உணவை மட்டுமே ஏற்க வேண்டும். குடிப்பதற்கு சூடான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.  இயற்கை உந்துதல்
களைத் தவிர்க்கக் கூடாது.  மூடுபனி, வெயில், எதிர்காற்று தவிர்க்க வேண்டும்.  வண்டிப்பயணம், அதிக நடை, அதிக பேச்சு, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், உயர தலையணை, பகல் தூக்கம், புகை மற்றும் தூசி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
மூன்று முதல் ஏழு நாள்கள் வரை நல்லெண்ணெய் அருந்தும் சிகிச்சை முறையால் ஏற்படும் குடல் காற்றில் கீழிறக்கம், தீவிர பசி, குடல் வழுவழுப்பினால் இளகிய மலத்தின் வெளியேற்றம், நல்லெண்ணெயின் மீது வெறுப்பு, சோர்வு போன்றவை நெய்ப்பின் திருப்தியான வரவை தெரிவிக்கின்றன.  இதன்பிறகு சிறிதும் காலதாமதமின்றி, வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறைகளைச் செய்து வாந்தி- பேதி- எனிமா முறைகளைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் வடநாட்டுச் சாப்பாட்டின் மூலம் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்கலாம்.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைக் கையாள்வதில் ஏற்படும் அதிக நாட்கள், வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்குக் கூறப்படும் தடையுத்தறவுகள், உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றைத் தவிர்த்து குறுக்கு வழியில் உட்புகுந்து விறுவிறுப்புடன் வேலை செய்யக் கூடிய வழிகளை ஆராய்ந்ததன் விளைவுதான் தற்சமயம் வெளிவரும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசி மருந்துகள் போன்றவை. எவை துரிதமாக உடல் உட்புறக் குழாய்களில் தடாலடியாகப் புகுந்து வேலை செய்கின்றனவோ, அவற்றுக்கே உரிய பக்க விளைவுகளையும் நாம் எதிர்நோக்க வேண்டி வரும். ஆனால் இது காலத்தின் கட்டாயமாகிப் போனதால், வேறு வழியின்றி சாப்பிடவும் செலுத்தவும் நேர்கின்றது.
உடல் உட்புறக் கிருமிகளை அழித்து வெளியேற்றக் கூடியதும், குழாய்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளைச் சுரண்டி அகற்றக் கூடியதுமான ஆயுர்வேத மருந்துகளான திக்தகம், மஹாதிக்தகம், சோணிதாமிருதகம்,  ஆரக்வாதி கஷாயம், வில்வாதி குளிகை, சிலாசத்து பற்பம், திரிபலாகுக்குலு மாத்திரை போன்றவற்றால் உங்கள்  உடல் உபாதைகள் நன்கு குறையும்.  உணவில் இனிப்பு, புளிப்பு, புலால் வகை உணவுகளை அறவே நீக்கவும். பகல் தூக்கம் தவிர்க்கவும். புங்கம்பட்டை,  சரக்கொன்னப்பட்டை, கருங்காலிக்கட்டை ஆகியவை வேக வைத்த தண்ணீரை குடிக்கப் பழகிக் கொள்ளவும்.
 (தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com