மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 140

பிரதமர் வாய்ப்பு கை நழுவியது என்கிற ஆதங்கம் முலாயம்சிங் யாதவுக்கு நிறையவே இருந்தது. பிரதமர் பதவி உத்தர பிரதேசத்தவர்களுக்கு என்கிற எண்ணம் கொண்டவர் அவர் என்பது ஊரறிந்த ரகசியம்.

News image
Updated On :13 மே 2023, 6:30 pm

பிரதமர் வாய்ப்பு கை நழுவியது என்கிற ஆதங்கம் முலாயம்சிங் யாதவுக்கு நிறையவே இருந்தது. பிரதமர் பதவி உத்தர பிரதேசத்தவர்களுக்கு என்கிற எண்ணம் கொண்டவர் அவர் என்பது ஊரறிந்த ரகசியம். முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிடமான தனது கருத்துவேறுபாடு காரணமாக, ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சமாஜவாதி கட்சியைத் தொடங்கியதால் பிரதமர் பதவி அவருக்கு கை நழுவியது.
தனியாகப் போட்டியிட்டு உத்தர பிரதேசத்தில் 17 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றிருந்தது அவரது சமாஜவாதி கட்சி. பிளவுபடாமல் இருந்திருந்தால், ஜனதா தளம் பாஜகவுக்கு சரியான போட்டியைக் கொடுத்திருப்பதுடன், பாதிக்குப் பாதி இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அப்படியொரு சூழல் ஏற்பட்டிருந்தால், ஜனதா தளத்தின் பிரதமர் வேட்பாளராக முலாயம் சிங்தான் அடையாளம் காணப்படுவாரே தவிர, நிச்சயமாக தேவே கெளடா அல்ல.
முலாயம்சிங் யாதவை சாதாரண மாநில அரசியல்வாதிகளின் பட்டியலில் சேர்த்துவிட முடியாது. 17 வயதில் தனது மாணவர் பருவத்தில் அரசியலுக்கு வந்தவர் அவர். மல்யுத்த பயில்வானான அவர், முதுகலைப் பட்டதாரி என்பதும், மெயின்புரியில் கல்லூரி விரிவுரையாளராக இருந்தார் என்பதும் வெளியுலகத்துக்குத் தெரியாது.
அவரை முதலில் அடையாளம் கண்டவர் சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா. அவருக்கு அரசியலில் ஊக்கம் அளித்தவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர். 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். லோக் தளத்தின் மாநிலத் தலைவராக்கியவர் முன்னாள் பிரதமர் சரண் சிங்.
இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனமும், மிசா சட்டமும் உருவாக்கிய தலைவர்களில் முலாயம்சிங் யாதவும் ஒருவர். 19 மாதங்களை சிறையில் கழித்துவிட்டு வெளியில் வந்தபோது, அவர் மிகப் பெரிய ஹிரோவாக உத்தர பிரதேசத்தில் மாறியிருந்தார். ராம் நரேஷ் யாதவ் தலைமையில் 1977-இல் அங்கே அமைந்த ஜனதா 
அரசில், அமைச்சராக இடம் பிடித்ததில் இருந்து தொடங்கியது அவரது அசுரவேக அரசியல் வளர்ச்சி.
ஏழு முறை மக்களவைக்கும், பத்து முறை உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முலாயம்சிங் யாதவ், தென்னிந்தியாவில் ஹிந்தி வெறியராகவும், ஜாதிப் பற்றாளராகவும் அறியப்படுவது மிகப் பெரிய புரிதலின்மை. இயல்பாகவே அவருக்குத் தென்னிந்தியர்கள் மீது, குறிப்பாக தமிழர்கள் மீது, மிகப் பெரிய மரியாதை உண்டு. அவர் முதல்வராக இருக்கும்போதெல்லாம், பெரும்பாலும் தமிழர்கள்தான் முக்கியமான நிர்வாகப் பொறுப்பில் இருப்பார்கள்.
முலாயம்சிங்கின் பிடிவாதமும், வற்புறுத்தலும்தான் இந்தியாவுக்கு டாக்டர் அப்துல் கலாம் என்கிற குடியரசுத் தலைவரைத் தந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரது பரிந்துரையை அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார் என்பதுதான் நிஜம். அதற்காக நாம் முலாயமுக்கு நன்றிகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியே வந்து, ஆட்டோ பிடிப்பதற்காக இந்தியா கேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  என்னைக் கடந்து சென்ற கார் நின்றது. அது அமைச்சரின் கார் என்பது தெரிந்தது. யாராக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அதிலிருந்து காவலர் ஒருவர் இறங்கி என்னை அழைத்தார்.
அருகில் போனபோது, அந்த வாகனத்தில் ரகுவன்ஷ் பிரசாத் சிங் இருப்பது தெரிந்தது. லாலுபிரசாத் யாதவின் வலது கரமாகத் திகழ்ந்த ரகுவன்ஷ் பிரசாத், தேவே கெளடா அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் இணையமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வீட்டில் அவரை அடிக்கடி சந்திப்பதால் நல்ல பழக்கம்.
காரில் ஏறிக் கொள்ளச் சொன்னார். அசோகா ரோடிலிருந்த அவரது வீட்டுக்கு வந்தோம். கருணாகரன், பிரணாப் முகர்ஜி போன்றவர்களுக்கு நெருக்கமானவன் நான் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் என்னை அழைத்து வந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவன் அல்ல நான்.
"காங்கிரஸில் என்ன நடக்கிறது? நரசிம்ம ராவ் பதவி விலகுவாரா இல்லையா?''
"அமைச்சராக இருக்கும் உங்களுக்குத் தெரியாதது எனக்கு எப்படி தெரியும்? எனக்குத் தோன்றிய வரையில் அவர் உடனடியாக விலக மாட்டார் என்றுதான் 
நினைக்கிறேன்...''
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினால், நாலா பக்கத்திலிருந்தும் வேட்டையாடப்படுவார். ஜெயின் ஹவாலா டைரி பிரச்னையில் கட்சி வேறுபாடில்லாமல் எல்லோருடைய பகையையும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரது நிலைமையைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது...''
"காங்கிரûஸயும், நரசிம்ம ராவையும் கடுமையாக விமர்சிக்கும் கட்சி உங்களுடையது. அதிலும் பாபர் மசூதி இடிப்புக்காக நரசிம்ம ராவைத் தூக்கில்போட வேண்டும் என்று அப்போது எனக்கு நீங்கள் பேட்டியே கொடுத்தீர்கள். இப்போது ஏன் இந்த திடீர் அனுதாபம்?''
"அனுதாபம் எல்லாம் இல்லை. பிரதமராக இருந்தவர் அவர். என்னதான் தவறுகள் செய்திருந்தாலும், விமர்சித்தாலும் அவர் ஒரு "ஸ்காலர்' (மிகப் பெரிய அறிவாளி). அவர் கெளரவமாக அரசியல் ஓய்வுபெற வழிகோல வேண்டும் என்று நினைக்கிறேன்.''
"இது உங்கள் கருத்து மட்டுமா, இல்லை ஆர்.ஜே.டி. தலைவர் லாலுபிரசாத் யாதவின் கருத்துமா?''
"லாலுஜியும் அவர்மீது வெறுப்பை உமிழ்வதை விரும்பவில்லை. நரசிம்ம ராவ் விலக மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அப்படியே விலகுவதாக இருந்தாலும் உடனடியாக விலகமாட்டார். வேறு வழியில்லை என்றால்தான் விலகுவார்.''
"புதிய அரசு எப்படி இருக்கிறது?''
"அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஹிந்தி பேசத் தெரியாத பிரதமரின் கீழ் நாங்கள் பணியாற்றுகிறோம் என்பதுதான் வேடிக்கை...''
"நரசிம்ம ராவும் தென்னிந்தியர்தானே?''
"அவர் தென்னிந்தியர் என்றாலும், தேசியத் தலைவர். அவருக்கு ஹிந்தி, மராட்டி, உருது என்று பல மொழிகள் தெரியும். பேசுவார், எழுதுவார், படிப்பார். அவருடன் பிரதமர் தேவே கெளடாவை எப்படி ஒப்பிட முடியும்?''
"முலாயம்சிங்கும் அதிருப்தியில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்...''
"அதில் என்ன சந்தேகம்? எங்களுக்குள் இருக்கும் விரோதத்தால், யாதவ் ஒருவர் பிரதமராவதை நழுவவிட்டு விட்டோம். முலாயம்சிங் மட்டும் லாலுஜியுடன் ஒரு வார்த்தை பேசியிருந்தால், அவர்தான் பிரதமராகி இருப்பார். முலாயம்சிங் பிரதமராகக் கூடாது என்று விரும்பியவர் யார் என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்...''
நான் யோசித்து, யோசித்துப் பார்த்தேன், விடை கிடைக்கவில்லை. "தெரியவில்லை' என்று நான் சொன்னதும் சிரித்தார்.
"வேறு யாருமல்ல, வி.பி. சிங்தான். மண்டல் கமிஷன் அறிவிப்பால் தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய செல்வாக்கை முலாயம் தட்டிப் பறித்துவிட்டார் என்கிற அவரது கோபம் இப்போதுவரை தணியவில்லை.''
"தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வி.பி. சிங்கைப் பிற்படுத்தப்பட்டவரின் காவலராகத்தான் பார்க்கிறார்கள். நீங்கள் புதிதாகச் சொல்கிறீர்கள்...''
"தென்னிந்தியாவுக்கும், எங்களது ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கும் உணர்வு ரீதியாகவும் ஜாதீய ரீதியாகவும் நிறைய வித்தியாசம் உண்டு. வி.பி. சிங், சந்திரசேகர்ஜி, நான், ராஜ்நாத் சிங் எல்லாம் ஷத்திரியர்கள். ராஜபுத்திரர்கள். எங்களை ராஜ்புத் அல்லது தாக்கூர் என்று அழைப்பார்கள். ஜாதியக் கட்டமைப்பில் பிராமணர்கள், வைசியர்கள் போல  தாக்கூர்கள் மேல்தட்டில் இருப்பவர்கள்.''
"அதனால் என்ன?''
"ராஜாக்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருக்கும் தாக்கூர்கள் நிலச்சுவான்தார்கள். வி.பி. சிங் நடைமுறைப்படுத்த அறிவித்த மண்டல் கமிஷன் அறிக்கையால் பலனடையப் போவது இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களில் ஒருவரான முலாயம்சிங் யாதவையோ, கல்யாண் சிங்கையோ, லாலுஜியையோ, நிதீஷ்குமாரையோதான் தங்களது தலைவராக ஏற்றுக் கொள்வார்களே தவிர, தாக்கூரான வி.பி. சிங்கை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?''
"அதனால்தான் வி.பி. சிங்கால் தன்னை செல்வாக்கான தலைவராகத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையா?''
"தமிழக முதல்வர் கருணாநிதியும், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடுவும் வி.பி. சிங்கின் பெயரைப் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைத்தபோது அவர் மறுத்துவிட்டதற்கு அவரது உடல்நிலை காரணமல்ல. காங்கிரஸýம், சமாஜவாதி கட்சியும், தன்னைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளாது என்பது அவருக்குத் தெரியும். அந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான் அவர் பதவிப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.''
"இதுவரை வேறு யாருமே சொல்லாத செய்தி இது. வி.பி. சிங் பெயரை லாலுஜியும்தான் முன்மொழிந்தார்...''
"முலாயம் ஏற்றுக் கொள்வாரா? காங்கிரஸ் சம்மதிக்குமா? வெளியில் தெரியாத பல ரகசியங்களில் அதுவும் ஒன்று...''
வடமாநிலங்களில் செல்வாக்குள்ள தலைவராக வி.பி. சிங் உயராததும், தொடர்ந்து அரசியலில் முக்கியத்துவம் பெறாததும் ஏன் என்பதற்கு எனக்கு விடை கிடைத்தது.
முலாயம்சிங் யாதவைப் போலவே, ரகுவன்ஷ் பிரசாத் சிங்கும் சோஷலிஸ்ட்தான். முன்னவர் சம்யுக்த சோஷலிஸ்ட்டாக இருந்தவர் என்றால், ரகுவன்ஷ் பிரசாத் பிரஜா சோஷலிஸ்ட். அதனால்தான் சந்திரசேகர்ஜிக்கு நெருக்கம்.
1977 ஜனதா ஆட்சியில் முலாயம்சிங் யாதவ் உத்தர பிரதேசத்தில் அமைச்சரானது போல, பிகாரில் கர்ப்பூரி தாக்கூர் தலைமையில் அமைந்த ஜனதா ஆட்சியில் முதன்முறையாக அமைச்சரானவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். பிரதமர்கள் தேவே கெளடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்ற ரகுவன்ஷ் பிரசாத், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் அவரது பங்களிப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காவு கொண்ட அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.
அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கிடம் நான் விடை பெற்றபோது இருட்டிவிட்டது. அசோகா ரோடில் அவரது வீட்டுக்கு அருகில்தான் (இரண்டு பங்களாக்கள் தள்ளி) பாஜகவின் தலைமை அலுவலகம் அப்போது இயங்கி வந்தது.
ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது முதல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் களை இழந்திருந்தது என்றால், பாஜக தலைமையகத்தில் நிலைமையே வேறு. வழக்கத்தைவிடப் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் தொண்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
உள்ளே நுழைந்து, ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியேற எத்தனித்தபோது, சிக்கந்தர் பக்த்தும், சுஷ்மா ஸ்வராஜும் ஒருவர் பின் ஒருவராக காரில் உள்ளே நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியும். அதற்குப் பிறகும் வெளியேற மனதில்லாமல் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தேன்.
என்னைப் பார்த்தவிட்ட பாஜக தலைமையகச் செயலாளர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி தன் பின்னால் வரும்படி சைகை செய்தார். முரளி மனோகர் ஜோஷியுடன், சிக்கந்தர் பக்த்தும், சுஷ்மா ஸ்வராஜும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவருக்கும் என்னை ஏற்கெனவே தெரியும் என்பதால் அறிமுகம் தேவைப்படவில்லை.
உள்ளே நுழைந்ததும், கோபமாக என்னை நோக்கிக் கேள்விக் கணையைத் தொடுத்தார் முரளி மனோகர் ஜோஷி.
"என்னதான் நடக்கிறது உங்கள் தமிழ்நாட்டில்? மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் துணிவில் திமுக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறதா? நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என்று கருணாநிதி நினைக்கிறாரா?'' - பொறிந்து தள்ளினார் அவர்.
எனக்கு எதுவும் புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தேன்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.