'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 141
முரளி மனோகர் ஜோஷியின் கோபத்துக்குக் காரணம், தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த சில அசம்பாவிதங்கள் என்பதை உடனடியாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.


முரளி மனோகர் ஜோஷியின் கோபத்துக்குக் காரணம், தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த சில அசம்பாவிதங்கள் என்பதை உடனடியாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் பேசப்பேசத்தான் அது எனக்குப் புரிந்தது.
கன்யாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணியும், பாரதிய ஜனதா கட்சியும் நீண்ட காலமாகவே ஓரளவுக்கு வலிமையாக இருந்து வருகின்றன. அடிக்கடி பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, கிறிஸ்தவ நாடார்களுக்கும், ஹிந்து நாடார்களுக்கும் இடையேயான சண்டை அது என்றாலும், அந்த ஜாதிச் சண்டை படிப்படியாக மதக்கலவரமாகவும் அரசியல் போட்டியாகவும் மாறி இருந்தது.
திருவட்டார் பகுதியில் நடந்த மோதலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டிருந்தனர். ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்கு முன்பு, பாஜகவினர் தாக்கியிருந்தார்கள் என்றும் அதற்கு எதிர்வினையாகத் தாங்கள் தாக்கியதாகவும் கூறியது எதிர்தரப்பு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கன்யாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன என்பது என்னவோ உண்மை. பாஜகவினரும் திருப்பித் தாக்குவதில் ஈடுபட்டனர் என்பதையும் மறுக்க முடியாது.
கன்யாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு எதிரான தாக்குதல்கள்தான் பாஜக தலைமையின் எரிச்சலுக்கும் கோபத்துக்கும் காரணம். ஜூன் மாதம் தேவே கெளடா ஆட்சி அமைந்த பிறகு, பாஜகவின் மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் சென்னை சென்றிருந்தபோது, மரியாதை நிமித்தம் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அந்த சந்திப்புக்குக் காரணமும் பின்னணியும் அப்போது சொல்லப்படவில்லை.
'பழைய நண்பர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக வாஜ்பாய் தம்மை சந்தித்ததாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். நெருக்கடி காலத்தில் தில்லியில் சந்தித்தது, மதுரையில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டில் கலந்து கொண்டது போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம்'' என்றும் விளக்கம் கொடுத்தார். வாஜ்பாய் அந்த சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
அந்த சந்திப்பில், கன்யாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து வாஜ்பாய் முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டார் என்று முரளி மனோகர் ஜோஷியின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். இப்போது ஜோஷிஜியின் ஆத்திரத்துக்கும், அச்சத்துக்கும் காரணம் அது தொடர்பானது மட்டுமே அல்ல.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாஜக தலைவர் எல்.கே. அத்வானிக்கு அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன என்றும், திமுக அரசு அதை சட்டை செய்யவில்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறியபோது, அவரது கோபத்துக்கான காரணம் தெரிந்தது. நான் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தேன். ஜோஷிஜியின் கோபம் சற்று அடங்கியதும் மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.
'நீங்கள் சொன்னதுபோல நிலைமை ஒன்றும் மோசமாக இல்லை. கன்யாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாள்களாகவே இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. அது தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் இல்லை. மற்ற இடங்களில் பாஜக பலமான அரசியல் கட்சியாகவோ, செல்வாக்குள்ள இயக்கமாகவோ இல்லை. அதனால், நீங்கள் நினைப்பதுபோல, அத்வானிஜிக்கு எதுவும் ஏற்பட்டுவிடாது..'' என்கிற எனது பதில் அவரை சமாதானப்படுத்தவில்லை.
'கன்யாகுமரியில் காணப்படும் பிரச்னை வேறு பகுதிகளுக்கும் பரவாது என்பது என்ன நிச்சயம்? விரைவிலேயே தமிழகத்தில் ஏனைய பகுதிகளிலும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி, நாங்கள் வளர விடாமல் தடுக்க முயற்சிகள் நடக்கும். எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களும், அச்சுறுத்தல்களும் அவர்கள் அத்வானிஜியை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கின்றன.''
டாக்டர் எம்.எம். ஜோஷியின் அந்தக் கூற்று அப்போது அசாத்தியமானதாகவும், ஆதாரமற்றதாகவும் எனக்குத் தோன்றியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த கோவை வெடிகுண்டுத் தாக்குதல்கள், அவரது அச்சத்தை உறுதிப்படுத்தின. கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்த பாஜகவை தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தியது கோவை குண்டு வெடிப்பு சம்பவம்தான்.
ஜோஷிஜியின் அறையிலிருந்து மெல்ல வெளியேறி, நான் கிளம்ப எத்தனித்தபோது, காரில் வந்து இறங்கினார் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஆர். மல்கானி. தில்லி பாஜகவின் முக்கியமான மூன்று தலைவர்களான வி.கே. மல்ஹோத்ரா, மதன்லால் குரானா, கே.ஆர். மல்கானி ஆகியோர் ஜனசங்க காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர்கள்.
கே.ஆர். மல்கானிக்குத் தமிழ்நாட்டுடன் அதிகத் தொடர்பு இல்லையென்றாலும் தமிழ் பிடிக்கும். என்னை சந்திக்கும் போதெல்லாம் திருக்குறள் குறித்தும், பாரதியார் குறித்தும் அவர் கேட்கத் தவறுவதில்லை. எல்.கே. அத்வானி போலவே இப்போது பாகிஸ்தானில் இருக்கும் 'சிந்து' மாகாணத்தைச் சேர்ந்த சிந்தி இனத்தவர் அவர். சிந்தி இனத்தவர்கள் ஹிந்துக்கள் என்றாலும், அந்த இனத்தில் ஜாதிப் பிரிவுகள் எதுவுமே கிடையாது. அனைவருமே சிந்திகள், அவ்வளவே.
'ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாதவர்கள் நாங்கள்'' என்று அத்வானியைப் போலவே பெருமையாகச் சொல்லிக் கொள்பவர் மல்கானி.
1961இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துத் தேறியவர் அவர். பாரதிய ஜனசங்கம் தொடங்கியது முதலே அதன் உறுப்பினர். 'ஆர்கனைசர்' ஆங்கில இதழுக்கும், ஹிந்தியில் வெளிவரும் 'பாஞ்சஜன்யா' இதழுக்கும் அவர்தான் நிறுவன ஆசிரியர். இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் கவனித்து வந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
1975 ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவில் அவசரநிலைச் சட்டம் அன்றைய இந்திரா காந்தி அரசால் அறிவிக்கப்பட்டபோது, அடுத்த இரண்டு மணிநேரத்தில் முதலாவதாக கைது செய்யப்பட்டவர் கே.ஆர். மல்கானி. 1977 மார்ச் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடைசி நபராக விடுவிக்கப்பட்ட அரசியல் தலைவரும் அவர்தான். ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டு, பாரதிய ஜனதா கட்சி 1980இல் தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் மல்கானியும் ஒருவர்.
கே.ஆர். மல்கானி எழுதியிருக்கும் பல புத்தகங்கள் ஆவணப் பதிவுகள். அவரது அவசரநிலைச் சட்டம் குறித்த 'மிட் நைட் ஷாக்', 'தி ஆர்.எஸ்.எஸ். ஸ்டோரி', 'தி சிந்த் ஸ்டோரி' உள்ளிட்ட புத்தகங்கள் அரசியல் ஆர்வலர்கள் கட்டாயம் படித்திருக்க வேண்டியவை. மகாத்மா காந்தியின் படுகொலையில் தொடங்கி, ராஜிவ் காந்தி படுகொலை வரை இந்தியாவில் நடந்த படுகொலைகள் உள்ளிட்டவை குறித்த அவரது 'பொலிடிகல் மிஸ்ட்ரீஸ்' (அரசியல் புதிர்கள்) என்கிற புத்தகம், பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது.
எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட கே.ஆர். மல்கானியும், இரா செழியனும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடம் நாடாளுமன்ற நூலகம். 'நாங்கள் சந்தித்தால் கடும் வாக்குவாதம் எழும்' என்று இரா. செழியன் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இறுதி நாள்களை, புதுவையில் துணைநிலை ஆளுநராகக் கழித்தார் மல்கானி. தில்லிக்குப் போகும்போதும், வரும்போதும் சென்னை கே.கே. நகரிலுள்ள புதுச்சேரி அரசினர் இல்லத்தில் அவரைப் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முகப்பு வாயிலில் (போர்டிகோ) நின்றபடியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
'உள்ளே யார், யார் இருக்கிறார்கள்?''
சொன்னேன். ஜோஷிஜியின் ஆத்திரம் பற்றியும் தெரிவித்தேன். சிரித்தபடியே கேட்டுக் கொண்டார்.

'அதெல்லாம் இருக்கட்டும். காங்கிரஸில் என்ன நடக்கிறது? சரத் பவாரும், கருணாகரனும் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் நரசிம்ம ராவைப் பதவியில் தொடர அனுமதிப்பார்களா, மாட்டார்களா?''
'இதையெல்லாம் என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? நான் பத்திரிகையாளன். செய்தி கிடைத்தால்தானே சொல்ல முடியும்?''
'உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நான் சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்தப்படாமல் நரசிம்ம ராவ் விலக மாட்டார். அதனால், நீதிமன்றத்தை பயன்படுத்தி அவர் பதவி விலகுவதை அவரது அரசியல் எதிரிகளும், தேவே கெளடா அரசும் உறுதிப்படுத்தும்...''
'அவரது அரசியல் எதிரிகளில் உங்களது பாஜகவும் இருக்கிறதா, இல்லை நீங்கள் நரசிம்ம ராவின் நண்பர்களாக இருக்கிறீர்களா?''
'இரண்டுமே இல்லை. நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம். இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதில்தான் எங்கள் வளர்ச்சி இருக்கப் போகிறது. இப்போது எங்களை எதிரிகளாக வர்ணிக்கும் கட்சிகள் எல்லாம், ஒருநாள் எங்களுக்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவப் போகின்றன. இதில் பலவீனமாகி மெள்ள மெள்ள கரையப்போவது காங்கிரஸ் கட்சிதான். அது அவர்களுக்குத் தெரியவில்லை.''
அவரது தீர்க்கதரிசனம் பலித்தது என்பதுதான் வியப்பு.
நான் கன்னாட் பிளேசில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்து விட்டேன். என்னை சந்திக்க 'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனின் நண்பர் அங்கே காத்திருந்தார். அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து, வழக்கை அந்த நண்பர்தான் நடத்திக் கொண்டிருந்தார். விரைவில் தீர்ப்பு வெளிவர இருப்பதாகத் தெரிவித்த அந்த நண்பர், என்னிடம் ஓர் உதவி கோரினார். நான் பதறிவிட்டேன்.
'அண்ணன்தான் உங்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். நீங்கள் எப்படியாவது சட்ட அமைச்சர் ராமாகாந்த் காலப்பை நான் சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.''
சட்ட அமைச்சராக இருந்த ராமாகாந்த் காலப், கோவாவில் துணை முதல்வராக இருந்தவர். மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் என்பதைத் தவிர அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரை சந்தித்ததுகூடக் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவரை சந்திக்க நான் உதவ வேண்டும் என்கிற கோரிக்கை என்னைத் திடுக்கிட வைத்தது. அவரிடம் எனது இயலாமையை நான் சொன்னேன்.
'நீங்கள் இப்படிப் சொல்வீர்கள் என்றும், அண்ணன் சொன்னார். அவரது தனிப்பட்ட கோரிக்கை என்று எடுத்துச் சொன்னார். நீங்கள் உதவுவீர்கள் என்று அவர் நம்புகிறார்.''
'எதற்காக நீங்கள் ராமாகாந்த் காலப்பை சந்திக்க நினைக்கிறீர்கள்? அவரிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?''
'அண்ணனின் (ம. நடராசன்) ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் அதை நிராகரித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். சட்ட அமைச்சர் ஒரு வார்த்தை சொன்னால் ஜாமீன் நிச்சயம் கிடைத்துவிடும். அதனால்தான்...''
'இது போன்ற பிரச்னைகளில் நான் தலையிடுவது கிடையாது. அமைச்சர்களிடம் உதவி கேட்பவன் இல்லை. நீதித்துறையில் இதுபோன்ற தொடர்புகளை வைத்துக் கொள்வதும் கிடையாது. என்னால் உங்களுக்கு உதவ முடியாது. மன்னித்துக் கொள்ளுங்கள்.''
'நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன். நீங்கள் கட்டாயம் உதவுவீர்கள் என்று அவர் நம்புகிறார். அவரை நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் வருகிறேன்'' என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிகையாள நண்பர் ஒருவரை அழைத்தேன். அவர் எடுத்த எடுப்பில் கேட்ட கேள்வி 'என்ன ம. நடராசன் சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டார்களா?''
'ஆமாம்.''
'முடிந்தால் செய்து கொடுங்கள். இல்லையென்றால் பேசாமல் இருங்கள். இரண்டு நாளில் தீர்ப்பு வந்துவிடும். சிறப்பு அனுமதி கோரும் மனு என்பதால் உடனடியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடமும் கேட்டார். நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி மழுப்பிவிட்டேன்.''
அவர் தொலைபேசியைத் துண்டித்து விட்டார். நான் செய்வதறியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்தேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...