பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 167

வெஸ்டர்ன் கோர்ட்டில் உள்ள ஜி.கே. மூப்பனாரின் அறையில் பலர் அவரைச் சந்திக்கக் காத்திருந்தனர்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 167

வெஸ்டர்ன் கோர்ட்டில் உள்ள ஜி.கே. மூப்பனாரின் அறையில் பலர் அவரைச் சந்திக்கக் காத்திருந்தனர்.  ஈரோட்டில் நடக்க இருந்த தமாகா உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜி.கே.எம். கிளம்பிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.  அமைச்சர்கள் எம். அருணாச்சலம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் மூவரும் அவருடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார் அவரது உதவியாளர்.

வெஸ்டர்ன் கோர்ட் வெராந்தாவில் சிறிது நேரம் காத்திருந்தேன். முதலில் ஜெயந்தி நடராஜனும், அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் மட்டுமல்லாமல், அங்கே இருந்த வேறு சில எம்.பி.க்களும் கிளம்பிச் சென்றனர். கூட்டம் சற்று குறைந்தது என்பதால், மெதுவாக அறைக்குள் நுழையத் தலைப்பட்டேன்.

என்னுடைய அதிர்ஷ்டம், உள்ளே யாரோ ஒருவரோடு பேசிக் கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்த ஜி.கே.எம். பார்வையில் பட்டேன். 'என்ன?' என்பதுபோல சிரித்துக் கொண்டே சைகை காட்டினார். விமான நிலையத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் அவர் இருந்தும்கூட, என்னை உட்காரச் சொல்லி உபசரித்த அவரது பண்பை மறக்கவா முடியும்?

'அந்த அம்மா (ஜெயலலிதா) தில்லி வாராங்க போலிருக்கு... சி.எம். (கருணாநிதி) வருகிறார். அதனாலதான் தில்லியில் முகாமிட்டிருக்கீங்களோ?' என்று சிரித்தபடியே கேட்டார்.

'நான் தில்லிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. ஒவ்வொரு தடவையும் சென்னை திரும்புவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நான் இப்போது ஒரு மெசஞ்சராக (செய்தி கொண்டு வருபவர்) உங்களிடம் வந்திருக்கிறேன்...'

'இதென்ன புதிய ரோல்... என்ன விஷயம்...?'

ராஜேஷ் பைலட்டை சந்தித்தது, அவர் ஜி.கே. மூப்பனாருக்குக் கடிதம் தந்தனுப்பிருப்பது என்று ஒன்றுவிடாமல் சொல்லியபடி, அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். கவரைப் பிரித்துப் படித்தார். படிக்கும்போதே, அவரது முகத்தில் புன்னகை மலர்ந்தது. படித்து முடித்துவிட்டு, அதை மடித்துப் பையில் வைத்துக் கொண்டார். சிரித்தபடி என்னைப் பார்த்தார்.

'அதில் என்ன எழுதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?'

'தெரியும். ஆட்சேபணை இல்லையென்றால் என்னிடம் காட்டச் சொன்னேன். ராஜேஷ்ஜி கடிதத்தைக் காட்டினார். அதற்குப் பிறகுதான் உரையில் போட்டு, உங்களிடம் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.'

மூப்பனார் எதுவும் பேசவில்லை. அழைப்பு மணியை அடித்துத் தனது கைப்பையை எடுத்துச் செல்ல டிரைவரிடம் பணித்தார். ஒரு நிமிடம் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார், பிறகு என்னை நோக்கித் திரும்பினார்.

'இதெல்லாம் உடனடியாக முடிவெடுக்கக் கூடியதல்ல. கட்சியில் உள்ள எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூடப் பல தடைகள், சிக்கல்கள் இருக்கின்றன. அவர் கூறியிருப்பதை நான் கட்டாயம் யோசிக்கிறேன் என்று பைலட்டிடம் சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சி மீது பற்றும் அக்கறையும் உள்ள தலைவர்களில் அவர் ஒருவர். அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.'

நான் பதில் சொல்லவில்லை. அவர் கிளம்பிவிட்டார். நானும் வெஸ்டர்ன் கோர்ட்டிலிருந்து அருகில் கன்னாட் சர்க்கஸில் உள்ள எனது அலுவலகம் நோக்கி நகர்ந்தேன்.

அப்படி என்னதான் அந்தக் கடிதத்தில் சொல்லி இருந்தார் ராஜேஷ் பைலட்? அவரது முக்கியமான வேண்டுகோள், ஜி.கே. மூப்பனார் காங்கிரஸூக்குத் திரும்ப வேண்டும் என்பது. காங்கிரஸில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் இணைவது மட்டுமல்லாமல், அப்படி இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு ஜி.கே. மூப்பனார் தலைவராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் ராஜேஷ் பைலட்.

'சீதாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் தொடர்வது தற்கொலைக்கு சமம். தனது இடத்தைக் காங்கிரஸ் வலியப் போய் பாரதிய ஜனதா கட்சிக்கு விட்டுக் கொடுக்கிறது. இது தொடர்ந்தால், வருங்காலத்தில் காங்கிரஸ் ஒரு நாளும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். அதேபோல, தேவே கெளடா பிரதமராகத் தொடர்வது, தேசத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக முடியும். காங்கிரஸில் இணைந்து தலைமைப் பொறுப்பை ஏற்பதுடன், நீங்களே பிரதமராக வேண்டும்' - இதுதான் ராஜேஷ் பைலட் தனது கடிதத்தில் ஜி.கே. மூப்பனாருக்கு விடுத்திருந்த வேண்டுகோள்.

மூப்பனார் என்னிடம் தெரிவித்ததுபோல, ராஜேஷ் பைலட்டின் ஆலோசனை எளிதில் நடக்கக்கூடியதல்ல என்பது எனக்குப் புரிந்தது. மூப்பனார் காங்கிரஸில் மீண்டும் தமாகா-வை இணைக்கிறாரோ இல்லையோ, பிரதமர் தேவே கெளடாவின் தலைமை மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது என்பதை நான் அவரது பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.

நான் அலுவலகம் திரும்பியபோது எனக்கு வந்திருந்த தொலைபேசி அழைப்புகளில் ஒன்று, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். மார்கபந்துவினுடையது. இன்று அவர் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சோஷலிஸ்ட்டாகவும், வன்னியர் சமுதாயப் போராளியாகவும், குறிப்பிடத்தக்க வழக்குரைஞர்களில் ஒருவராகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இயங்கினார் அவர். அதிமுகவின் மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும் சில காலம் இருந்தார்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக ஜெயின் கமிஷன் விசாரணைக்காக ஜெயலலிதா தில்லி வர இருக்கும் நிலையில், அவரது தொலைபேசி அழைப்புக்குக் காரணம் இல்லாமல் இருக்காது என்று எனக்குத் தெரியும். நான் அழைத்தபோது மறுமுனையில் பதில் இல்லாததால், மீண்டும் அவரது அழைப்பு வருவதற்காகக் காத்திருந்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை.

கன்னாட் பிளேஸ் பகுதியில் 'கோவில்' என்கிற பெயரில் இயங்கி வந்த தென்னிந்திய உணவு விடுதிக்கு வந்திருந்தார்கள் சில தமிழக எம்.பி-க்கள். எனது அலுவலகம் அந்தப் பகுதியில் இருப்பது மார்கபந்துக்குத் தெரியும் என்பதால் அவர் என்னை அழைத்திருக்கிறார். மீண்டும் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அவர்களை சந்திக்க நான் 'கோவில்' உணவகத்துக்கு விரைந்தேன்.

சேடப்பட்டி முத்தையா, முன்னாள் எம்.பி. இரா. சாம்பசிவம் உள்ளிட்ட சிலரும் அவருடன் இருந்தனர். ஜெயலலிதா தில்லி வருவதற்கு முதல் நாளே, சில மூத்த தலைவர்கள் தில்லியில் அவரை வரவேற்பதற்காக வந்து காத்திருந்தனர். துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ். திருநாவுக்கரசும், மாநிலங்களவை உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பாவும் ஜெயலலிதாவுடன் வருவதாக மார்கபந்து தெரிவித்தார். ஜெயலலிதா, தில்லி ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் தங்க இருக்கிறார் என்ற செய்தியும் அவர் மூலம் கிடைத்தது.

'கோவில்' உணவு விடுதியில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அவர்களும் என்னுடன் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் என்னை சந்திக்க வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது.

தில்லி அரசியல் நிலவரம் குறித்து ஜெயலலிதா ஏதாவது கேள்வி எழுப்பினால், அது குறித்து முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் காரணம். மேலும், காங்கிரஸ் தரப்பில் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வதிலும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

அடுத்த நாள் விமானநிலையத்தில் வந்து இறங்கிய அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இவர்களிடம் கேட்டுத்தான் தில்லி அரசியல் நகர்வுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமே இல்லாமல் இருந்தார் என்பதுதான் நிஜம். பிரதமர் தேவே கெளடாவுடன் சந்திப்பை, அவரே ஏற்பாடு செய்திருந்தார்.

ஜெயின் கமிஷன் முன்பு சாட்சியளிக்க வந்தார் என்றாலும், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல சந்திப்புகளுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார் என்பது, அவரது கட்சித் தலைவர்களுக்கேகூட அவர் தில்லிக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அது மட்டுமல்ல, தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் தயாராகவே வந்திருந்தார் என்பதை நிருபர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் திட்டப்படி காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியையும், உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவையும் சந்திக்க முடியவில்லை. அவர்கள் இருவருமே தில்லியில் இல்லாததுதான் காரணம். ஆனால் திட்டமிட்டபடி ஜெயின் கமிஷனில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

ஜெயலலிதா சாட்சியம் அளிக்கிறார் என்பதால், ஜெயின் கமிஷன் விசாரணை நடக்கும் விஞ்ஞான் பவன் வளாகத்தில் அதிகமான பார்வையாளர்கள் காணப்பட்டனர். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும், அவர்களது எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. கொஞ்சம்கூடப் பதற்றமோ, தடுமாற்றமோ இல்லாமல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் ஜெயலலிதா பதிலளித்ததைப் பாராட்டாதவர்களே கிடையாது.

ஒரு வித்தியாசமான கேள்வியை எழுப்பினார் வாழப்பாடி ராமமூர்த்தி - 'சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி படுகொலையில் மூப்பனாருக்கும் தொடர்பிருக்குமோ என்று சந்தேகப்படுவதாக எந்த அடிப்படையில் கூறினீர்கள்?'

'1991 தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் கொலையில் திமுக மீது மூப்பனார் குற்றச்சாட்டுக்களைக் கூறினார். ஆனால், அதே திமுகவுடன் 1996-இல் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டார். அதனால், ராஜீவ் காந்தியைக் கொல்ல நடந்த சதியில் மூப்பனாருக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டது. அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்' என்கிற அவரது பதில், காங்கிரஸில் மீண்டும் தமாகா இணைந்துவிடாமல் இருப்பதற்காகவே கூறப்பட்டது என்று தோன்றியது.

ஜெயின் கமிஷன் விசாரணையைப் போலவே ஜெயலலிதாவின் தில்லி விஜயத்தின்போது, நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு, பிரதமர் தேவே கெளடாவுடனான அவரது சந்திப்பு. அவர்கள் இருவரும் சுமார் 35 நிமிடங்கள் தனியாகச் சந்தித்து உரையாடினார்கள். அவர்களது உரையாடல் கன்னடத்தில் நடந்தது என்று பிரதமர் அலுவலகத்தில் சொன்னார்கள். 

தமிழக அரசு தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க மறுக்கிறது என்பதும், நிதியமைச்சர் ப. சிதம்பரமும், திமுக தலைவர் கருணாநிதியும் தனக்கு எதிராகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்றும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார் என்றும் சொன்னார்கள். தன்னால் இயன்றவரை ஜெயலலிதாவுக்கு உதவுவதாகப் பிரதமர் தேவே கெளடா வாக்களித்திருப்பதாகவும், சில நம்பத்தகுந்தவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஜெயின் கமிஷனில் ஆஜராவதற்காக ஜெயலலிதா விஞ்ஞான் பவனுக்குச் சென்றபோதும், பிரதமரை சந்திக்கப் போனபோதும் ஏனைய நிருபர்களுடன் நானும் இருந்தேன். வந்த வேகத்திலேயே தனது வேலைகளை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பத் தயாராகிவிட்டார் ஜெயலலிதா. ஒருவேளை, முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அடுத்த நாள் தில்லி வருவதற்குள் சென்னை திரும்பிவிட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சென்னை திரும்புவதற்கு முன்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். இந்தியாவில் உள்ள முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தின் நிருபர்களும் ஒருவர் விடாமல் அங்கே ஆஜராகி இருந்தனர். ஆங்கில நாளேடுகளைவிட பல்வேறு மாநில மொழிப் பத்திரிகை நிருபர்கள்தான் ஜெயலலிதாவின் நிருபர் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

நான் அந்தக் கூட்டத்தில் சேராமல் சற்று விலகித் தனியே நின்று கொண்டிருந்தேன். நிருபர்களைச் சந்திக்க வந்த ஜெயலலிதாவின் பார்வை சட்டென என் மீது பதிந்தது; நிலைத்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை...!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com