இசை
'இசை என்பது ஓர் தெய்வீகமான அம்சம். இசையை ஒருவர் காப்பாற்றினால், இசை அவரைக் காப்பாற்றும்' என்கிறார் உமையாள்புரம் சிவராமன்.


'இசை என்பது ஓர் தெய்வீகமான அம்சம். இசையை ஒருவர் காப்பாற்றினால், இசை அவரைக் காப்பாற்றும்' என்கிறார் உமையாள்புரம் சிவராமன்.
சென்னையின் முக்கிய கலை, கலாசார அமைப்புகளில் ஒன்றான தி. நகர் கிருஷ்ணகான சபாவின் ஐம்பது ஆண்டு காலமாகச் செயலாளராக இருந்தவர் யக்ஞராமன். சபாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவரது நூற்றாண்டையொட்டி, கலை விழா அண்மையில் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அபிஷேக் ரகுராமின் குரலிசைக்கு மிருதங்கம் வாசித்தார் மூத்த மிருதங்க வித்வான் உமையாள்புரம்சிவராமன்.
கச்சேரி முடிந்ததும் எண்பத்து எட்டு வயதான வைஜெயந்திமாலா பாலி மெல்ல நடந்து, உமையாள்புரம் அருகே அமர்ந்து 'உங்கள் கைகளைக் கொடுங்கள்!' என்று பணிவுடன் சொல்லி ஆத்மார்த்தமான மரியாதையோடு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். பின்னர், 'நீங்கள் நந்தி பகவானின்அவதாரம்! ஆகவேதான் இத்தனை அற்புதமாக மிருதங்கம் வாசிக்கிறீர்கள்!' என்று வைஜெயந்திமாலா பாலி பாராட்டியபோது,ரசிகர்கள் வியந்தனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, உமையாள்புரம் சிவராமனுடன் பேசியபோது:
உங்களுக்கு 87 வயது. இத்தனை வயதிலும் இவ்வளவு அற்புதமாக, மகிழ்ச்சி கொப்பளிக்க உங்களால் எப்படி மிருதங்கம் வாசிக்க முடிகிறது?
ஒரு கலையைக் கற்றுகொள்ள வயது தடை இல்லையோ, அதுபோலவே கச்சேரி செய்வதற்கும் வயது தடையே இல்லை.
இசை என்பது ஓர் தெய்வீகமான அம்சம். இசையை ஒருவர் காப்பாற்றினால், இசை அவரைக் காப்பாற்றும். இன்று இந்த நிலைமையில் நான் மகிழ்ச்சியாகவும், மனத் திருப்தியோடும் இருக்கிறேன். இதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உண்டு.
இறைவன்அருள், பெற்றோர்- முன்னோர்களின் ஆசி, குருநாதர்கள் ஆசி ஆகியன மூன்று காரணங்கள். நான்காவது காஞ்சி பெரியவர், சிருங்கேரிப் பெரியவர், ஆண்டவன் சுவாமிகள், அகோபில மட ஜீயர், பகவான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், மாதா அமிர்தானந்தமயி ஆகிய தெய்வீக மாமனிதர்களின் அனுக்கிரகமாகும். ஐந்தாவதாக என்னை கச்சேரிகளுக்கு வாசிக்கச் செய்து, வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்த இசையுலக ஜாம்பவான்களின் ஆதரவாகும்.
பெரிய ஜாம்பவான்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்த நீங்கள், இளைய தலைமுறை இசைக் கலைஞர்களுக்கும் வாசிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த வித்வான்களுக்கு மிருதங்கம் வாசிக்கிறேன். அந்தக் காலத்து ஜாம்பவான்கள் எனக்கு நல்லாதரவு அளித்து, பல அனுபவங்களை வழங்கினர். இன்றைய இளைய தலைமுறை வித்வான்களும் தங்கள் திறமையால் ஜொலிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு என்னாலான பங்களிப்பை செய்கிறேன்.
தினமும் மிருதங்கம் வாசிக்கிறீர்களா?
அன்றாடப் பணிகளுக்கு ஏற்ப தினமும் மிருதங்கம் வாசிக்க நேரம் ஒதுக்குகிறேன். சில நாள்களில் இரண்டு மணி நேரம்கூட தொடர்ந்து வாசிப்பது உண்டு. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள்கூட வாசித்திருக்கிறேன்.
வைஜயந்திமாலாவின் நெகிழ்ச்சியான பாராட்டு குறித்து?
அற்புதமான பரதநாட்டியக் கலைஞர் வைஜயந்திமாலா. பாடகியும்கூட. என்னைவிட ஒரு வயது மூத்தவர். கலை உலகத்தைச் சேர்ந்த மூத்தச் சகோதரியான அவர் கச்சேரிக்கு வந்து, முழுமையாக ரசித்துவிட்டு, என் அருகே தரையில் அமர்ந்து பாராட்டியதில் மிகுந்த சந்தோஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...