புள்ளிகள்
1937 ஏப்ரல் 26இல் கண்காட்சி ஒன்றுக்காக, பிக்காசோ தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

மாயா பஜார்

மாயா பஜார்
1937 ஏப்ரல் 26இல் கண்காட்சி ஒன்றுக்காக, பிக்காசோ தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் நாஜி விமானப் படை குவர்னிகா நகர் மீது குண்டு வீசித் தாக்கியது. குண்டு வீச்சால் நிலைகுலைந்துப் போனார் பிக்காசோ. இந்தக் கொடுஞ்செயலைக் கண்டிக்க தனது கலையைப் பயன்படுத்த நினைத்தார். இதன்விளைவாக, பெருந்திரை ஓவியம் உலகப் புகழ் "குவர்னிகா'வாக வடிவெடுத்தது.
மும்பையின் புகழ்பெற்ற அலெக்சாண்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளிச் சுவரில் பழம்பெருமை வாய்ந்த சலவைக் கல் பதிக்கப்பட்டுள்ளது. 1880இல் நடைபெற்ற இரண்டாம் ஆப்கான் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் வாட்பை, இலாகி பக்ஸ் , சோன்னாக் தன்னாக் ஆகிய மூன்று வீரர்களுக்கு இன்றும் கம்பீரமாய் வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. 'மரணம் வரை எதிரியோடு போராடி நிலைமைகளைக் காத்த மாவீரர்கள்'' என்று அந்த வரலாற்றுச் சின்னம் கூறும் தகவல்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அவரோ பெண் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்தினார். 'ஆண்களுக்கு மட்டும் கல்வியை அளித்து, பெண்களுக்குக் கல்வியை மறுப்பது மாண்புடையதல்ல. இவ்வாறு செய்தால் உடலில் ஒரு பாதியை அலங்காரம் செய்து மறுபாதியை அலங்கோலம் செய்வது போன்றது இது'' என்று அவர் கூறினார். இதனை
நீதிநான் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர்
ஒதியர்க் கோதிடா தொழில் மெய்யினிற்
பாதியை யே அலங்கரித்துப் பாதியாய்
மீதினில் அணியின்றி விடுத்த லொக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார்.
பெண்கள் கல்வி கற்றவர்களாய் இருந்தால் வரவு செலவு கணக்குகளை எழுதி வைப்பார்கள். விலங்கு போல் வாழ்நாளை வீணாக்க மாட்டார்கள். கணவனுக்கு இணைபிரியாதத் துணையாக இருப்பார்கள் என்று மாயூரம் வேதநாயம் பிள்ளை கூறியதுண்டு.
தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
பிரான்ஸில் பிறந்த நாஸ்டர் டாம்ஸ் மருத்துவம் பயின்று சிறந்த மருத்துவராகத் திகழ்ந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த அவர் தனது மனைவி, பிள்ளைகளை அதே நோயால் பறிகொடுத்தார். "காப்பாற்ற முடியவில்லையே' என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. இத்தாலி, பிரான்ஸ் என அலைந்து திரிந்தார். அப்போது வருங்காலத்தைப் பற்றி கூறும் ஞானத்தைப் பெற்றார். 1555ஆம் ஆண்டில், அவர் வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பத்து நூல்களை எழுதினார். பின்னால் அவர் எழுதியவை உலகம் எங்கும் தொடர்ந்து அரங்கேறிவந்தது.
'உன் பெயர் என்னம்மா?'' என்று கேட்டார். எம்.ஆர்.ராதா . 'நான் தெய்வநாயகி'' என்றேன்.
'இது டிராமா.. சினிமாவுக்கு ஒத்துவராத ஓல்டு நேமா இருக்கு.. எடுத்த எடுப்பிலே "விஜயா' என்று வச்சிக்கோ?'' என்று பரிந்துரைத்தார்.
'பெரியவங்க சொல்லைத் தட்டக் கூடாது என்பதற்காக, அப்பா, அம்மா இனிஷியலை முன்னால் சேர்த்து கே.ஆர்.விஜயா ஆனேன்.''
நடிகை கே.ஆர்.விஜயா தனது பெயர்க் காரணம் குறித்து அவர் ஒருமுறை சொன்னது.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஒருமுறை லால் பகதூர் சாஸ்திரியும், கோவிந்த் வல்லபபந்தும் காரில் பயணம் செய்தனர். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருவரும் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
தகவலறிந்த ஜவஹர்லால் நேரு உடனே அந்த இடத்துக்கு வந்தார். 'பயங்கர விபத்தாக இருக்கிறதே'' என்றார் அதிர்ச்சியுடன் நேரு.
'சாதாரண விபத்துதான்'' என்றார் சாஸ்திரி. 'என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்'' என்றார் நேரு.
'ஆமாம். விபத்தில் நானோ கோவிந்த் வல்லபபந்த் மீது தூக்கி எறியப்பட்டேன். அதற்குப் பதிலாக அவர் என் மீது விழுந்திருந்தால், அதுவல்லவா பயங்கரமான விபத்தாக இருந்திருக்கும்'' என்றார் சாஸ்திரி. கோவிந்த் வல்லபபந்த் அதிகம் எடை கொண்டவர் என்பதால், சாஸ்திரி இவ்வாறு சொன்னார்.
த.சீ.பாலு, அத்திப்பட்டு.
"முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடல் அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும்'' என்று கேட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.
தொடர்ந்து அவர், 'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்தி சரவணா முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் ...'' என்று திரும்பத் திரும்ப டி.எம்.எஸ். வாசித்துப் பார்க்கிறார். 'எனக்கு புரியாமல் எப்படி பாடுவது. ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்தாலும் பொருள் புரியாவிட்டால் பாட மாட்டேன்'' என அங்கிருந்து டி.எம்.எஸ். புறப்பட்டார்.
அங்கிருந்த ஒருவர், 'இந்தப் பாடலுக்கு அர்த்தம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளைக் கேட்டால் புரியும்'' என்று குரல் கொடுத்தார்.
'அப்படியா?'' என்று டி.எம்.எஸ்.கேட்டுவிட்டு, வாரியார் வீட்டுக்கு உடனே புறப்பட்டு சென்றார். அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்ல முழுமையாகக் கேட்டறிந்து, "அருணகிரிநாதர்' படத்தின் பாடலை டி.எம்.எஸ். பாடினார்.
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
அதிக காலம் வயதானவராகவே நடித்த ஒரு நடிகர், தன் வாழ்நாளில் முதுமையை உணராமல் ஐம்பத்து ஆறு வயதிலேயே இறந்துவிட்டார். அந்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவர் 1949இல் "மனதேசம்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த "மாயா பஜார்' படத்தில் கடோத்கஜனாக நடித்திருக்கிறார். இதில் வரும் "கல்யாண சமையல் சாதம்' பாடலில் இவரது நடிப்பு இன்றும் தமிழக மக்களின் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது.
அ.சிட்டிபாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...