சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது

சாகசப் பயணம்!

அமெரிக்காவில் ஐ.டி.துறையில் பணியாற்றிய நாற்பத்து இரண்டு வயதான காயத்ரி நாகேஸ்வரன், தற்போது பெங்களூரில் மாணவர்களுக்கு யோகா, ப்ராணாயாமம் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பதினைந்து ஆண்டுகளாக இருந்துவருகிறார்.
Published on

அமெரிக்காவில் ஐ.டி.துறையில் பணியாற்றிய நாற்பத்து இரண்டு வயதான காயத்ரி நாகேஸ்வரன், தற்போது பெங்களூரில் மாணவர்களுக்கு யோகா, ப்ராணாயாமம் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பதினைந்து ஆண்டுகளாக இருந்துவருகிறார்.

இவர் அண்மையில் நேபாளத்தின் 'லுக்லா' என்ற ஊரில் இருந்து புறப்பட்டு, பதினைந்து நாள்கள் இமயமலையில் வெற்றிகரமாகப் பயணித்து எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாம் வரை சென்று திரும்பியிருக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனக்கு இமயமலையில் சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை உறவினர்கள், நண்பர்களோடு பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் பாராட்டினார்களே தவிர, உடன் பயணம் மேற்கொள்ளத் தயாராக இல்லை.

என் கணவர் பரத் சிவராமன், 'யோகா ஆசிரியையான நீ மலையேறும் பயிற்சி பெற்றால் இமயமலையில் ஏறுவது சிரமமாக இருக்காது. உன்னுடைய பாதுகாப்புதான் கவலையாக இருக்கிறது' என்று கூறினார்.

நேபாள நாட்டின் சுற்றுலாத் துறை சார்ந்த ஒரு நிறுவனம் எனக்குரிய பயண ஏற்பாடுகளைச் செய்துதரவும், உடன் வழிகாட்டி, சுமை தூக்கும் நபர்களை ஏற்பாடு செய்யவும் முன்வந்தது. அவர்களோடு பேசியவுடன் என் கணவர் பரத் சிவராமன் மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.

எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பேன். ஆனாலும், மலையேறுவதற்காக, இடுப்பு, கால் மூட்டுகள், கணுக்கால்களைப் பலப்படுத்த பயிற்சிகளை எடுத்தேன்.

இமயமலை ஏறுபவர்கள் எவரெஸ்ட் அடிவாரத்தில் உள்ள 'எவரெஸ்ட் பேஸ் கேம்ப்' வரை பயணம் செய்துவிட்டு, திரும்புவார்கள். அதற்கு மேலே சுமார் 20 கி.மீ. நடந்து சென்றால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துவிடலாம் என்றபோதிலும், அடிவார முகாமிலேயே சில நாள்கள் தங்கி பல்வகை சிறப்புப் பயிற்சிகள் பெற்ற மலையேறும் வீரர்களால் மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர்களோடு எவரெஸ்டை சென்றடைய முடியும். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு, 18 பேர் மட்டும் பயணிக்கக் கூடிய சிறு விமானத்தில் 45 நிமிடங்கள் பயணித்து கடல் மட்டத்தில் இருந்து 9,500 அடி உயரத்தில் இருக்கும் நேபாளத்தில் உள்ள அபாயகரமான லுக்லா விமான நிலையத்தில் போய் இறங்கினோம். விமான ஓடுதளத்தின் நீளமே 527 மீட்டர்தான். அதைத் தாண்டினால் பள்ளத்தாக்கு. இமயத்தில் மனித நடமாட்டத்துக்கு 160 கி.மீ. தள்ளி இருக்கிறது இந்த இடம்.

அங்கேதான் சாகசப் பயணத்துக்கான வழிகாட்டி சாகர், சுமை தூக்குபவர் நாகேந்திரா ஆகிய இருவரையும் சந்தித்தேன். அவர்களோடு நடக்கத் துவங்கி சில மணி நேரம் கீழ் நோக்கி நடந்து, 'பக்டிங்' என்ற இடத்தை அடைந்தோம். அங்கே 'டீ ஹவுஸ்' என்ற பெயரிலான சிறிய இடத்தில் தங்கினோம்.

தரைத்தளத்தில் சமையலறை, கதகதப்பான ஒரு ஹால், மேல்தளத்தில் சில தங்கும் அறைகள் கொண்டது அது. மாலை ஆறு மணிக்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாதம், வேகவைத்த உருளைக் கிழங்கை சாப்பிட்டுவிட்டு, ஒரு மணி நேரம் போல கதகதப்பான சூட்டை அனுபவித்துவிட்டு, அறைக்குப் போய், 'ஸ்லீப்பிங் பேக்' என்ற தூங்கும் உறைக்குள் தூங்கினேன்.

மறுநாள் காலை எழுந்து மீண்டும் நடைபயணம். 3,250 அடி ஏற்றம். ஒரு மலையில் இருந்து, இன்னொரு மலைக்குப் போக, கேபிள் பாலங்கள் அமைத்திருக்கின்றனர். நடக்கும்போது, பாலத்தின் கம்பிகள் ஆடும்போது, உடல் நடுங்கும். கடைசியில் 'நாம்சே பஜார்' என்ற இடத்தை அடைந்தபோது இரவு ஆகிவிட்டது. அங்கேயும் ஒரு டீ ஹவுஸில் தங்கினேன். அது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11,300 அடி உயரம். அங்கே காற்று மண்டலத்தில் வழக்கமான அளவுக்கு ஆக்சிஜன் இல்லாததை உணர முடிந்தது.

காலையில் பார்த்தால், திரும்பும் இடமெல்லாம் பனிபடர்ந்த மலை முகடுகள். அந்த அற்புதத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நடுவில் எறும்புகள்போல மனிதர்கள். அங்கே டென்சிங் ஷெர்பா பாரம்பரிய மையமும், இசையோடு மது அருந்தும் கூடமும் இருந்தன.

ஐந்தாம் நாள் 'அம்மாவின் நெக்லஸ்' என்ற பெயர் கொண்ட உலகிலேயே மிக அழகான மலை வழிப்பாதையில் நடந்து சென்றோம். நடக்க, நடக்க உயரம் அதிகரித்தது. கால்கள் சோர்வடைந்தன. 12,700 அடி உயரத்தில் புத்தர் ஆலயத்தைக் கண்டோம். அங்கே அமர்ந்து தியானம் செய்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, நடையைத் தொடர்ந்தோம். சிறிது நேரத்தில் மழை பெய்தது. மழையானாலும், வெயிலானாலும் ஒதுங்க இடம் கிடையாது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் நடந்து இரவு ஏழு மணிக்கு 'தபுசே' என்ற இடத்தை அடைந்தோம்.

அங்கிருந்த டீ ஹவுசில் எல்லாமே சூரியச் சக்தியில் இயங்குவதால், இரவு ஏழு மணிக்கெல்லாம் விளக்கை அணைத்து விடுகின்றனர். அங்கே மொபைல் போனை பயன்படுத்த முடியாதென்றாலும், போட்டோக்கள் எடுக்கலாம். ஆனால் மொபைல் போனை சார்ஜ் செய்ய ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். தண்ணீர் பாட்டில் விலை ஐநூறு ரூபாய். பர்ஸை எடுக்கும் முன்பாக ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும்.

ஆறாவது நாள் பயணத்தைத் தொடங்கியபோது சுற்றிலும் மரங்கள் ஏதுமின்றி புதர்கள்தான் இருந்தன.

14 ஆயிரம் அடி உயரத்தில் ஆக்சிஜன் மிகக் குறைவாகவே இருந்தது. மழையில் நனைந்தபடி நடந்து 'டிங்போசே' என்ற இடத்தில் இருந்த தங்கும் இடமான டீ ஹவுஸை அடைந்தபோது, அவர்கள் கொடுத்த லெமன் டீ தேவாமிருதமாக இருந்தது.

அடுத்த நாள் அங்கேயே தங்கி சிறு குன்றுகளில் ஏறி, இறங்கியும், மூச்சுப் பயிற்சி செய்தும், மேற்கொண்டு பயணிக்க என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். அங்கு வசித்த மனிதர்களைப் பார்த்தபோது , 'எப்படிதான் வாழ்கிறார்களோ?' என்று மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எட்டாவது நாள் நடக்கத் துவங்கியபோது, மழை கொட்டியது. அன்று 'நம் உயிர் இயற்கை, கடவுளின் கையில்' என்றார்கள். வழியில் ஏற்கெனவே பயணம் வந்தபோது இறந்துவிட்டவர்களின் சமாதிகளைக் கண்டோம். ஒரு வழியாக முன்னிரவுப் பொழுதில் 'லோபுசே' என்ற இடத்தை அடைந்து அங்கே இருந்த டீ ஹவுஸில் காலடி வைத்தபோது நடந்த களைப்பு மறைந்து மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஒன்பதாவது நாள் நான் எனது இலக்கான எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்திருக்க வேண்டும். ஆனால் கடவுளின் திட்டமோ வேறாக இருந்தது. இரவெல்லாம் கடும் பனி மழைப் பொழிவு. எங்கெங்கு காணினும் வெண்பனிதான். இடுப்பளவு பனியில் காலை எடுத்து வைத்தாலே வழுக்கியது. கடும் குளிர் வேறு. மூச்சு விட கஷ்டப்பட்டேன். ஆனாலும் நடைப்பயணம் தொடர்ந்தது.

சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 'கோரக் ஷேப்' என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து அடிவார முகம் இரண்டே கிலோ மீட்டர் தூரம்தான். டீ ஹவுஸில் மதிய உணவை முடித்துகொண்டு, பிற்பகலில் நடக்கலாம் என்று முடிவு செய்தோம். சாப்பிட்டு முடிக்கும்போது பனி மழை, பனிப்புயலாகி விட, அங்கேயே தங்கிவிட்டோம்.

அங்கே என்னைப் போல இன்னும் பத்து பயணிகள் வந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். மின்சாரம் இல்லாததால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. வெளியில் மைனஸ் ஆறு டிகிரி குளிர். சாதமும், வேகவைத்த உருளைக் கிழங்கும் சாப்பிட்டுவிட்டு, பதினோரு பேருமாக அங்கேயே அமர்ந்து சீட்டு விளையாடினோம். ஏற்கெனவே அத்தனை உயரத்தில் ஆக்சிஜன் குறைவு.

போதாகுறைக்கு அத்தனை பேரும் ஜன்னல் அடைக்கப்பட்ட ஒரே அறையில் வெகுநேரம் உட்கார்ந்துகொண்டு இருந்ததால் நிலைமை மேலும் சிக்கலானது. எங்கள் பதினோரு பேருடைய இந்த நிலைமை எங்கெங்கோ இருக்கும் எங்களது குடும்பத்தினருக்குத் தெரியாது.

'எல்லோரும் நல்லபடியாக எங்களை ஊர் கொண்டு போய் சேரப்பா' என்று பிரார்த்தனை செய்துவிட்டு, தூங்கப் போனோம்.

மறுநாள் காலை எழுந்தபோது, இரவெல்லாம் கடும் பனி மழை காரணமாக எங்கள் டீ ஹவுஸைச் சுற்றி முதல் தளம் வரை பனி மூடி எங்களை சிறை வைத்திருந்தது. ஊழியர்கள் புகைப்போக்கி வழியாக வெளியில் சென்று நுழைவாயில் பகுதியில் இருந்த பனிப்பகுதிகளை அகற்றிய பிறகுதான் கதவையே திறக்க முடிந்தது. அவ்வப்போது எங்கள் அனைவருக்கும் உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதித்தனர்.

எனக்கு எப்போதுமே 98 என்ற அளவில் இருந்தது. அதற்கு ஒரே காரணம் நான் பல்லாண்டுகளாக செய்து வரும் யோகா, தியானம், பிராணாயாமப் பயிற்சிகள்தான். அப்போது, மற்றவர்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தேன். உடனடியாகப் பயன் பெற்று, எனக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.

பன்னிரெண்டாம் நாள் காலை எழுந்தபோது, பனி, மழை ஏதுமின்றி வானம் பளிச்சென்று இருந்தது. சுற்றிலும் அழகிய மலைகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. புத்துணர்வுடன் புறப்பட்டு நடந்து சென்று எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தபோது, வானத்தில் பறப்பது போல இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தின் மீதே காலடி வைத்தது போல மனசு துள்ளியது.

அமைதியாக சிறிது நேரம் கண்களை மூடி இருந்தேன். அகலக் கண் விரித்து சுற்றிலும் விரிந்து படர்ந்திருந்த பனி மலைகளைக் கண்டேன். எல்லாம் நிஜம்தானா? என்று என்னை நானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். எனது லட்சியப் பயணம் பூர்த்தி அடைந்த சந்தோஷத்தில் விறுவிறு என்று நடந்து மீண்டும் டீ ஹவுஸை அடைந்தேன்.

திரும்பும்போதும் நான் நடந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால், கடும் பனிப் புயல் பாதை சரியில்லாததால், எங்களை அழைத்துச் செல்ல ஒரு ஹெலிகாப்டர் வந்தது. கடந்த சில நாள்களில் நான் நடந்து சென்ற பாதைகளை வானத்தில் இருந்து ஜன்னல் வழியே பார்த்தபடியே இரண்டு மணி நேரம் பயணித்து காத்மாண்டு திரும்பியதும் ஒரு புது அனுபவம்தான். என் பயணம் முழுக்க உடன்வந்தோர் காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது' என்கிறார் காயத்ரி நாகேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com