குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மைக் டைசன், பத்தொன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கினார்.
2005-க்கு பிறகு மைக் டைசன் பங்கு பெறும் போட்டி என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஐம்பத்து எட்டு வயதில் குத்துச்சண்டை போட்டி என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆனால், மைக் டைசன் அதை சாதித்துள்ளார்.
மைக் டைசன்- ஜேக் பால் இடையிலான இந்தப் போட்டி அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. ஐம்பத்து எட்டு வயது மைக் டைசனுக்கும், இருபத்து ஏழு வயது ஜேக் பாலுக்கும் வயது இடைவெளி அதிகமாகவே இருந்தது.
டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள ஸ்டேடியத்தில் 80 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. ஒரு டிக்கெட் விலை 55 டாலர் முதல் 5 ஆயிரம் டாலர் வரை விற்பனை செய்யப்பட்டது . இந்திய ரூபாய் மதிப்பின்படி 4,600 ரூபாய் முதல் ரூபாய் 4.22 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.
சிறப்பு டிக்கெட் 17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட் வாங்கியவர்களுக்கு போட்டி நடக்கும் இடத்துக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டது. போட்டி தொடங்கும்போது எடை சரிபார்ப்பின்போது, பக்கத்தில் நின்று கொள்ளலாம். போட்டி முடிந்தவுடன் மைக் டைசன், ஜேக் பாலுடன் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அவர்களுடைய அறையில் போய் பேசலாம்.
போட்டியை உலகம் எங்கும் நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு செய்தது. 60 மில்லியன் குடும்பங்கள் நெட்பிளிக்ஸில் குத்துச்சண்டை போட்டியை பார்த்திருக்கிறார்கள். போட்டியில் மைக் டைசன் தோல்வியடைந்தாலும் 169 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 338 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது.