'மொழிபெயர்ப்புக்குத் தேவையான அடிப்படை பண்புகள் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, விடாமுயற்சிதான். இரு மொழிப் புலமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்' என்கிறார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், கனடாவில் வசித்துவருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிவரும் அவர், தற்போது ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். அவரது 'பூனை மனிதன்' சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.
அவருடன் ஓர் சந்திப்பு:
திடீரென்று மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கு எது தூண்டுகோலாக இருந்தது ?
நான் ஒருமுறை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோவை சந்தித்தபோது, கில்லர் பரிசு தேர்வுக் குழுவில் நடுவராகப் பணியாற்றியதைக் கேட்டேன்.
'தேர்வுக்கு வந்த 95 நாவல்களையும் படித்தீர்களா?' என்றேன். அவர் முழுமையாகப் படித்ததாகச் சொன்னார்.
'இதற்கான நேரத்தை உங்கள் எழுத்து வேலையில் இருந்து திருடியிருப்பீர்கள்' என்றேன். அவர், 'ஆமாம்' என்றுகூறிவிட்டு, 'என் வாசகர்களுக்கும், மக்களுக்கும் ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும். அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் இது' என்றார்.
இந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நான் அப்படியே செய்கிறேன்.
'பூனை மனிதன்' குறித்து..?
வெளிநாட்டுச் சிறுகதைகளை நூலாசிரியர்களிடம் முறையாக அனுமதி பெற்று, மொழிபெயர்த்திருக்கிறேன். அவர்களை டெலிபோனிலோ, மின்னஞ்சலிலோ தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்திருக்கிறேன். சன்மானமும் அளித்திருக்கிறேன். அந்தச் சிறுகதை எழுத நேர்ந்த சந்தர்ப்பத்தைப் பற்றியும், அதற்கான உந்துதல் கொடுத்த சம்பவம் பற்றியும் அவர்களிடம், பேசி அறிந்தேன். நூலாசிரியர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அற்புதமான அனுபவம். அபூர்வமான தொகுப்பு.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு நிகர் படைப்பு அனுபவம் என்பது எப்படி?
மொழிபெயர்ப்பு என்பது ஒரு நிகர் படைப்பு என்பதில் சந்தேகமேயில்லை. சொந்தப் படைப்பைவிட மொழிபெயர்ப்பு அதிக நேரத்தை எடுக்கும். மொழிபெயர்ப்பு செய்து முடித்தவுடன் பலமுறை அதை வாசித்துப் பார்த்து திருத்தம் செய்ய வேண்டும். மூல மொழியில் படிக்கும்போது கிடைத்த அதே இன்பம், மன நிறைவு, மனக்குலைவு மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறதா என்பதை கூர்ந்து நோக்கவேண்டும்.
சரியான வார்த்தைகள் அந்தந்த இடத்தில் விழுகின்றனவா என்பதையும் கவனிப்பது அவசியம். சமயத்தில் சில இடங்கள் துல்லியமாக அமையாவிட்டால், ஆசிரியரைத் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்க வேண்டியும் இருக்கும். எப்படியெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் மூலப் படைப்பு கொடுத்த அதே இன்பத்தை, அமைதியின்மையை, வியப்பை, நிறைவை மொழிபெயர்ப்பும் கொடுக்கிறதா? என்பதுதான் முக்கியம். இப்படியெல்லாம் பார்க்கையில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு நிகர் படைப்புதான்.
எத்தனைதான் மொழிபெயர்ப்பு திருப்தி அளித்தாலும் சொந்தப் படைப்பு கொடுக்கும் மனநிறைவை மொழிபெயர்ப்பு கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.
ரஷிய எழுத்தாளர் நபகோவ் ரஷிய மொழியிலும், ஆங்கிலத்திலும் அதீத புலமையைப் பெற்றவர். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவுடன் இவர் ஆங்கிலத்தில் 'லொலிரா' என்னும் நாவலை எழுதினார். அதே நாவலை ரஷிய மொழியில் மொழிபெயர்க்க முயன்றபோது, இவரால் முடியவில்லை.
ஒரு மொழிபெயர்ப்பின் முழுமையையும் திருப்தியையும் யார் அளவிடுவது?
மொழிபெயர்ப்பு மூலப் படைப்பைத் தொடுவதில்லை. முழுமையான திருப்தி அளிக்கும் மொழிபெயர்ப்பு உலகத்தில் அபூர்வம். மிக அருகில் வரும். ஆனால் தொடாது. மொழிபெயர்ப்பின் தரத்தை அளவிடுவதற்குச் சரியான ஆள் மொழிபெயர்ப்பாளர்தான். ஏனென்றால் அவர்தான் இருமொழியிலும் புலமை பெற்றவர்.
சாதாரணமாகத் தோன்றும் சில மொழிபெயர்ப்புக் கதைகளைப் பார்க்கும்போது, தமிழில் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படாத சிறந்தக் கதைகள் இருக்கின்றன, அவை ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று வருத்தப்பட வைக்கின்றன.
மிகச் சாதாரண கதைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு எங்களுக்குக் கிடைக்கின்றன.
முக்கியமான காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்க முன்வருவதில்லை என்பதேயாகும். கடந்த சில வருடங்களாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
2025 ஜனவரி 19-இல் 30 மொழிபெயர்ப்பு நூல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 'காலச்சுவடு' பதிப்பகமும் தரமான மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வருகிறது. அவற்றிலே பல படைப்புகள் உலக அளவிலான விருதுகளைப் பெற்றிருக்கின்றன. முக்கியமாக, பெருமாள்முருகனுடைய 'ஃபயர் பேர்ட்' நாவல் கவனம் பெற்றது. ஜெயமோகனுடைய இரண்டு நூல்கள் ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிடப்
படுகின்றன. பிரியம்வதா ராம்குமாரும், சுசித்ரா ராமச்சந்திரனும் இணைந்து 'மொழி' என்ற அமைப்பைத் தொடங்கி, பல படைப்புகளை ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மொழிபெயர்ப்புப் பணியில் உங்கள் உழைப்புக்கான பெயர் கிடைக்கிறதா?
மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு நாட்டிலும் சிலை வைப்பது கிடையாது. அவர் கவனிக்கப்படுவதே இல்லை. சபையில் மரியாதையும் கிடையாது. அவர்களுடைய அர்ப்பணிப்பை ஒருவரும் பாராட்டுவதில்லை.
ஓர்ஹான் பாமுக் என்பவர் துருக்கிய மொழியில் ஒரு நாவல் எழுதினார். அதன் ஆங்கில மொழியாக்கத்தின் பெயர் 'மை நேம் இஸ் ரெட்'. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எர்டாக் கோக்நர். இந்த நாவலுக்கு ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள நோபல் பரிசு 2006-இல் வழங்கப்பட்டது.
நான் எர்டாக் கோக்நரை ஒருமுறை நேர்காணல் செய்தபோது, அந்தப் பரிசுத் தொகையில் மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு பங்கும் இல்லை என்று அறிந்தபோது அதிர்ந்தேன்.
ஆனால், கோக்நர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு ஓர்ஹான் பாமுக் ஒருமுறை வருகை தந்து மேடையில் பேசும்போது, 'கோக்நரின் ஆங்கிலம் உயர்வாக இருந்தது' என்று பாராட்டினார். இதுவே கோக்நருக்கு மிகப் பெரிய கிடைத்த விருது.
மொழிபெயர்ப்புக்கான அடிப்படை இலக்கணம், பண்புகள் எவை?
இங்கிலாந்தில் கான்ஸ்டான்ஸ் கார்நேட் என்று பெண்மணி, தாதியாக வேலை பார்த்தார். பின்னர், அவருக்கு சிறிய நூலகத்தில் நூலகராக வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தச் சமயத்தில் ரஷிய மொழியைக் கற்றார். டால்ஸ்டாயின் படைப்புகள் அவருக்கு பிடிக்கும்.
அந்தக் காலத்திலேயே, இங்கிலாந்தில் இருந்து ரஷியாவுக்கு பயணம் செய்து டால்ஸ்டாயை இவர் சந்தித்தார். அதன் பின்னர் ரஷிய இலக்கியங்களைத் தானாக முன்வந்து மொழிபெயர்க்க ஆரம்பித்தார். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செக்கோவ், துர்கனேவ் என்று அவர் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. 71 ரஷிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
'புல்தரையில் மேஜையில் அமர்ந்து கவனம் சிதறாமல் தட்டச்சு செய்வார். அவர் அன்றைய நாள் தட்டச்சு செய்த தாள்கள் எல்லாம் அவர் காலடியில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும்' என்று ஒருவர் பதிவு செய்திருக்கிறார். ரஷிய இலக்கியம், உலகைச் சென்று அடைவதற்கு இவர்தான் முக்கிய காரணம்.
தமிழில் எம்.ஏ. சுசீலா என்பவர் தஸ்தாயெவ்ஸ்கியின் 'அசடன்', 'குற்றமும் தண்டனையும்', 'வெண்ணிற இரவுகள்' என்று மொழிபெயர்த்தவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டாடுவது இல்லை.
மொழிபெயர்ப்புக்குத் தேவையா அடிப்படை பண்புகள் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, விடாமுயற்சிதான். மொழிபுலமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
எழுத்தாளர்களுடனான அனுபவங்கள்..?
மொழிபெயர்ப்பில் எனக்கு கிடைத்த சன்மானம் பலவிதமான எழுத்தாளர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள்தான். அவை மகிழ்ச்சியாக, வேடிக்கையாக, சிந்திக்க வைக்கக் கூடியவையாக இருந்தன. சில அனுபவங்கள் கசப்பாகவும் இருந்தன.
கிரே வூல்ஃப் என்பவருக்கு அவருடைய சிறுகதை ஒன்றை மொழிபெயர்க்க அனுமதி கேட்டு கடிதம் எழுதினேன். ஒரு ஆண்டுக்குப் பின்னர் அவர் அளித்த பதிலில், 'நான் உங்கள் விவரங்களை இணையத்தில் தேடினேன். நீங்கள் மதிப்புமிக்க எழுத்தாளர், அத்துடன் மொழிபெயர்ப்பாளர். உங்களைச் சரியாக நடத்தவில்லை. என்னை மன்னிக்கவும்.
மொழிபெயர்ப்பதற்கு என் சம்மதத்தை அளிக்கிறேன்' என்றிருந்தது. பதில் தாமதமாக வந்ததால் 'பூனை மனிதன்' தொகுப்பில் அவருடைய கதையின் மொழிபெயர்ப்பு இடம் பெறவில்லை.
இன்னொருவர் அனுமதி தரவே இல்லை. காரணமும் சொல்லவில்லை. வேறொரு எழுத்தாளரோ, 'இந்த மொழிபெயர்ப்பு இணையத்தில் வெளியாகும்பட்சத்தில் அது ஒரு வருடத்துக்கு மேல் ஓடக் கூடாது' என்றார். இது எனக்குப் புரியவே இல்லை.
ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்களும் சன்மானம் எவ்வளவு என்பதில் ஆர்வமாய் இருந்தனர். அனுமதி கேட்கும்போது, ' தமிழ் தொன்மையான மொழி. உலகத்தில் 9 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். உங்கள் மொழிபெயர்ப்பு பெரிய வாசகர் கூட்டத்தை சென்றடையும் வாய்ப்பு உள்ளது' என்றெல்லாம் விளக்கியிருப்பேன்.
ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர், 'நீங்கள் எப்போதாவாவது ஜெர்மனி வந்தால் என் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்' என்றார். ஆனால் அவர் தனது வீட்டு முகவரியை அளிக்க மறந்துவிட்டார்.
இன்னொரு எழுத்தாளரின் முகவரோ, 'மொழிபெயர்ப்பை சரிபார்த்தவுடன் பிரசுரிக்க அனுமதி தரமுடியும்' என்று எழுதினார். அமெரிக்காவில் இருந்த முகவரிடம், 'உங்களுக்கு தமிழ் தெரியுமா?' என்றேன். அவர், 'தெரியாது. ஆனால் நல்ல ஏற்பாடுகள் உள்ளன' என்றார். நானும் தமிழ் மொழிபெயர்ப்பை அவருக்கு அனுப்பிவைத்தேன்.
அமெரிக்காவில் அவர் என்னுடைய மொழிபெயர்ப்பை சரிபார்க்க, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரைப் பார்த்திருக்கலாம். இதனிலும் கீழான சிறுமை எனக்கு வாழ்நாளில் கிடைத்ததில்லை. மொழிபெயர்ப்பைச் சரிபார்த்த ஒருவர் 'கல்லீரல் என்றால் அது என்ன மாதிரியான கல்?' என்றாரே பார்க்கலாம். இன்னும் பல சுவாரசியமான சம்பவங்கள் உண்டு. இதுவே பெரிய சன்மானம்தானே!
- அருள்செல்வன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.