குகை வீடு..!

கோயம்புத்தூரில் 1,450 சதுர அடியில் 'குகை' போன்று, அதே நேரத்தில் மாறிவிட்ட காலநிலைக்கு ஏற்ற வகையில் பண்ணை வீடு அமைந்துள்ளது.
குகை வீடு..!
Updated on
2 min read

கோயம்புத்தூரில் 1,450 சதுர அடியில் 'குகை' போன்று, அதே நேரத்தில் மாறிவிட்ட காலநிலைக்கு ஏற்ற வகையில் பண்ணை வீடு அமைந்துள்ளது. வித்தியாசமான புதுமையான வடிவமைப்பும், கலைநயமிக்க உள்கட்டுமானமும் இந்த வீட்டைப் பார்ப்பவர்களைக் கவர்கிறது.

இந்த வீட்டை உருவாக்கிய மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் 'எர்த்ஸ்கேப் ஸ்டுடியோ' நிறுவனர் பேச்சிமுத்து கென்னடியிடம் பேசியபோது:

'இந்தக் குகை வீடு அமைய அகமதாபாத்தில் அமைந்திருக்கும் ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் கலைக்கூடமான 'அம்தாவத் நி குஃபா' வின் கட்டட அமைப்பே முன்மாதிரியாக அமைந்தது. அதுபோன்ற வீட்டை கட்ட வேண்டும் என்ற கனவும் நிறைவேறியது.

புவியின் அடியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் குவிமாட கூரை மட்டுமே வெளியில் தெரியும். சில யானைகள் ஒன்றாக உறங்குவது போலத் தோன்றும். படிகளில் இறங்கினால்தான் இந்த வீட்டுக்குச் செல்ல முடியும். உள்ளே சென்றால் வெப்பமே தெரியாது. எங்கும் குளுமை. வீட்டுக்குள் கலைப்படைப்புகள், சுவரோவியங்கள் அலங்கரிக்கும்.

குகை வீடு வேலைகளைத் தொடங்கும் முன், அமெரிக்காவில் டைஸ்டே என்பவர் தூண்களைத் தனியாகக் கட்டாமல் செங்கல்களைக் கொண்டு கட்டிய உறுதியான கட்டடத்தை ஆய்வு செய்தோம். அவர் கட்டடக் கலைஞர்கள் ஒதுக்கிய பழைய மரங்களைக் கொண்டு கதவுகள், அலமாரிகளைச் செய்திருந்தார். நாங்களும் அதே பாணியைப் பின்பற்றினோம்.

களிமண் வைத்து கட்டியது போன்று இறுதியில் குகை வீட்டை முடித்தோம். உள்ளேயிருந்து பார்த்தால் வேறு கிரகவாசியின் வீட்டில் இருக்கிறோமோ? என்று தோன்றும். வெளியே உள்ள வெப்பநிலையைவிட குகை வீட்டினுள் 5 டிகிரி முதல் 6 டிகிரி வரை குறைவாக இருக்கும். களிமண், சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தி சுவர்களில் மெழுகியிருப்பதால் வெப்பத்தை விரட்டி குளுமையான சூழலை கொண்டு வர முடிந்தது. காங்கிரீட் கலவையை மிகக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளோம்.

குகை வீட்டின் உள்ளே வளைவுகள் அதிகமாகக் காணலாம். வரவேற்பு அறையும் தடபுடலாக அமைத்தோம். பாரம்பரிய தென்னிந்திய வீடுகளில் காணப்படும் 'வீட்டுக்குள் முற்றம்' வசதியையும் சேர்த்துள்ளோம். அங்கு அமர்ந்து சாளரங்கள் வழியாக வீட்டைச் சுற்றியிருக்கும் தென்னை, பனை மரங்களைக் காணலாம்.

சாளரங்களில் கண்ணாடி பொருத்தியிருப்பதால் இயற்கையான வெளிச்சம் உள்ளே வரும். விளக்குகளை இரவு நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம். காற்றோட்டத்துக்காக புகைபோக்கியைப் போல குட்டி கோபுரங்களை கூரையின் மீது நிறுவியுள்ளோம். அவை கட்டடத்துக்கான கம்பீரத்தைக் கூட்டுகிறது. அதனால் வெளிக் காற்று தங்கு தடை இல்லாமல் வந்து போகும். கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விதமாக இந்தக் குகை வீட்டை வித்தியாசமாகக் கட்டி முடித்துள்ளோம்' என்கிறார் பேச்சிமுத்து கென்னடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com