

''டேய்... இது சரிபட்டு வருமாடா?'' என்று போனில் ரகுவிடம் பாலு கேட்டான்.
''கண்டிப்பா வரும்பா... நமக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு... சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரெண்டு கோடி ரூபாய் வரும்... நான் அந்த தாத்தா போனதும் வித்துடுவேன். உனக்கு அம்பது லட்சம் ரூபாய் சுளையா தர்றேன்... ஆனா, இதுக்கு உன் மனைவி ஒத்துக்கணும்...'' என்று கெஞ்சினான் ரகு.
''சரி... எனக்கும் பணத்தேவைதான். வீணாகிட்ட கேட்டுப் பாக்கறேன். சரின்னு சொல்வாளோ இல்ல... நீ எல்லாம் ஒரு ஆம்பளையான்னு கேப்பாளோ...'' என்று சொல்லி விட்டு பாலு செல்போனை ஆஃப் செய்தான்.
விஷயம் இதுதான்.
ரகு கல்யாணமாகாதவன். அப்பா, அம்மாவை ஒரு விபத்தில் பறிகொடுத்தவன். இந்த நிலையில் தாய் வழி தாத்தா, எப்படியோ ரகுவின் நம்பரை தேடிப்பிடித்து திடீரென்று அழைத்து போன் செய்திருந்தார்.
ரகுவின் அம்மா, ஜாதி மாறி திருமணம் செய்து, ஊரைவிட்டு ஓடி வந்ததால் மகள் உறவை அறுத்துவிட்டு, சுமார் முப்பது வருடங்கள் கோபமாகவே இருந்தார். இப்போது அவர் ரகுவிடம், ''எனக்கு இப்பதான் புத்தி வந்திருக்கு... நான் முடியாம ஆஸ்பத்திரியில் இருக்கேன்... பிழைக்க வாய்ப்பில்லை. என் சொத்தை, உன் பேர்ல மாத்தி எழுதணும்... என் வம்சம் வழிவழியா தொடரணும்... உடனே நீ உன் மனைவியோட வா!'' என்று கூறினார். 'தாத்தா எனக்குக் கல்யாணம் ஆகலே...' என்று சொல்ல வந்த ரகு, 'எங்கே உண்மையைக் கூறினால் சொத்து கிடைக்காதோ' என்று பயத்தில், ''சரி...'' என்று ஒத்துக் கொண்டான். பிறகுதான் பாலுவிடம் உதவி கேட்டான்.
பாலு தன் மனைவியிடம் பயம் மற்றும் கூச்சத்தோடு பேச ஆரம்பித்தான்.
''வீணா...''
''ம்... என்ன சொல்லுங்க?''
''வந்து... நாம ஏதோ இழுத்துப்புடிச்சு... வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருக்கோம்தானே?''
''ஆமாம்... எல்லாம் நம்ப தலையெழுத்து!''
''இப்ப அது மாறப் போகுது... அதுக்கு நீ
மனசு வைக்கணும்...''
வீணா, கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
''என்ன பாக்கற... நீ சரின்னா, ஒரே மாசத்துல சுளையா அம்பது லட்சம் நமக்குக் கிடைக்கும்!''
''அம்பது லட்சம் ரூபாயா...'' என்று வாயைப் பிளந்தாள் வீணா.
''ஆமா... இந்த வாடகை வீட்ட விலைக்கே வாங்கிடலாம். அப்பறம் நீ ஆசைப்பட்ட அந்த நெக்லஸ்... அப்பறம் நீ நினைச்சபடி ஒரு பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம்... குழந்தைய நல்ல ஸ்கூல்ல சேர்க்கலாம்.''
மனைவியின் ஆசைத்தீயை எண்ணெய் பேச்சால் தூண்டிவிட்டான் பாலு.
''சரிங்க... என்ன செய்யணும்?''
''ம்... வந்து உனக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்னு சொல்லிடு... ஆனா, தப்பா நினைக்கக் கூடாது!''
''ஐயோ... விஷயத்தைச் சொல்லுங்க...''
''வந்து... ரகு பத்தி என்ன நினைக்கற?''
''ம்... உங்களோட ஃப்ரெண்ட் நல்லவர்தான். சரி... நீங்க விஷயத்தைச் சொல்லுங்க!''
''பாவம், அவனுக்கு ஒரு பிரச்னை... என்கிட்டே உதவி கேட்டான்...''
''கடவுளே... நமக்கு ஜாக்பாட்னு சொன்னீங்க... இப்ப எதுக்கு ரகு பத்தி பேசணும்?'' என்று வீணா கேட்டாள்.
''பொறு வீணா... அவன் மூலமாத்தான் நமக்கு இந்தப் பணம் கிடைக்கப் போகுது... அதான், நீ கொஞ்சம் மனசு வைக்கணும்.''
''புரியலீங்க... நான் என்ன செய்யணும்?''
கேட்ட வீணாவிடம், ரகுவின் தாத்தா விஷயம் பற்றிக் கூறி, கடைசியாக, ''வந்து... நாளைக்கே அவன் ஊருக்குப் போகணும். அதான், நீ ஒரு ரெண்டு நாள் அவனுக்கு... மனைவியா...ந..டி..க்..க..ணும்'' என்று மென்று முழுங்கி ஒருவாறு சொன்னான் பாலு.
வீணாவின் முகம் மாறியது. வெறுப்பும், கோபமும் கொஞ்சம் வெளிப்பட்டது.
''இதோ பாரு... உனக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம். நான் கூட... 'நீ ஏதாவது துணை நடிகை யாராவது கிடைச்சா... ஒரு ஏஜென்ட் மூலமா நடிக்கக் கூட்டிக்கிட்டுப் போ'ன்னு சொன்னேன். ஆனா, 'அதுக்கு டைம் இல்ல... நாளைக்கே ஊருக்குப் போகணும்'னு சொன்னான். 'சிஸ்டர் ஒத்துகிட்டா இந்த ஜாக்பாட் கிடைக்கும்'னு சொன்னான். லேட்டானா... தாத்தா மண்டையப் போட்டா... சொத்து இவன் பேருக்கு வர்றது சந்தேகம்தான்.''
பாலு வியர்த்தபடி சொன்னான்.
''சிஸ்டர்னு சொல்லி, எப்படி ஒய்ஃபா நடிக்க ரகு கூப்பிடறாரு? நடிப்புன்னாகூட இத நினைச்சுப் பாத்தாலே அருவருப்பா இருக்கே? ஆனால், ரகு நல்லவர். அவர் உண்மையான பேரன்தான்... சொத்து அவருக்குத்தான் வரவேண்டும். கண்ணியமாகவே இதுவரை பழகி வருகிறார். புளிப்பு என்று சொன்னால் வாய் புளிக்கவா செய்யும்? நமது பணத்தேவைக்கு... ரெண்டு நாள் நடிப்பது பெரிய விஷயமில்லை...''
தலைகுனிந்து அமைதியாக இருந்த வீணாவிடம், ஏதும் பேசாமல், பாலு பயந்தபடி அமைதியாக இருந்தான்.
நல்லவேளை... கத்தி, கூப்பாடு போடவில்லை என்பதே, அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வீணா மெதுவாக தலை நிமிர்த்தி பாலுவைப் பார்த்தாள்.
'இது ஒரு பிழைப்பா...' என்று கேட்பது போல் இருந்தது. அதே நேரம் வீடு, நகை, பார்லர் என்ற கனவு நனவாகப் போவதை நினைத்து கொஞ்சம் மகிழ்ச்சியும் வந்தது.
''சரிங்க... ஆனா, ஒரு கண்டிஷன்... ஊருக்கு நீங்களும் வரணும்!'' வீணா சொல்ல, துள்ளிக் குதித்தான் பாலு.''
''நமக்கு ஜாக்பாட் நிச்சயம் வீணா... ரகு இந்த உதவிய மறக்கவே மாட்டான். நீ எதுக்கும் கவலைப்படாத... நான் உங்க கூட கண்டிப்பா வர்றேன்...'' என்று சொல்லி, உடனே ரகுவை போனில் தொடர்பு கொண்டான்.
அடுத்த முப்பது நிமிடத்தில் ரகு, பாலுவின் வீட்டில், ''ரொம்ப நன்றி சிஸ்டர். நாம திருடல... கொள்ளையடிக்கல... ஒரு சின்ன பொய்தான் சொல்லப் போறோம்... பாலு கண்டிப்பா கூடவே இருப்பான்...'' என்று சொல்லிவிட்டு, ரெண்டு லட்சம் ரூபாயை பாலுவிடம் கொடுத்தான்.
''ஏதுடா... பணம்?'' என்று பாலு கேட்டான்.
''என் சேவிங்ஸ்ல இருந்தது. எடுத்தேன். நீங்க நல்ல ட்ரஸ் வாங்கிக்குங்க. ஒரு கோல்டு செயினும் வாங்கிக் கொடு. பாக்கறதுக்கு நாங்க ரிச்சா தெரியணும். சொத்துக்கு அலையற மாதிரி தெரியக்கூடாது. நான் காலையில பத்து மணிக்கு ஒரு காரோட வர்றேன்!'' என்று சொல்லி விட்டு விடைபெற்றான் ரகு. 'இனி நானும் ஒரு கோடீஸ்வரன்... என்ற எண்ணமே அவனை உற்சாகப்படுத்தியது.
மறுநாள் மாலை... எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தது. ரகு, பாலு, வீணா மற்றும் குழந்தையுடன் அனைவரும் தஞ்சைக்கு அருகிலுள்ள கிராமுமில்லாத நகரமுமில்லாத அறிவூர் என்ற ஊரில், தாத்தாவின் வீட்டை அடைந்தனர். பாலு காரை ஓட்டி வந்தான்.
தாத்தா உடல் மெலிந்து சக்தியற்று காணப்பட்டார். ரகுவையும், வீணாவையும் கட்டிப்
பிடித்து அழுதார். குழந்தையை வாஞ்சையோடு முத்தமிட்டு மெதுவாகப் பேசினார். மறுநாள் ரிஜிஸ்தாரர் வீட்டுக்கே வருவதாகவும், சொத்துப் பரிமாற்றம் நடக்கும் என்றும் சொன்னார். வேலைக்காரன் மாணிக்கம் என்பவர் ரகுவிடம் தனியாக விஷயத்தைச் சொன்னார்.
''ஐயா... ஆஸ்பத்திரில தெளிவா சொல்லிட்டாங்க. ஐயாவுக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்காம். பாட்டில் ரத்தமும் உடம்புல ஏற மாட்டேங்குதாம். அதிகமா போனா ஒரு வாரம் தாங்கும்னு சொன்னாங்க. அதான் நாளைக்கே உங்க பேர்ல ரிஜிஸ்தர் நடக்கப் போவுது. சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துத் தூங்குங்க. உங்களுக்கும் அம்மாவுக்கும் அந்த ரூம். உங்க டிரைவர் பாலுவுக்கு வெளில ஒரு ரூம் இருக்குங்க...''
பாலு, வீணாவிடம் கண்ணால் பேசிவிட்டு, தன் அறைக்குச் சென்றான். ரகு, வீணா மற்றும் குழந்தையுடன் உள்ளே உள்ள அறைக்குச் சென்றான்.
தாத்தா நிம்மதியாக உறங்கப்போனார்.
மறுநாள்... காலை எட்டு மணி இருக்கும். யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. காலையில வாக்கிங் சென்ற பாலு உடம்பில் ரத்தக்
காயங்கள் மற்றும் வீக்கத்துடன் திரும்பினான். வீணா பதறினாள். ஆனால், ஒரு டிரைவருக்காக பதறுவது சந்தேகத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், ஒரு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாலுவிடம் ரகு கேட்டான்.
''என்ன நடந்தது?''
பாலுவால் சரியாகக்கூடப் பேச முடியவில்லை. வாய் குழறி சிவப்பாக மாறியிருந்தது. மெதுவாக ''சும்மா நடந்து போனேன். எதிர ஒருத்தன் வந்து இடிச்சான். கேட்டதுக்குப் போட்டு அடிச்சான்!'' என்று பாவமாகச் சொன்னான்.
''ஐயா... இங்க ரெண்டு மூணு குடிகாரப் பசங்க திரியறாங்க... நான் யாருன்னு கேக்கறேன். வேணும்னா போலீஸ் கம்ப்ளையன்ட் தரலாமா?'' என்று மாணிக்கம் கேட்டான்.
ரகு தடுமாறினான். '' இல்ல வேண்டாம்...'' போலீஸ் என்று போனால், எல்லா விஷயமும் தெரிந்துவிட்டால்..?
''உடனே ஆஸ்பத்திரிக்குப் போகலாம்... ரகு'' என்று வீணா கேட்க, ''சரி... ஒரு அரைமணிநேரம் பொறுங்க வீணா... தாத்தா சொன்ன ரிஜிஸ்தரார் வந்திடுவாரு. அதெல்லாம் முடிச்சிட்டு ஒரே வழியா ஊருக்குப் போகலாம்...'' என்று சொல்ல, தாத்தா... ரகுவை சைகை செய்து அழைத்தார்.
''இந்தா ரகு... பாவம் உன் டிரைவருக்கு நடந்த சம்பவம் கெட்ட சகுனமா இருக்கு. நான் இன்னொரு ஜோசியரைக் கேட்டு, அடுத்த வாரத்துல நாள் குறிக்கறேன். இன்னிக்கு பத்திரம் பதிய வேண்டாம். நீ கிளம்பு, முதல்ல டிரைவரை கவனி!'' என்று சொல்ல, ரகு ஏமாற்றமானான். ''இல்ல தாத்தா... இன்னிக்கே முடிச்சிடலாமே...'' ரொம்ப ஆர்வம் இல்லாதது போல் கேட்டான்.
''வேண்டாம்... எனக்கு ஏதும் ஆகாது. அடுத்த வாரம் வெச்சிக்கலாம்... நீ மட்டும் வந்தா கூட போதும்!''
தாத்தா உறுதியாகச் சொல்ல, அரைகுறை மனதுடன் கிளம்பினான் ரகு. காரை அவனே ஓட்டினான்.
''கடவுளே... எம் பொண்டாட்டிய இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டியா நடிக்கச் சொன்னதுக்கு இந்தத் தண்டனை தேவைதான்...'' என்று பாலு உடல் வலியால் துடித்தான். வழியில் ஒரு மருத்துவமனையில் பாலுவுக்கு ட்ரீட்மென்ட் தரப்பட்டது.
அடுத்த வாரம் ரகுவுக்கு ஊரிலிருந்து தகவல் வந்தது. 'தாத்தா தவறிவிட்டார்' என்று.
உடனே அறிவூருக்கு விரைந்தான்! தாத்தாவின் காரியங்கள் இரண்டு நாட்கள் முன்னாடியே நடந்து முடிந்திருந்தன.
மாணிக்கம் ஒரு கடிதத்தை ரகுவிடம் கொடுத்தான். ஏதும் புரியாமல் கடிதத்தைப் படித்தான் ரகு.
'அன்புள்ள பேரனுக்கு, பல வருடங்களுக்குப் பிறகு, என் பேரன் குடும்பத்தைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால், என் வீட்டில், நீ தங்கின இந்த ஒரே நாள் இரவில் நடந்த அந்தச் சம்பவம்... சீ... சீ... நினைக்கக்கூட கூசுகிறது... அன்றிரவு நான் தூக்கம் வராமல் மெதுவா பாத்ரூம் செல்ல வெளியில் வந்தபோது, உன் அறையிலிருந்து வீணா வெளியில் வந்து, அந்த டிரைவர் ரூமுக்குள் சென்றாள்.
'எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்னதான் நடக்கும்' என்று நான் விழித்திருக்க, விடியற்காலை வீணா அந்த டிரைவர் அறையிலிருந்து மீண்டும் உன் அறைக்கு வந்து, கதவை மெதுவாகத் திறந்து, உள்ளே நுழைந்தாள்.
என்ன நடக்குது உன் குடும்பத்தில்? விஷயத்தைப் பெரிது
படுத்தவும் முடியாது... என் மானமும் போகும்... அதுதான் அந்த டிரைவருக்கு நானே ஒ ரு ஆள் வைத்து, பாடம் புகட்டினேன். உன் பேரில் சொத்து எழுதினால், உன் நடத்தை தவறிய மனைவியால் அது அழிந்துதான் போகும். ஒரு மனைவியைக் கட்டி ஆளத் தெரியாத நீ... இந்தச் சொத்தைக் காப்பாற்ற மாட்டாய்! என் சொத்து, இப்படிப்பட்ட குடும்பத்துக்குச் செல்லக் கூடாது... எல்லாவற்றையும் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு எழுதிவிட்டேன். உன் வாழ்க்கையை சீர்படுத்திக்கொள். அந்த டிரைவரை துரத்திவிடு... முடிந்தால் பொண்டாட்டியைத் திருத்து... இப்படிக்கு உன் அன்பு தாத்தா!'
தலையில் பெரிய இடி இறங்கியது போல் உணர்ந்தான் ரகு. சொத்துக்கு ஆசைப்பட்டு போட்ட கேவலமான திட்டத்தால், கையிலிருந்த சில லட்சங்களையும் இழந்து பாலு குடும்பத்திடம் நல்ல பெயரும் இழந்ததுதான் தனக்குத் தரப்பட்ட தண்டனையாக உணர்ந்தான்.
பிறகு, எல்லா விவரமும் தெரிந்த வீணாவுக்கு, 'ஒரு தப்பான உதவிக்கு சம்மதித்து, ஒரு கிராமத்துப் பெரியவரால் தான் ஒரு கேடுகெட்டவளாய் உணரப்பட்டு விட்டோமே!' என்ற எண்ணமே... பெரிய தண்டனையாக அமைந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.