விரைவில் வறட்சி முன்னறிவிப்பு
பருவமழையை நம்பியிருக்கும் இந்திய விவசாயிகள், குறிப்பாக மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்வோர் மழையை நம்பியுள்ளனர்.

K.K.SUNDAR
'அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும். சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது...' - இத்தகைய வானிலை அறிக்கையை நாம் இயல்பாக வானொலி, டி.வி.யில் கேட்க முடிகிறது. சமூக ஊடகங்களிலும் சில தனியார் அமைப்புகள் வானிலை முன்னறிவிப்புச் செய்திகளைப் பதிவேற்றுகின்றன.
பருவமழையை நம்பியிருக்கும் இந்திய விவசாயிகள், குறிப்பாக மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்வோர் மழையை நம்பியுள்ளனர். மழையால் மண்ணின் ஈரம் அதிகரித்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி. மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் விவசாயம் பாதிக்கும்.
வறட்சி என்பது மழை பெய்யாமல் அல்லது மழை குறைவாகப் பெய்வதால் மட்டுமே ஏற்படுகிறது என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் வெப்பம் திடீரென அதிகரித்து, அந்தப் பகுதியில் ஈரப்பதம் மளமளவெனச் சரியும். இந்த திடீர் வறட்சி விவசாயிக்கு ஏற்படுத்தும் இழப்பு கொஞ்சமல்ல.
விதை போட்டு, அது முளைவிடும் நேரத்தில் இந்த திடீர் வறட்சி ஏற்பட்டால், விளைச்சல் பாதிக்கும். விவசாயி மனம் உடைவான்.
மழையை அறிவிக்கும் வானிலை முன்னறிவுப்புப் போல, வறட்சி முன்னறிவிப்பும் சாத்தியமே. ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருக்கும் இத்தகைய நடைமுறை இப்போது இந்தியாவிலும் வரவுள்ளது. இதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மும்பை ஐ.ஐ.டி-யில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் கார்த்திகேயன் லங்கா, இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இப்போது மும்பையில் சத்தாரா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் கிடைத்து வரும் இத்தைகய வறட்சி முன்னறிவுப்பு, விரைவில் இந்தியா முழுவதிலும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் என்கிறார்.
செயற்கைக் கோள் உதவியுடன் இந்தியா முழுவதிலும் எந்தெந்தப் பகுதியில் திடீர் வறட்சி ஏற்படும், வெப்பம் அதிகமாகும், பயிருக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பதை 30 நாள்கள் முன்னதாகவே தெரிவிக்க இந்த ஆய்வு உதவுகிறது. இதற்காக இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் (என்.ஏ.எஸ்.ஐ.) 2026-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது பெற்றிருக்கிறார் கார்த்திகேயன் லங்கா. இந்த விருது அகில இந்திய அளவில் அறிவியல் துறையில் பிரகாசிக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருதாகும்.
ஆந்திரப் பிரதேசத்தின் காகிநாடாவைச் சேர்ந்த இவர், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பொறியியல் படித்தவர். பின்னர், பெங்களூரு இந்தியா விஞ்ஞானக் கழகத்தில் பட்ட மேற்படிப்பையும், ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்தவர். மும்பை ஐ.ஐ.டி. யில், காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தில், சுற்றுச்சூழல் நீரியல் (எகோ ஹைட்ராலஜி) குழுத் தலைவராக இருக்கிறார்.
அவரது ஆராய்ச்சிப் பணிகள், செயல் திட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையில் பலனளிக்கின்றன என்பது குறித்துக் கூறுவதாவது:
'எங்களது குழு மேற்கொண்டுள்ள ஆய்வின் மையப் புள்ளி - மண்ணின் ஈரப்பதம். மண்ணில் எவ்வளவு நீர் உள்ளது என்பது மழை மட்டுமின்றி அந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலை, பொதுவான தாவர வறட்சி, வளிமண்டலம் ஆகியவற்றுடனும் நெருங்கிய தொடர்பு உடையது.
ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பை, ஒன்பது சதுர கி.மீ. வீதம் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து இருக்கிறோம். அங்குள்ள மண்ணின் ஈரப்பதத்தை செயற்கைக்கோள் தரவுகள் மூலம் கண்காணித்து, பூமியின் மேற்பரப்பில் நடைபெறும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதே எங்கள் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன்மூலம் ஒரு பெரிய நாட்டின் ஒவ்வொரு வயலிலும் நேரடியாகச் சென்று மண்ணைச் சோதிப்பதற்குப் பதிலாக, செயற்கைக்கோள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
எங்களது ஆராய்ச்சிக் குழு செயற்கைக்கோள் தொலைநுண்ணுணர்வு (ரிமோட் சென்சிங்) மண்-தாவரம்-வளிமண்டல தொடர்புகள், வறட்சி, வெப்ப அலைகளின் கணிப்பு, மிக நுணுக்கமான நிலப்பரப்பு மாதிரிகள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. நாட்டில் ஏற்படும் விவசாய வறட்சியை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமான நோக்கம்.
செயற்கைக்கோள்களிலிருந்து கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதத்தைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கான புதிய முறைகளையும் எங்கள் குழு உருவாக்கி வருகிறது. இந்தத் தகவல்கள், எந்தப் பகுதிகளில் வறட்சி உருவாகும் அபாயம் உள்ளது. பயிர்கள் மீது அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும், அப்பகுதியில் நீர் மேலாண்மையை எவ்வாறு மேம்படுத்தலாம், விவசாயி எத்தகைய மாற்று நடவடிக்கையை எடுக்கமுடியும் என்பவற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது
வறட்சி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பது உறுதியானால், அந்தப் பகுதிகளில் சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, அதிக தண்ணீர் தேவைப்படாத பயிர்களாகப் பயிரிடலாம் அல்லது சாகுபடியைத் தள்ளிப்போடலாம். இதன் மூலமாக விவசாயிகள் நஷ்டமடைவதைத் தவிர்க்கலாம்.
காலநிலை மாற்றத்தால் உருவாகும் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்வதில் இத்தகைய ஆய்வுகள் பெரும் பயனுடையவை. இந்திய விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் வறட்சி எச்சரிக்கையும், நீர் மேலாண்மை ஆலோசனைகளும் வழங்குவதற்கான அறிவியல் அடித்தளத்தை இவை உருவாக்குகின்றன.
எங்கள் ஆராய்ச்சியின் பயன்கள் நேரடியாக விவசாயிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக மகாராஷ்டிர மாநிலத்துக்கு உள்பட்ட சத்தாரா மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக வறட்சி முன்னறிப்பை செயல்படுத்தி வருகிறோம்.
வறட்சி என்றால் பல மாதங்கள் மழை இல்லாமல் இருப்பது என்று பொதுவாக நினைப்போம். ஆனால், திடீர் வறட்சி எனப்படும் ஒரு வகை வறட்சியானது மிகக் குறுகிய காலத்தில் வேகமாக உருவாகலாம். அதிக வெப்பம், அதிக ஆவியாதல், மண்ணின் ஈரப்பதம் குறைதல் போன்றவை இணைந்து தாவரங்களுக்கு திடீர் நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்தலாம். இத்தகைய திடீர் வறட்சிக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வில் வலியுறுத்தப்படுகின்றன.

மும்பை ஐ.ஐ.டி.-யில் செயல்படும் காலநிலை ஆராய்ச்சி மையம், 4 வாரங்களுக்கு முன்பாகவே, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படக்கூடிய திடீர் வறட்சி குறித்து ஆய்வு செய்து வெளியிடும் வரைபடம். இந்த அறிக்கையில் மாற்றம் ஏற்படும் என்றால், அது எத்தனை சதவீதம் என்பதையும் தெளிவாக்குகிறார்கள். இப்போது இது பரிசோதனை அளவில் வெளியாகிறது. விரைவில் இந்திய விவசாயிகள் அனைவரும் இந்தத் தகவலை ஆன்லைன் மூலம் பார்க்கமுடியும்.
இந்திய விவசாயம் பருவமழையை அதிகம் சார்ந்துள்ளது. மழை எப்போது வரும், எவ்வளவு வரும் என்பதோடு மட்டுமல்லாமல், மழைக்குப் பின்னர் அந்த நீர் மண்ணில் எவ்வளவு காலம் தங்குகிறது என்பதும் பயிர்களுக்கு முக்கியம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், வானத்தில் இருக்கும் செயற்கைக்கோள்களின் கண்களால் பூமிக்குக் கீழே இருக்கும் மண்ணின் நீரை ஆராய்ந்து, நாளைய வறட்சியை இன்றே கணித்து, விவசாயிகளுக்கு உதவுவதுதான் எங்களது ஆராய்ச்சியின் தனிச்சிறப்பு ஜெர்மனி, அமெரிக்காவில் வறட்சி முன்னறிவிப்பு வசதிகள் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் நாம் இப்போது செயற்கைக் கோள் உதவியுடன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக வறட்சியை அல்லது பயிர்களுக்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது என்பதை மிகக் குறைந்த செலவில் முன்னதாக கணிக்க முடிகிறது.

கார்த்திகேயன் லங்கா
இப்போது பரிசோதனை அடிப்படையில் சத்தாரா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மண்ணின் ஈரப்பதம் குறித்த தகவல்களை நான்கு வாரங்களுக்கு முன்னதாக தெரிவித்து வருகிறோம். அடுத்து, இந்திய அளவில் நடைபெறும் இந்தப் புள்ளிவிவரங்களை நாட்டின் அனைத்து விவசாயிகளும் பார்க்கும்படியான கணினி வழி அணுகும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளோம்' என்கிறார் கார்த்திகேயன்.
-எஸ். சந்திரமெளலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






