குழந்தைகள் மீட்பாளர்...

ஒவ்வொரு நாளும் ரயில் நிலையங்களில் கடத்திச் செல்லப்படும், வீட்டை விட்டு வெளியேறும் சூழலில் உள்ள குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹா தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
குழந்தைகள் மீட்பாளர்...
Updated on
2 min read

ஒவ்வொரு நாளும் ரயில் நிலையங்களில் கடத்திச் செல்லப்படும், வீட்டை விட்டு வெளியேறும் சூழலில் உள்ள குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹா தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ள அவர், 2024-ஆம் ஆண்டில் மட்டும் 494 குழந்தைகளை மீட்டுள்ளார். இவர்களில், 152 குழந்தைகளை சந்தனாவே தனிப்பட்ட முறையில் மீட்டுள்ளார். இதற்காக, ரயில்வே துறையின் உயரிய சேவை விருதான "அதிவிசிஷ்ட ரயில் சேவா புரஸ்கார்' விருது அண்மையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர், சில மணி நேரங்களில் லக்னோ திரும்பினார். "நடைமேடை 3-இல் ஒரு குழந்தை தனியாக நிற்கிறது' என்ற தகவல் கிடைத்தவுடன், உடனே ரயில் நிலையத்துக்கு விரைந்தார்.

"குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்ற லட்சியத்துடன் சேவை செய்யும் சந்தனா சின்ஹாவுக்கு நாற்பத்தொன்று வயதாகிறது. சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரைச் சேர்ந்த இவர், "ஐபிஎஸ் அதிகாரி கல்யாணி சிங்' வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 1980-களில் ஒளிபரப்பான "உடான்' தொலைக்காட்சித் தொடரால் ஈர்க்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையில் இணைந்தார்.

அவர் கூறியது:

""2022-இல் புதுதில்லி ரயில் நிலையத்தில் குறுகிய காலம் பணியாற்றினேன். அப்போது "சாத்' பூஜை காரணமாக அதிகமான பயணிகள் ரயில் நிலையத்தில் கூடியிருந்தனர். தகவலின்பேரில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று வயது மகனையும் தேடுவதில் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். நூற்றுக்கணக்கானோர் கடந்து சென்றும் கவனிக்கப்படாத நிலையில், அவர்கள் பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டோம். அவர்கள் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தனர். அந்தத் தேடுதல், நாங்கள் தேடும் விதத்தையே மாற்றிவிட்டது. குடும்பத்திலிருந்து தப்பிச் செல்வதை விரும்புபவர்கள் பயமோ, பதற்றப்பட வேண்டிய அவசியமோ இல்லையே. அமைதியாக சாந்தமாக இருந்தாலும், விசாரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

எனது குழுவினர் நடைமேடைகள் முழுவதையும் கண்காணித்து மற்ற காவலர்கள் கவனிக்கத் தவறியவற்றைக் கண்டறிவோம். "காணாமல் போன குழந்தை' என்றோ, "சந்தேகத்துக்குரிய பயணி' என்றுதான் கண்காணிப்பு ஆரம்பமாகும்.

ஜூன் 2024-இல் ரயில்வேயின் குழந்தை மீட்பு முயற்சியான "ஆபரேஷன் நன்ஹே ஃபரிஷ்தே' திட்டத்தை வழிநடத்தினோம். பெண் அலுவலர்களைக் கொண்ட எனது பிரிவினர் பீகாரில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா வரையிலான கடத்தல் வழித்தடங்களில் குழந்தைகளை இடைமறித்து மீட்கத் தொடங்கினர். அவர்களில் பலர் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள், அறிமுகமில்லாதவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

மீட்புப் பணிகள் சில தகவலின் அடிப்படையில் தொடங்கப்படுகின்றன. குழந்தைகளின் உடல் மொழி, மெளனம், பார்வை, மிரண்டு அதிர்ச்சி அடைந்து உறைந்து இருப்பது என்ற பல குறியீடுகள் எங்களுக்குக் கை கொடுக்கின்றன. தனியாக அமர்ந்திருக்கும் ஒரு குழந்தை, அதன் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவர், அவரது பயந்த அல்லது உணர்ச்சியற்ற முகம், குழந்தைக்கும் அது இருக்கும் சூழலுக்கும் இடையே உள்ள பொருத்தம், பொருத்தமின்மையை நாங்கள் அனுமானிக்கிறோம்.

கடத்தலை முறியடித்தவுடன் காப்பாற்றப்பட்ட குழந்தை அல்லது குழந்தைகளுடன் பேசுவது உடனே நடந்துவிடாது. சில குழந்தைகள் மெளனமாக இருப்பார்கள். மற்றவர்கள் சொல்லித்தரப்பட்டு மனப்பாடம் செய்த வசனங்களை அயராமல் சொல்வார்கள். விசாரணை அதிகாரிகள் அவர்கள் போக்கில் விட்டுவிடுவார்கள்.

2025-ஆம் ஆண்டில் எனது குழுவினர் 39 பேர் வீட்டு, வயல் வேலைகளுக்காகக் கடத்தப்பட்டவர்களை மீட்டனர்.

கண்காணிப்பு வேலையின் பெரும்பகுதி, ரயில்வே சொத்து, பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதுதான்'' என்கிறார் சந்தனா சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com