இமாசலப் பிரதேசத்துக்கு உள்பட்ட குலு மாவட்டத்தில், பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 'மலானா' எனும் கிராமம் சுமார் 2,652 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மர்மமான, தனித்துவமான, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்தோர் தங்களை இந்தியர்கள் என்றே சொல்லிக் கொள்ளாமல், 'அலெக்சாண்டரின் படைவீரர்களின் வழிவந்தவர்கள்' என கூறிக் கொள்கின்றனர்.
மலானா நதியின் தொலைதூர பீடபூமியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே 4,700 பேர்தான். இரண்டு சிகரங்கள் இந்தக் கிராமத்தை மறைத்து, தங்களைத் தனி இடம் என்று சொல்ல வைத்துள்ளது.
பொ.ஆ. 326-இல் அலெக்சாண்டர் இந்தியாவில் இருந்து பின்வாங்கியபோது, அவரது வீரர்கள் பலரும் சோர்வை அடைந்தனர். சிலர் காயமும் அடைந்தனர். கிரேக்கத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாத அவர்கள், பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியாக இந்தக் கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் உள்ளனர். வெளிர் நிறக் கண்கள், வெளிர் தோல் என்று வித்தியாசமான முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.
பண்டைய ஜனநாயகத்தைக் கொண்ட பகுதி என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வசிக்கும் கிராமத்தை 11 பேர் கொண்ட குழு நிர்வகிக்கிறது. இந்தக் குழுவினரின் உத்தரவுக்கு ஒட்டுமொத்த கிராமத்தினரும் கட்டுப்படுகின்றனர்.
நவீன நாடாளுமன்றம் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே மலானாவில் 'ஜெயேஸஷ்தாங்' (மேல்சபை), 'கனிஷ்தாங்' (கீழ் சபை) என இரண்டு அமைப்புகள் கொண்ட அவைகளை கிராம மக்கள் நிறுவினர். இந்தக் கிராம மக்கள் கனாஷி மொழியைப் பேசுகின்றனர். சீன- திபெத்திய மொழியான இந்த மொழியை பக்கத்து கிராமங்களில் கூட பேசுவதில்லை.
இவர்கள் இன்றும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். தனித்துவமான சந்திர, சூரிய நாள்காட்டியைப் பயன்படுத்திக் கொண்டு பண்டிகைகள், அறுவடைகளைத் தீர்மானிக்கின்றனர். கதிகுனி பாணியில் கட்டப்பட்டுள்ள கல், மர அடுக்குகளைக் கொண்ட வீடுகளை மாற்றி அமைத்து, பூகம்பம், இயற்கை இடர்ப்பாடுகளில் இருந்து தப்புகின்றனர்.
உள்ளூர் தெய்வம் 'ஜம்லு தேவ்தா' என அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மத விதிகள் பின்பற்றப்படும் இந்தக் கிராமத்தில் பெல்ட், காலணி, பை உள்ளிட்ட தோல் பொருள்களுக்கும்கூட தடை செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவர்கள் இரவு தங்க அனுமதியில்லை.
வெளியாள்கள் கிராம மக்களையும் அவர்களுடைய பொருள்களையும் தொடக் கூடாது. தூய்மையைக் காக்க இப்படி ஒரு விதியாம். மீறி தொட்டால் ரூ.3,500 வரை அபராதம் உண்டு. ஜாரி என்ற இடத்திலிருந்து சாலை வழி உள்ளது. டிரக்கிங் ஏறலாம்.
'மலானா கிரீம்' எனப்படும் உயர்தரமான போதைப்பொருள் இங்குண்டு. இங்கு வருபவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஆனாலும், அதை வாங்கும்போது கையில் பணத்தைக் கொடுக்க முடியாது. பணத்தைக் கீழே வைக்க வேண்டும். அவர்களும் பொருள்களைக் கீழே வைப்பார்கள். இந்தி மொழியையும் இவர்கள் அறிந்திருக்கின்றனர். இவர்களால் தொந்தரவுகள் இல்லாததால், இமாசலப் பிரதேச அரசும், இந்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.
சிந்து நதியிலிருந்து பெறப்பட்டது என்று கூறி இந்தியாவை 'இண்டிகே' என்றே பண்டைய கிரேக்கர்கள் அழைத்தனர். அத்துடன் பொதுவாக 'இந்தோஷ்' என்றும் அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.