மருத்துவ நாயகன்...

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... அந்த நோயை வருமுன் காக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்'
மருத்துவ நாயகன்...
Updated on
2 min read

கே.நடராஜன்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... அந்த நோயை வருமுன் காக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்' என்று கூறும் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் மருத்துவப் பணிகள் இயக்குநர் பி.லட்சுமிநாராயணன் பாபு என்கிற பி.எல்.என்.பாபு, பதினேழு ஆண்டுகளில், வேலூர் மாவட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கானோருக்குச் சிகிச்சை பெற வழிவகை செய்துள்ளார்.

'இந்தச் சாதனையை நிகழ்த்தியது எப்படி?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

' எனது தந்தை எம்.கே. பிச்சாண்டி பராம்பரிய மருத்துவர்; தாய் கல்யாணி குடும்பத் தலைவி. நான் 12-ஆம் வகுப்பு வரையில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, ஹோமியோபதியில் மருந்தியல் டிப்ளமோ படித்தேன். 1984-இல் மருந்துக் கடையைத் தொடங்கினேன். அப்போது முதல் அவ்வப்போது மருத்துவ முகாம்களை நடத்தத் தொடங்கினேன்.

2008-ஆம் ஆண்டில் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் இணைந்து, மருத்துவப் பணிகள் இயக்குநரானேன். 2019-20-இல் ரோட்டரி சங்கத் தலைவராகவும் பதவி வகித்தேன். கரோனா காலத்திலும், டெங்கு தொற்று பரவும் காலத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர், கஷாயம் பொட்டலம், ஆர்சனிக் ஆல்பம் சி30 போன்ற தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளேன்.

3 ஆண்டுகளாக 'இலவச மெமரி கேம்ப்' வாயிலாக, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருந்துகளை அளித்து வருகிறேன். 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன்.

மாதா மருத்துவக் கல்லூரி, குப்பம் பி.இ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் சிவக்குமார் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளோடு தனித்தனியே நடத்திய பொது மருத்துவ முகாம்களில், பல ஆயிரம் பேர் பயன்பெற்றனர்.

அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமின் வாயிலாக 60 குழந்தைகளுக்கும், செட்டிநாடு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மூன்று முகாம்களின் வாயிலாக 150 பேருக்கும் இதய அறுவைச் சிகிச்சை பெற வழிவகை செய்துள்ளேன். எலும்புச் சிகிச்சை, மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாம் போன்ற சிறப்பு மருத்துவ முகாம்களையும் நடத்தியுள்ளேன். சென்னை நோபல் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய வாய்வுப் பிரச்னைகளுக்கான மருத்துவ முகாமில், 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக வயிறு ஸ்கேன் செய்ய உதவினேன். எலும்பு அடர்த்தி மருத்துவ முகாம்களை ஐந்து முறை நடத்தி, 500-க்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சை அளித்துள்ளேன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இலவசமாக பல் சிகிச்சை முகாம்களை நடத்தி, சிகிச்சை அளித்துள்ளேன். மது, புகையிலைப் பழக்கங்களில் இருந்து விடுபட பலருக்கு ஆன்ட்டி டேக்ஸ் மருந்துகளை வழங்கியுள்ளேன். பசியின்மை, மண் சாப்பிடுதல், அடம்பிடித்தல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'பேபி வீட்டா' எனும் மருந்தை இலவசமாக வழங்கினேன்.

கோவை சங்கரா மருத்துவமனை, வேலூர் ஐ பவுண்டேஷன், எஸ்எம்எஸ் கடலூர் மெமோரியல் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட கண் மருத்துவ முகாம்களை நடத்தி, பல நூறு பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கியுள்ளதோடு, பலருக்கு அறுவைச் சிகிச்சை வாயிலாக கண் நோயைக் குணப்படுத்தியுள்ளேன். ஜெம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய குடலிறக்க மருத்துவ முகாமில், ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

எனது மகள் அபிராமி ஹோமியோபதி மருத்துவராக இருக்கிறார். அவரும் தனது கிளீனிக்கில் மாதம்தோறும் இரு முறை இலவச மருத்துவ முகாம்களை நடத்திவருகிறார். எனது மருத்துவப் பணிகளுக்கு மனைவி மாலதியும் உறுதுணையாக இருக்கிறார்' என்கிறார் பி.எல்.என்.பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com