பொ.ஜெயச்சந்திரன்
தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாதத் தடத்தைப் பதித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவரது நூற்றாண்டு விழா உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அதிலும் அவர் பிறந்த செட்டிநாட்டுப் பகுதியான காரைக்குடியில் நடைபெற்ற விழா மிகச் சிறப்புற அமைந்திருந்தது. அவரைப் பற்றி நூறு பேர் நூறு கவிதை வாசித்து வியப்பில் ஆழ்த்தினர்.
காரைக்குடி வள்ளுவர் பேரவை, காரைக்குடி ரோட்டரி சங்கம், பேராசிரியர் டாக்டர் கலைமாமணி அய்க்கன் எழுத்துப் பாசறை ஆகியன இணைந்து நடத்திய விழா குறித்து அந்தப் பேரவையின் நிறுவனத் தலைவர் 'திருக்குறள் தேனீ' கவிஞர் மெ.செயம்கொண்டான் கூறியது:
'மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் நூறு பேர் கவிதை வாசிப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அனைவரும் தாங்கள் எழுதிய கவிதைகளையும், கண்ணதாசனைப் பற்றிய படைப்புகளையும் வாசித்தனர். இந்த நிகழ்வு வெறும் நூற்றாண்டு விழா என்பதைத் தாண்டி, தமிழ் மொழியின் எதிர்காலத்தை நோக்கியே அமைந்திருந்தது.
கண்ணதாசனின் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி வாசிக்கப்படுவதற்குக் காரணம், அவை மனித வாழ்க்கையின் உண்மைகளை எளிய மொழியில் வெளிப்படுத்திய விதம்தான்.
கவிதை வாசித்த மாணவர்களின் மனங்களில் கண்ணதாசன் என்ற பெயர் கவிஞரின் பெயராக மட்டுமல்ல. வாழ்க்கையை எளிய சொற்களில் ஆழமாகப் பதிய வைத்த தத்துவஞானியின் பெயராகவும் திகழ்ந்தது. கல்வி, காதல், குடும்பம், ஆன்மிகம், அரசியல், மனிதநேயம் என வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் என்பதை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கவிதைகள் மூலமாக எடுத்துரைத்தனர்.
கவிதைகளில் சிந்தனை ஆழம், மொழி வளம், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உணர்த்தின.
புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'திருமகள்' என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தபோது, தனது இயற்பெயரான முத்தையாவை கண்ணதாசனாக்கினார். 'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே' என்று இறுதியாகப் பாடிச் சென்ற கவியரசர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
கண்ணதாசனின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகச் சிறந்த பாடம். அவருடைய பாடல், கவிதை உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும் இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும். அவர் நினைத்த அடுத்த விநாடியே மனதில் தமிழ்ச் சொற்கள் கைகட்டி அணிவகுத்து நின்றன. அவர் எழுதிய 1944 முதல் 1981-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம், தமிழ் இலக்கியத் துறையின் பொற்காலமாகும். இந்த நூற்றாண்டு விழா இலக்கியத்தோடு, மாணவர்கள் கொண்டாடிய மாபெரும் விழா' என்றார் மெ.செயம்கொண்டான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







