பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சந்திர சாட்சி

கும்பகோணம் பேருந்து நிலையம். வழக்கமாக பின்னிரவில் கிளம்பக் கூடிய எனக்கு அன்றைக்கு எப்படியோ வேளையாக வேலை முடிந்து விட்டிருந்தது.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:01 am IST

கும்பகோணம் பேருந்து நிலையம். வழக்கமாக பின்னிரவில் கிளம்பக் கூடிய எனக்கு அன்றைக்கு எப்படியோ வேளையாக வேலை முடிந்து விட்டிருந்தது. ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்தை அடைகிறேன். ஊர் அடங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்த நேரம். வழக்கம்போல மக்கள் கூட்டம் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. கோயில் நகரமாச்சே!

ஊர் ஊராகத் திரிந்து, கடை கடையாக ஏறி இறங்கி, மருந்துக் கடைகளில் மருந்துகளின் தேவைப் பட்டியலைப் பெறுவதும், அந்தந்த ஊர் மக்களின் நாடியைப் பார்க்கும் டாக்டர்களின் நாடியைப் பார்ப்பதும் எமது பணி. இணையமும் வாட்ஸ் அப்பும் வந்த பிறகும் நேரில் சென்றால்தான் வேலை ஆகும் என்று நம்பும் நிறுவனம் எங்களுடையது. எது எப்படியோ? மக்களின் ஆயுளும் நீண்டு எங்கள் நிறுவனத்தின் ஆயுளும் நீள வேண்டும். அப்போதுதான் எங்களைப் போன்றோர் வாழ்க்கை ஓடும். யார் கண்டது? இன்றைக்குப் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவால் டாக்டர்களுக்கே பிழைப்பு நிரந்தரமில்லையாம். அவர்கள் பிழைப்பே அதோ கதியானால் எங்கள் பிழைப்பும் கேள்விக்குறியே. சரி சரி

இப்போது ஏன் அந்தப் புலம்பல்.

இரவு பத்து மணியாகிவிட, அங்கிருந்த உணவகத்தில் நுழைகிறேன். ஆவி பறக்கப் பறக்க இரண்டு இட்லி கிடைச்சா கூட போதும். ஆனால், சிப்பந்தியோ "தோசை, ஊத்தப்பம் மட்டும்தான். சாப்பிட்டா சாப்பிடு... இல்லைனா நடையைக் கட்டு நாங்க கிளம்பனும்' என்பதுபோலப் பார்க்கிறார். சரி, 'ஆனியன் ஊத்த...' என முடிப்பதற்குள், 'சார், மணி பத்தாவது' என்கிறார்.

'சரி சரி ஒரு தோசை' எனச் சொல்லிமுடிக்கிறேன். அவர்களின் அவசரமும் எனது அவசரமும் தோசையை அப்படியே விழுங்கச் செய்கிறது.

சென்னை செல்லும் பேருந்து நிற்கும் இடத்தை அடைகிறேன். சென்னை செல்லும் பேருந்துகள் வழக்கமாக முன் கட்டையில்தான் நிற்கும். பிறகுதான் இன்னுமொரு சவால். நான் இறங்க வேண்டிய மதுராந்தகத்துக்கு இடம் கேட்க வேண்டும். பொதுவாக, சென்னை செல்லும் வண்டிகள் மதுராந்தகம் நகரில் நிற்காது.

நகரத்துக்குள் கூட போக வேண்டாம். வழக்கமாக புறவழிச் சாலையில் ஏரிக்கரையில் நிறுத்துவார்கள். ஆனால், அதற்கே இந்த ஓட்டுநர்கள் சலித்துக் கொள்வர். நாங்கள் சீட்டு கேட்கும்போது பெரும்பாலான நடத்துநர்கள் பூச்சியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். சில நேரம் பதில் கூட சொல்லமாட்டார்கள். "அதெல்லாம் ஒரு ஊரு, அதுல வசிக்கிற நீயெல்லாம் ஒரு ஆளு' என்பது போல இருக்கும்.

மதுராந்தகச்சோழன் ஆண்டான். வெற்றிலை வியாபாரத்துக்குப் பேர் போனது. மிகப் பெரிய ஏரிகாத்த ராமர் கோயில் உள்ளது. ஏரியும் உள்ளது. இது போன்ற பெருமைகளெல்லாம் ஒரு மார்க் கேள்விக்கு வேண்டுமானால் விடையாகலாம். எந்தத் தொலைதூரப் பேருந்தையும் நிற்க வைக்காது.

நல்லவேளையாக சென்னை செல்லும் பல பேருந்துகளும் காலியாக இருந்தன. வியாழக்கிழமைகளில் பெரும்பாலும் கூட்டம் இருக்காது. தயங்கி தயங்கி நடத்துநரைத் தேடுகிறேன். அவர் அங்கு இல்லை. ஓட்டுநரிடம் கேட்கிறேன். அவரும் ஏதோ நினைவில் தலையாட்டுகிறார். அவசரம் அவசரமாக ஏறுகிறேன். பாக்கெட்டிலிருந்து சில சீட்டுகள் விழுகின்றன. அவைகளில் கையில் கிடைத்தவற்றைச் சேகரித்து சட்டைப்பையில் சேர்க்கிறேன்.

'ஐந்து வரிசை தள்ளி உட்காருங்க... சென்னை த்ரோ டிக்கெட் வரும்' என்று மட்டும் கூறினார்.

பாதிக்கு மேற்பட்ட பேருந்து காலியாக இருந்தது. அதற்குள் நடத்துநர், 'எங்கே போறீங்க?, எங்க போறீங்க?' என அபசகுணமாக விசாரித்து வந்தார். அதாவது டிக்கெட் போடும் முன் இப்படி விசாரித்துப் பார்த்துக் கொள்வார்கள். எனக்கு முன்பிருந்த பலரும் 'சென்னை... சென்னை' எனச் சொல்லவும், மீண்டும் இவர் முகம் காட்டப் போகின்றார் என்ற பயம் தொற்றிக்கொண்டது. மெல்ல என்னிடம் வந்தவர் 'சென்னைதானே?' என்றார்.

நான் 'மதுராந்தகம்' என்றேன்

'இறங்குங்க சார். இது எக்ஸ்பிரஸ் சார்... இது கூட தெரியாம ஏறிக்கிடறீங்க?'

'சார்... நான் டிரைவர் சார் கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் ஏறினேன்.'

'பெரிய டிரைவர் அவரு என்ன கவர்னரா? அதெல்லாம் முடியாது கீழே இறங்குங்க சார். வேற பஸ் பிடிச்சுப் போங்க...' என்று நிர்தாட்சண்யமாகச் சொன்னார்.

'அதெல்லாம் முடியாது. நான் இறங்கமாட்டேன்... பஸ் காலியாதானே இருக்கு?'

'ஆமாம் ஆமாம்... இப்ப காலியாதான் இருக்கும். டவுனைத் தாண்டிட்டோம்னாதான் எங்க பாடு திண்டாட்டமாயிடும். திபுதிபுன்னு பத்து சென்னை சீட்டு வந்திரும். சென்னை சீட் வந்தா எழுப்பிடுவேன்... நின்னுக்கிட்டுத்தான் வரணும்' என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கினார்.

எனக்குப் பீதி அதிகமானது. யாரு கண்டது. நமக்குச் சோதனை செய்யணும்னு சில நேரம் சில பேர் கச்சை கட்டிக்கிட்டு கிளம்பவே செய்வார்கள். வாரத்தின் இடைநாள்தான். அப்படி ஒன்னும் மக்கள் கிளம்பிடமாட்டாங்க. இப்படி எதிரும் புதிருமான சிந்தனைகள். இருப்பினும், உள்ளுக்குள் பயம்தான். இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்.

வழக்கம் போல ஜன்னல் ஓர் இருக்கை ஒன்றைப் பிடித்திருந்ததால் சில்லெனக் காற்றுவீச, அப்படியே அயர்ந்து விட்டேன். பேருந்து இன்னும் புறப்பட்ட பாடில்லை.

இதற்கிடையே யாரோ இருவர் பலத்த வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது மட்டும் ஒண்ணும் பாதியுமாக காதில் விழுந்துகொண்டிருந்தது. அதே நேரம் பேருந்தின் நடத்துநர் ஓட்டுநர் குரல் போலவும் இருந்தது.

பிறகு சிலர் பேருந்தில் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டது. அங்கிருந்து ஒவ்வொருவராக பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டு நடத்துநர் என்னிடம் வந்தார். வந்தவரிடம் 'மதுராந்தகம்' என்று சொன்னேன்.

'சார் இதுல பாருங்க... நீங்க கோவிச்சுக்கக் கூடாது, நாள் ஃபுல்லா நாங்க டூட்டி பார்க்கிறோம். என்னோட டூட்டி இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும்தான். டிக்கெட்டை போட்டுட்டு நான் தூங்கிடுவேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஹோட்டல் வந்தவுடன் அவர் தூங்க ஆரம்பிச்சிடுவாரு. நான்தான் வண்டி ஓட்டுவேன். நான் வண்டி ஓட்டும்போது நேரே சென்னைக்கு வண்டி விடுவது எனக்கு ஈஸி. ஆனா, மதுராந்தகம் வந்து நீங்க தூங்கிட்டு இருக்க... உங்களை குறைத் தூக்கத்துல எழுப்பினா? உங்களுக்கும் எனக்கும் கஷ்டம் சார்' என்றார்.

அவர் சொல்வதைப் பார்த்தால் கும்பகோணத்திலேயே ரூம் போட்டு தூங்கிட்டு காலை கிளம்பும் பேருந்தில்தான் கிளம்பணும். அவரது நிலையும் தற்போதுதான் புரிந்தது. அண்மைக் காலங்களில் இருவருமே நடத்துநர், ஓட்டுநர் பணிகளைப் பகிர்ந்து பார்க்கின்றனர். பாவம் அவரவர் பிரச்னைகள் அவரவர்களுக்கு.

ஆனாலும் முதலில் அவ்வளவு கோபமாகப் பேசிய இவர், ஏன் இவ்வளவு கரிசனமாகிவிட்டார். மேலும் திடுதிப்பென எனக்கு இந்த விளக்கம் ஏன் அளிக்கிறார். என்று புரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தானே. சரி நிம்மதியா தூங்குவோம். மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டேன்.

சிறிது நேரம் சென்ற பின்னர் வண்டியை கட்டையால் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். எழுந்தவுடன் அங்கு வீசிய சுகந்தவாடை அது பயணவழி உணவகம் என அடையாளம் காட்டியது. பயணிகள் விழிப்புணர்வு பெறுவதில் சிப்பந்திகள் மிகவும் அக்கறை காட்டினர்.

குறைந்தபட்சம் தேநீர் அருந்திவிட்டாவது செல்லுங்கள். இல்லையென்றால் நரகத்துக்குத்தான் செல்வீர்கள் என்றுதான் கூறவில்லை. தற்போதெல்லாம் இதற்குக் கூட ஒலிபெருக்கிகள் வந்துவிட்டன.

சாப்பிட்டுவிட்டு அனைத்துப் பயணிகளும் பேருந்தில் ஏறிக் கொள்ள, வண்டி புறப்பட்டது. ஒவ்வொரு முறையும் இப்படி நீண்ட வழி பேருந்துகளில் கஷ்டப்படும்பொதெல்லாம் சென்னைக்குக் குடிபெயர எண்ணம் வருவதுண்டு. வரக் கூடிய வருமானத்தில் சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குமளவுக்கு வசதியில்லை.

தற்போது பணியாற்றும் நிறுவனம் மிகவும் ஊழியர் நட்பானது. மாதம் ஓரிரு முறை சென்னை அலுவலகம் சென்றால் போதும். மற்ற நாள்களில் திண்டிவனம், பாண்டிச்சேரி, வேலூர், கும்பகோணம் என மதுராந்தகத்திலிருந்து நெருங்க இயலும் தூரத்திலேயே எனது சேவைப் பகுதிகள் அமைந்துள்ளன. வாடகை தரவேண்டாம். சொந்த வீட்டிலேயே அப்பா அம்மாவுடன் கூட்டுக்குடும்ப வசதியிருப்பதாலும் அவ்வப்போது ஏற்படும் இந்தக் கஷ்டங்கள் பெரிதாகத் தெரிவதில்லை.

இதனிடையே கண்கள் சொருகின. கோடையின் இரவு கால காற்றின் குளிர்ச்சியைக் கேட்கவா வேண்டும். நன்கு சுகமாக இருந்தது. சிறிது நேரம் கண் அயர்ந்திருப்பேன். இதனிடையே மதுராந்தகம் தாண்டி எங்கோ சென்று இறங்குவது போன்ற கனவு வந்தது. கனவிலும் நமக்கு வாழ்க்கைப் பிரச்னைகள்தானே வந்துதொலைகின்றன. சட்டென விழிப்பு தட்டியது. பேருந்து மேல்மருவத்தூரைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஓட்டுநருக்கு ஏன் சிரமம் என நானாகவே மெல்ல எழுந்து ஓட்டுநரின் அருகிலிருந்த இருக்கையில் அமர்கிறேன்.

'சார் வந்திட்டீங்களா... ரொம்ப தாங்க்ஸ்.'

'இருக்கட்டுங்க.'

'அதில பாருங்க... முன்பெல்லாம் நாங்க அவங்கவங்க அவங்கவங்க வேலையைப் பார்த்தோம். இப்ப நாங்க ரெண்டு வேலையையும் பார்க்கவேண்டியிருக்கு. எங்களுக்கு வழியில இருக்கிற எல்லா ஊர் சனங்களையும் ஏற்றிக்கிட ஆசைதான். ஆனா பாருங்க, நீங்க என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சிகிட்டு எழுந்து வந்துட்டீங்க.

ஒருவேளை நீங்க விழிச்சிக்கலைனு வைச்சுக்கங்க, நான் வண்டியை ஓரமா நிறுத்திட்டு உங்களை வந்து எழுப்பணும். அதே நேரம் பின்னால வர வண்டிக்காரன் நம்ம வண்டிமேல மோதாம இருக்கணும். உங்களை மாதிரி வழி சீட்டு ஆளுங்களை எழுப்பறதுக்காக நாள் ஃபுல்லா வண்டி ஓட்டின அவர் விழிச்சுக்கிட்டிருக்கவும் முடியாது. சார் மேலிடத்தில எதுவும் புகார் பண்ணிடாதீங்க...'

'பரவாயில்லைங்க புரியுது. நான் ஏன் சார் செய்யப் போறேன்...'

'சார் சும்மா சொல்லாதீங்க... எங்க எம்.டி. சந்திரன் சார் உங்க பிரண்டு தானே?'

'இல்லியே...'

'பின்ன இந்த கார்டு உங்க பையிலே இருந்ததே...' என்று அவரது எம்.டி.யின் விசிட்டிங் கார்டைக் காண்பித்தார்.

இதற்குள் நிறுத்தம் வந்துவிட இறங்குகிறேன்.

அப்போதுதான் கும்பகோணம் டாக்டர் கூரியர் செய்யச் சொன்ன கவர் நினைவுக்கு வந்தது. உண்மையில் சந்திரன் சார் அந்த டாக்டரின் நண்பர். வண்டி ஏறிய அலப்பறையில் எனது சட்டையிலிருந்து இது கீழே விழுந்திருக்கிறது. மற்றவற்றை எடுத்த நான் இதனைவிட்டுவிட அது ஓட்டுநர் கையில் கிடைத்திருக்கிறது.

எனது தூக்கக் கலக்கத்தில் நான் கேட்ட உரையாடல் மெல்ல நினைவுக்கு வந்தது. அவர்களிடையே நடைபெற்ற விவாதங்கள் இப்படிக் கற்பனையில் வந்தது.

'யோவ், நீ பாட்டுக்கு ஏன் மதுராந்தகம் சீட்டையெல்லாம் ஏத்தியிருக்கே?'

'பஸ் காலியாதானே இருக்கு.'

'காலியா இருந்தா நீ பாட்டுக்கு ஏத்திக்கிட்டு தூங்கப் போயிடுவே... மதுராந்தகம் வர்றப்போ நான் இல்ல ஓட்டுவேன்...'

'யோவ் புரியாமப் பேசாதே... அவர் நம்ம எம்.டி. யோட பிரண்டு. மேலதிகாரிங்க நம்மள வேவு பார்க்க இப்படி ஆளுங்களை அனுப்புவாங்க தெரியுமா?'

'எம்.டி.யோட பிரண்டா உனக்கு எப்படித் தெரியும்?'

'இதோ பாரு... அவரோட பாக்கெட்டிலிருந்து விழுந்த எம்.டி.யோட விசிட்டிங் கார்டு.'

இப்படி நிறைவடைந்திருக்கலாம்.

நாளைக்கு முதல் வேலையா கூரியரை புக் செய்யணும். யார் பெத்த பிள்ளையோ சந்திரன் சார் வாழ்க. நம்ம பிரண்டு இல்லைதான். மறுபடியும் இவங்களைப் பார்க்கப் போறோமா என்ன? நம்ம பொய்க்கு யாரும் சாட்சி இல்லையே. வானில் சந்திரன் சிரித்துக்கொண்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.