தூத்துக்குடி வி.சகிதாமுருகன்
பண்ணை வீட்டின் தாழ்வாரத்தில் கூடியிருந்தது அந்தக் கூட்டம். வீரண்ணன் விழிகள் கீழ்வானமாய் சிவந்து கிடந்தது. அவரைச் சுற்றிலும் அவர் அடியாட்கள். வீரண்ணன் அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு. ஆயிரம் ஏக்கர் நஞ்சை புஞ்சைக்கு உரிமையாளர். அவர் பேச்சுக்கு ஊரே கட்டுப்படும். 'கட்டிக்கிட்டு வா?' என்றால், வெட்டிக் கொண்டு வரும் ஒரு கூட்டம் அவர் பின்னே இருந்தது.
அங்கே அப்பொழுது ஓர் அசாதாரண சூழல் இருந்தது. கூட்டத்தின் நடுவே அவர் முன் அந்தச் சிறுவன் நின்றிருந்தான். டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு நின்ற அவனிடம் கேட்டார் வீரண்ணன், 'நீ பார்த்தது உண்மையாடா?'
'ஆமாங்கய்யா... நான் பார்த்தேன்.'
'சரி சொல்லு...'
'நான் எங்க அப்பாக்கு வயலுக்குச் சோறு கொண்டு போய்க் குடுத்துட்டு வரும்போது பார்த்தேன். நம்ம கல்யாணி அக்கா ஓர் ஆள் பைக் பின்னாடி உக்கார்ந்து போயிட்டிருந்தாங்க...'
அப்பொழுது வீரண்ணனின் அடியாட்களின் தலைவன் செல்லப்பாண்டி சிறுவன் தோள் பற்றிக் கேட்டான்.
'ஏலேய்... சரியாச் சொல்லு. நீ பார்த்தது ஐயாவோட மக கல்யாணி அம்மாவைத்தானா?'
'சாமி சத்தியமாண்ணே... நான் பார்த்தது கல்யாணி அக்காவைத்தான்.'
அந்தச் சிறுவன் கூறி முடிக்கவும், கொதித்து வெடிக்கும் நிலைக்கு வந்திருந்தார் வீரண்ணன்.
காலையிலிருந்து அவர் மகள் கல்யாணியைக் காணவில்லை. பதற்றமானார் வீரண்ணன்.
சொல்லாமல் வெளியே செல்லும் பழக்கம் இல்லாதவள் கல்யாணி. அதனால் அவரின் அடியாட்கள் படையைவிட்டுத் தேடப் பணித்திருந்தார் அவர். அந்த நிலையில்தான், ஆடு மேய்க்கும் இந்தச் சிறுவன் தகவலைக் கூறினான். அவனை இழுத்துக் கொண்டு வந்து வீரண்ணன் முன் நிறுத்தியிருந்தது அவர் அடியாள் கும்பல்.
'செல்லப்பாண்டி... ஆள்களைக் கூட்டிட்டுக் கௌம்பு. காதும் காதும் வச்ச மாதிரி இருக்கணும். நான் பெத்த நாய் இன்னும் வீடு வரலை. எவன் கூடயோ பைக்குல உக்கார்ந்து போனதா இந்தப் பையன் சொன்னது உண்மையான்னு விசாரி. அப்படி அது உண்மைன்னா எப்படியாவது அந்த ஓடு காலியைத் தூக்கிட்டு வாங்க. அவளைக் கூட்டிட்டுப் போனானே அவன் இனி இந்தப் பூமியில இருக்கக் கூடாது. அவன் தலையைக் கொண்டு வா... அப்படிக் கொண்டு வந்தா ஒனக்குப் பத்து ஏக்கரை எழுதி வைக்கறேன்.'
'ஐயா, எனக்கு பத்து ஏக்கரும் தேவை இல்ல.. உங்க பணம் காசும் தேவை இல்லை. என்னோட ஒடம்புலயும் இந்த ஜாதி ரத்தம்தான் ஓடுது. இப்ப முதல் இது நம்ம ஜாதிக்கான பிரச்னை. நம்ம பொண்ணை வண்டியில ஏத்திட்டுப் போன அவன் தலையைக் கொண்டு வந்து ஒங்க காலுல வைக்கிறேன். அவன் தலை இல்லாம இந்த ஊர்ப் பக்கம் வரமாட்டேன்' என்றவன் வெறி தலைக்கேறி அங்கிருந்து கிளம்பினான்.
வீரண்ணன் மகள் ஓடிப் போனது ஊர் முழுக்கத் தெரிந்துபோனது. ஊரில் ஐயனார் கோயில் திருவிழா நேரம். ஊரே திருவிழா உற்சாகத்தில் திளைத்திருந்த நேரம் அவர்கள் உற்சாகத்தை வடிய வைத்திருந்தது கல்யாணி ஓடிப் போன சமாசாரம். ஜாதி வெறியில் ஊறிப் போன கிராமம் கல்யாணி ஓடிப் போனதை அவர்கள் வீட்டுப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு துக்கம் கொண்டாடியது. ஊர் ஜனம் முழுவதும் அப்பொழுது ஐயனாரை வேண்டியது இதுதான், 'ஐயனாரே, எங்க கல்யாணி ஓடிப்போனது வேறு ஜாதிப் பையனாக இல்லாமல் எங்கள் ஜாதிப் பையனாக இருக்க வேண்டும்' என்பதுதான்.
கல்யாணி பைக்கில் ஏறிச் சென்றதை பார்த்த சிறுவனை மீண்டும் தனியே விசாரித்துக் கொண்டிருந்தான் செல்லப்பாண்டி. அவர்களின் அடையாளங்களையும், சென்ற திசைகளையும் சிறுவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். சில நிமிடங்கள் செல்லப்பாண்டி அடியாட்களுடன் திட்டமிட்டான். முடிவில் அந்தப் பழைய அம்பாசிடரில் ஏறி, சிறுவன் காண்பித்த திசையில் கிளம்பியது அந்த வெறி கொண்ட கும்பல். அவர்கள் கிளம்பவும், தூரத்தில் நின்ற ஐயனார் சிலை அவர்களைப் பார்த்து உக்கிரமாய் முறைத்தது.
அம்பாசிடர் ஐயனார் சிலை இருந்த இடத்தை நெருங்கியது. ஐயனார் சிலைக்குச் சற்று தொலைவில் அம்பாசிடரை நிறுத்தினான் செல்லப்பாண்டி. 'ஜே.ஜே.' என்றிருக்க வேண்டிய திருவிழாவின் சுவாரஸ்யம் வடிந்து போயிருந்தது. திருவிழாக் கடைகளில் கூட்டம் இல்லை. ஊர் மக்கள் திருவிழாவைப் புறக்கணித்திருந்தனர். ஐயனாருக்கு வெட்டுப்படக் காத்திருந்த கிடாக்கள் தற்காலிகமாக உயிர் பிழைத்து தழைகளை தின்று கொண்டிருந்தது.
ஊரின் தலைக்கட்டு வீரண்ணன் வீட்டில் பிரச்னை என்றதும், திருவிழாவின் உற்சாகம் அங்கே துளியும் காணப்படவில்லை. தங்கள் ஜாதிக்கு ஒரு பிரச்னை என்றதும் ஐயனாரை மறந்து விட்டு ஊர்ப் பண்ணையாரை பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருந்தது அந்த ஊர் ஜனம். ஐயனார் 'தேமே' என்று நின்றிருந்தார் அருவாளுடன்.
செல்லப்பாண்டி கையெடுத்து வணங்கினான் ஐயனாரை. அவன் கண்கள் நெருப்பாய் ஜொலித்தது. வாய்விட்டுச் சூளுரைத்தான்.
'ஐயனாரே, ஒம்ம சக்தி உண்மையிலேயே பெருசுன்னா, நீரு எங்களுக்கான தெய்வமுன்னா எங்க ஐயா பொண்ணை கறைபடாம எங்ககிட்ட ஒப்படையும். அப்படி நீரு செய்தீருன்னா அவனை இழுத்துட்டுப் போனவன் கழுத்தை ஆட்டுக்குப் பதிலா ஒமக்குப் படைக்கிறேன். அப்படி நடந்துச்சுன்னா மட்டும் தான் ஒமக்கு ஆடு, கோழி எல்லாம் பலி குடுப்போம். நீர் உண்மையிலேயே சக்திவாஞ்ச சாமின்னா இதைச் செய்ய முடியும். இதைச் செஞ்சு முடிச்சாத்தான் ஒமக்கு இந்தத் தடவை கொடை சிறப்பா முடியும். இல்லைனா இந்த வருஷம் கொடை கிடையாது.' ஐயனாரை வேண்டி விட்டு... இல்லை இல்லை ஐயனாரை மிரட்டிவிட்டுக் கிளம்பினான் செல்லப்பாண்டி.
ஊரின் ஒவ்வொரு அங்குலத்தையும் விசாரித்தான் செல்லப்பாண்டி. கடைசியாய் முக்கு ரோட்டில் இருந்த பெட்டிக்கடைக்காரன் அங்குசாமியை விசாரித்தான்.
'அங்குசாமிண்ணே ஒரு விஷயம் கேட்பேன்... கரெக்டாச் சொல்லணும்.'
'கேளுலே சொல்லுதேன்.'
'நம்ம வீரண்ணன் மொதலாளிப் பொண்ணு கல்யாணி ஒரு பையனோட ஓடிப் போயிட்டா...'
'ஓ அதுவா... அதன் எட்டூருக்கும் தெரியுமே?'
நக்கலாய் வந்தது அங்குசாமியின் வாயிலிருந்து வார்த்தைகள்.
'சரிண்ணே... உங்க கடை முக்கு ரோட்டுல இருக்கறதால கேட்கறேன். வீரண்ணன் மொதலாளி பொண்ணு இந்தப் பக்கம் ஓராளோட பைக்குல போனதைப்
பார்த்தீங்களா?'
'ஆமாண்டே செல்லப்பாண்டி நான் பார்த்தேன். புல்லட் பைக்குல போச்சுது...'
'எப்படி கரெக்டாச் சொல்லுதீரு?'
'செல்லப்பாண்டி... இங்க எறங்கி நம்ம கடையில கலர் குடிச்சிட்டுப் போச்சுதுங்க ரெண்டும்.'
'கூட இருந்தவனைப் பார்த்தீங்களா?'
'ஆமாம் பார்த்தேன். ஆறடிக்கு மேல ஒசரம், கறுப்பா நல்ல மீசை வச்சிட்டு ஒருத்தான் வந்து கலரு வாங்கினான். நானும் பண்ணையாருக்கு ஒறவுப் பையன்னு நெனச்சேன். ஆளு ஜம்முன்னு இருந்தான். குடிச்ச கலருக்கு காசு குடுத்துட்டு மிச்ச சில்லறை கூட வாங்கலை அவன்.'
'நீங்க அவுங்களைப் பத்தி விசாரிச்சீங்களா?'
'ஆமாம், விசாரிச்சேன். பண்ணையார் பொண்ணுகூட இருக்கறதால விசாரிச்சேன். எங்க இருந்து வர்றீங்க... எங்க போறீங்கன்னு?' கேட்டேன். பரபரப்பானான் செல்லப்பாண்டி.
'சொல்லுண்ணே... சொல்லுண்ணே... அவன் என்ன பதில் சொன்னான்?'
'பக்கத்து டவுனுல ஏதோ காந்தி நகராமுல்ல... அங்க குடியிருக்கறானாம்.'
'மொதலாளி பொண்ணு எதாவது பேசிச்சா?'
'எங்கிட்ட ஒண்ணும் பேசலை. ஆனா அவங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிச்சு.'
'நன்றிண்ணே... காரியம் முடிஞ்சு வந்ததும் ஒனக்குச் சின்னதா ஒரு கோயில் கட்டுறேன்..' என்றவன், அங்குசாமிக்கு நன்றி சொல்லி காரை கிளம்பினான்.
காரில் செல்லச் செல்ல அவன் மனம் கறுவியது, 'டவுன், காந்தி நகர்... இது போதும். இன்னிக்கு வீடு புகுந்து ஒன் கழுத்தை அறுத்து ஐயனாருக்குப் படைச்சிடுறேன்' மனதுக்குள் கறுவியவன் காரை அசுர வேகத்தில் விரட்டினான்.
டவுனுக்குள் விசாரித்து காந்தி நகரைக் கண்டுபிடித்தான் செல்லப்பாண்டி. காந்தி நகர் குடியிருப்பு சற்று வசதியாகவே இருந்தது. சில பல இடங்களில் ஆள் அடையாளம் சொல்லிச் சொல்லி விசாரித்தான். முடிவில் அந்த டிபார்ட்மென்ட் கடைக்காரர் அவன் சொன்ன அடையாளங்கள் கொண்ட அந்த ஆளின் வீட்டை அடையாளம் சொன்னார்.
இப்பொழுது அந்த வீட்டின் முன் சற்றுத் தூரமாய் நின்று நோட்டம்விட்டான் செல்லப்பாண்டி. அதுவும் சிறிய பங்களா டைப்பில் இருந்தது. அகலமான கேட், மாருதி எர்டிகா கார் போர்டிகோவில் நின்றது.
'உள்ளே நாய் இருக்கும் அறிகுறி எதுவும் இல்லை' என்று உறுதிப்படுத்திக் கொண்டான். மெதுவாகக் கேட்டைத் தள்ளித் திறந்து முதலில் செல்லப்பாண்டி உள்ளே சென்றான். சிறிய புல் தரை கடந்து போர்டிகோவின் ஓரமாய், கம்பீரமாய் நின்றது அந்த புல்லட். வெளியிலிருந்து பார்க்கும்
பொழுது, கார் புல்லட்டை மறைத்திருந்தது. 'ஆள் வசதியானவந்தான் போலிருக்கு...' மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், சட்டையின் பின்புறம் தொங்கிய அருவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பின்பு தன் சகாக்களுக்கு கையால் சமிக்ஞை கொடுக்க அவர்களும் மெதுவாய் உள்ளே வந்தனர்.
வீட்டின் கதவுக்கு முன்னே நின்ற செல்லப்பாண்டி காலிங் பெல்லில் கை வைத்துத் தேய்த்தான். உள்ளே குயில் கூவியது. சற்று நேரத்தில் வீரண்ணன் மகள் கல்யாணி வந்து கதவைத் திறந்து நின்றாள். செல்லப்பாண்டியின் கண்களில் அதிர்ச்சி. காரணம் கழுத்தில் புதுத்தாலி, வகிட்டில் குங்குமம் என்று இருந்தாள் கல்யாணி. அந்தக் காட்சியைக் கண்டு நிலைகுலைந்து நிமிர்ந்தவன் கண்கள் அடுத்து நிலைகுத்தியது. அவன் எதிரே அந்த ஐயனாரே நிமிர்ந்து நின்றார். கையில் அரிவாள் இல்லை. ஆனால், பளபளக்கும் கறுப்பு நிறத்தில் கையில் இருந்தது அந்த பிஸ்டல். அது செல்லப்பாண்டியை முறைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஐயனாரின் முகத்தில் புன்னகை.
புன்னகை மாறாமல் செல்லப்பாண்டியிடம் கேட்டான் அவன், 'வா நண்பா... ஏன் அப்படி தெகைச்சுப் போய் நின்னுட்ட? நீ எப்ப வருவன்னு தான் காத்துக்கிட்டிருந்தேன். நான் நெனச்ச மாதிரி டான்னு வந்து நின்னுட்ட தாங்க்ஸ். ஊருல எல்லாரும் சவுக்கியமா? ஊருல ஐயனார் கோயில் கொடை எல்லாம் எப்படிப் போகுது?' சிறு புன்னகையுடன் அவன் வினவவும், பேச்செழாமல் நின்றான் செல்லப்பாண்டி. அவன் பதில் கூற முடியாமல் திகைத்து நிற்கவே அவன் தொடர்ந்தான்.
'வீட்டுக்கு வந்த விருந்தாளி நீ அருவாளோட வந்ததனால, நான் துப்பாக்கியை நீட்ட வேண்டியதாயிடிச்சு. தப்பா எடுத்துக்காத. ஒக்காரு நண்பா... உன் ஃபிரண்ட்ஸ்களையும் கூப்பிடு... அவங்களும் உள்ளே வரட்டும். அவன் மெதுவாக, ஆனால் சற்று கடுமையுடன் கூறவும் செல்லப்பாண்டி குரல் கொடுத்தான்.
'ஏலே, எல்லாரும் உள்ளே வாங்க...'
செல்லப்பாண்டி அழைக்கவும் அனைவரும் உள்ளே வந்தனர். கூட்டமாய் நின்றவர்களை கூடத்தில் கிடந்த சோபாவில் அமரச் சொன்னவன், தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்.
'என் பேரு கருப்பசாமி... கருப்பசாமி ஐபிஎஸ்... அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்...' அவன் கூறி முடிக்க, அனைவர் முகங்களும் திகிலில் விழுந்தது. செல்லப்பாண்டிக்கு உடல் முழுவதும் வியர்த்து ஊற்றிற்று.
அவன் தொடர்ந்தான். 'எனக்கு இன்னொரு பேரும் உண்டு. அது என்கவுன்ட்டர் கருப்பசாமி! என்னை நீங்க மொத மொத இப்பத்தான் பார்த்தாலும் என்னோட பேரைத் தெரிஞ்சிருப்பீங்க. இப்பத்தான் திருநெல்வேலியில இருந்து ட்ரான்ஸ்பர் ஆகி வந்து கொஞ்சம் நாள் தான் ஆகுது' அவன் சொல்லி நிறுத்த, முதுகுத்தண்டு சில்லிட்டது செல்லப்பாண்டிக்கு.
அவனே தொடர்ந்தான். 'கல்யாணி என் காலேஜ் மேட். நாங்க காலேஜில இருந்தே பழக்கம். நாங்க ஏழு வருஷமா எங்க காதலைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம். ஒரு நல்ல நெலைக்கு வந்தப்புறம் தான் கல்யாணம்னு உறுதியா இருந்தோம். நான் ஐபிஎஸ் ஆகி வேலையில சேர்ந்து மூணு வருஷம் முடிஞ்ச பின்னாடிதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணியோட அப்பா கண்டிப்பா வேற ஜாதிப் பையனுக்கு அவரோட பொண்ணைக் குடுக்க மாட்டார்னு அவரோட மகளே ரொம்ப உறுதியாச் சொன்னா. அதனாலதான் இந்த ஓடிப்போய்க்
கல்யாணம்.
கல்யாணி ஓடிப் போனது தெரிஞ்ச ஒடனே அவ அப்பா ஆணவக் கொலை செய்ய ஆள் அனுப்புவாருன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நீங்க தேடி வரணுங்கறதுக்காகவே ஊருல இருந்தே தடயங்களை விதைச்சுட்டே வந்தேன். வேணும்னுதான் முக்கு ரோட்டுக் கடையில கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு நாங்க போற இடத்தோட அட்ரசையும் சொல்லிட்டு வந்தேன். நீங்களும் அட்ரஸ் கண்டுபுடிச்சு அருவாளோட டான்னு வந்து நின்னுட்டீங்க..' என்று கூறியவன் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.
'கல்யாணி அஞ்சு காபி...'
சிறிது நேரத்தில் கல்யாணி காபிக் கோப்பைகளுடன் வந்தாள்.
தயங்கியவர்களிடம் கூறினாள், 'எடுத்துக்கங்க அண்ணன்களே... ஒண்ணும் தீட்டு ஒட்டிக்காது. இது ஒங்க சாதிப் பொண்ணு போட்ட காபி தான். ஒங்க மொதலாளிட்டச் சொல்லுங்க. அதான் எங்க அப்பாக்கிட்ட... அவரு பொண்ணு இங்க சந்தோஷமா இருக்கறான்னு...'
'இங்க பாரு நண்பா... உங்க மொதலாளி பொண்ணை நான் நல்லா வச்சுக் காப்பாத்துவேன். நீங்க உள்ளே வரணுங்கறதுக்காகத்தான் கேட்டுல இருந்த என் நேம்போர்டை எடுத்துட்டு, செண்ட்ரியைக்கூட வீட்டுக்கு அனுப்பிட்டேன்' அவன் கூறி முடிக்க, சத்தமில்லாமல் காலியானது காபி கோப்பைகள். புறப்பட எத்தனித்தவர்களை கையமர்த்திக் கூறினான்...
'அந்த அருவாள்களை கீழ வச்சிட்டுப் போங்க ...'
சத்தமில்லாமல் தரையில் பணிந்தது அந்த ஐந்து அருவாள்களும்.
வீரண்ணன் வீடு. அவர்கள் முன் நின்றிருந்தான் செல்லப்பாண்டி... கூடவே அவர் அடியாட்களும்.
'என்னலே ஆச்சு... வெறுங்கையோட வந்திருக்க? அந்த பரதேசிப் பயலோட தலையைக் கொண்டு வராம ஊருக்குள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டுப் போன இப்ப சும்மா வந்து நிக்கற?'
சிறிது நேரம் செல்லப்பாண்டியிடமிருந்து எந்த வார்த்தையும் புறப்படவில்லை. அவன் எதோ பரவச நிலையில் இருப்பவன் போல் நின்றிருந்தான். அவன் தோளைத் தொட்டு உலுக்கினார் வீரண்ணன். அப்புறமே சுய நினைவுக்கு வந்தான் செல்லப்பாண்டி.
'என்ன மொதலாளி... என்ன கேட்டீங்க?'
'ஆங்... ஒனக்கு கிறுக்குப் புடிச்சிருச்சான்னு கேட்டேன். என் பொன்ணைக் கூட்டிட்டுப் போனவன் தலையைக் கொண்டு வர்றேன்னு புறப்பட்டியே... அவன் தலை எங்க? நான் பெத்த ஓடு காலி எங்கல?'
'மொ.. த.. லாளி...' என்று திணறினான் செல்லப்பாண்டி.
'ஏலேய்... எனக்குப் பதிலைச் சொல்லு... இல்ல இப்ப உன் தலையை நான் எடுக்கப் போறேன்...'
'மொதலாளி... உங்க பொண்ணு அந்த ஐயனார் பாதுகாப்புல இருக்கறா?'
'என்னலே உளறுற?'
'ஆமாம், மொதலாளி. கல்யாணிம்மா ஐயனார் பாதுகாப்புல தான் இருக்கறாங்க! ஐயனார் தலையை எடுக்கற அளவுக்கு எனக்கு திராணி இல்லையா...' என்று கூறி முடித்தவன், அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். தன் அடியாள் கூறுவது புரிந்தும் புரியாமலும் திகைத்து நின்றார் வீரண்ணன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏ.ஐ.: பேச்சிலும் காணொலியிலும் கவனம்!
அனுபவம் பெரிது...
இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4
மனதின் தடங்கள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


