இயற்கை அன்னையின் எல்லையில்லா வள்ளல் தன்மையை வரமாகப் பெற்றிருக்கும் மாநிலம் கேரளம். அங்கு கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய சின்னஞ்சிறு ஊரான குமரகம், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. கேரளத்தின் மிகப் பெரிய ஏரியாகத் திகழும் வேம்ப நாடு ஏரி குமரகத்தில்தான் அமைந்துள்ளது. அதன் வடகரையில் குமரகமும், தென்கரையில் ஆலப்புழையும் எழிலோடு காட்சிதருகிறது.
வேம்ப நாடு ஏரியில் பல நதிகள் வந்து சங்கமிப்பதால் ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி, பல மைல்கள் சுற்றளவில் கடல் போல் விரிந்து, பரந்து காட்சியளிக்கிறது. இது 3 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை இடத்துக்கு இடம் ஆழமாகக் காணப்படுகிறது.
இந்த ஏரி பலவிதமான சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளது. பறவைகள் சரணாலயமாகவும் திகழும் இந்த ஏரியில் நைஜீரியன் வாத்து, நீர்க் காகம், ஐரோப்பியப் பறவைகள் என சீசன் காலத்தில் ஏராளமான பறவைகள் கண்டம்விட்டு கண்டம் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வந்து ஒன்று சேர்கின்றன. இங்கேயே தங்கியிருந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு தங்கள் குஞ்சுகளுடன் சந்தோஷமாய்த் திரும்பிச் செல்கின்றன.
இங்கு சூரிய அஸ்தமன காட்சியும், ஏரியைச் சுற்றிலும் மரங்கள் பச்சைப் பசேல் எனச் செழித்து வளர்ந்திருப்பதும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. இந்த ஏரி முழுவதும் நீர் நிரம்பி, மேல் திசையில் உள்ள அரபிக்கடலில் சென்று கலக்கும். கோடைக்காலங்களில் சற்றே நீர் இருப்பு குறையும் வேளைகளில் நதிக்கும் கடலுக்கும் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் ஷட்டர் கதவுகளை ஏற்றிவிட்டு, கடல் நீர் உள்ளே பாயுமாறு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் குமரகத்தில் இருந்து ஆலப்புழைக்கு பயணிப்பதற்கு நீர்வழிப் போக்குவரத்துச் செயல்பட்டு வருகிறது. மீன் வளர்ப்புப் பண்ணையாகவும் இந்த ஏரி திகழ்கிறது. இந்த நீர் நன்னீராக இருப்பதால், குமரகத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, மக்களின் உணவு ஆதாரமாகத் திகழ்கிறது.
குமரகத்தில் ஏராளமான படகு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் படுக்கை அறை வசதிகள் கொண்ட பல படகு இல்லங்களும் உள்ளன. மேல், கீழ் தளங்களைக் கொண்டதாகவும் , குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகவும் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
படகு இல்லம்: உயிர் காக்கும் ஆபத்துக் கால சாதனங்களும், அரசின் அனுமதிச் சான்றுகளும் இந்தப் படகு இல்லங்களில் நம்பகத்தன்மையை பகர்வதாய் உள்ளன. படகு இல்லங்களைப் போல் ஏரியைச் சுற்றிலும் வெகு நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளும் ஏராளம் உள்ளன.
இந்த ஏரியின் நடுநாயகமாக அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ஆளரவமற்ற தீவு ஒன்றுள்ளது. மனித சஞ்சாரம் அற்ற இந்த அழகிய தீவில் இந்துக் கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது.
சுற்றுவட்டாரத்தில் வசிக்கிற மக்கள் பலரும் செப்டம்பர் மாதத்தில் இந்தக் கோயிலில் ஒன்றுகூடி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தீவுக்கு வட மேற்கே இது போன்ற மற்றொரு தீவும் உள்ளது.
குமரகத்தில் உள்ள படகு இல்லத்தில் கிளம்பி, வேப்பநாட்டு ஏரியின் அழகையும், சுற்றிலும் வளங்களின் வனப்பையும் ஆழப்புழை நகரின் கலையழகு கட்டடங்களையும், துள்ளிக் குதித்து விளையாடி மகிழும் மீன்களை சரலெனப் பாய்ந்து வந்து லாவகமாகப் பிடித்து இரையாக்கிப் பறக்கும் பல்வேறு நாட்டு பறவைகளையும் ஆனந்தமாய் ரசிக்கலாம். அன்றைய தினம் இரவு படகு இல்லத்திலேயே சொகுசான குளிர்சாதன அறையில் தங்கிக் கொள்ளலாம். வேளாவேளைக்கு நமக்குப் பிடித்தமான சுவையான உணவுப் பதார்த்தங்களை படகுக்காரர்களே பக்குவமாய் தயார் செய்து வழங்குவார்கள்.
மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்..: மனதுக்கு மகிழ்ச்சி அளித்திடும் இந்தச் சுற்றுலா மையம் உள்நாடு, வெளிநாடு எனப் பலதரப்பினரை ஈர்த்து வருகிறது. புது
மணத் தம்பதியர் தேனிலவுக் கொண்டாட்டங்களுக்காகவும் இங்கே அதிக அளவில் குவிகிறார்கள். இத்தகைய அம்சங்களோடு முடிந்துவிடவில்லை குமரகத்தின் முக்கியத்துவம்.
உடலுக்குச் சுகமளித்து, உபாதைகள் நீங்கப் பெற்று, உற்சாகத் துள்ளலை நமக்கு அளிக்கவல்ல மூலிகை மசாஜ் நிலையங்கள் அங்கு அநேகம். பிரபலங்கள் மட்டுமே இங்கு வந்து குளு குளு சூழ்நிலையில், மூலிகைச் சிகிச்சை பெற்று வந்த அசாதாரண சூழல் இன்று அடியோடு மாறி, சாமானிய மக்களுக்கும் அதுபோன்ற இயற்கை வைத்திய முறையை மேற்கொள்கின்றனர்.
புதுமை விரும்பிகளுக்கு இவ்வூர் ஒரு புது உலகம். இயற்கையை ரசித்துக்கொண்டாடுபவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். கவலைகள் மறந்து இன்று புதிதாய்ப் பிறந்தவர்கள் போல் உல்லாசமாய் வானில் சிறகடிக்கும் சந்தர்ப்பம் இங்கே சாத்தியமாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி குழுமத்துடன் வேதாந்து குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

நதிநீர் இணைப்பு - பகீரத முயற்சி!

மணிமுத்தாறு 3,4ஆவது ரீச் கால்வாயில் கடைமடைக்கு நீா்வரத்தை அறிய சிறப்புக் குழு
பசுமைச் சோலையில் பரமஹம்சர்: கோவை அருகே ஒரு கோயில்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



