வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகளைக் கொண்ட ஊரே திருவையாறு (திரு+ஐ+ஆறு). தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவிலுள்ள திருவையாறைச் சென்றடைய வழியிலுள்ள ஐந்து ஆறுகளைக் கடக்கவேண்டும்.
இவற்றைக் கடக்க 190 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடங்களே பயன்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த ஐந்து ஆறுகளிலும் பாலங்கள் கட்டப்பட்டன. வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய நான்கு பாலங்களை மராட்டிய வம்சத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சிவாஜி தனது சொந்த செலவில் கட்டினார். அக்காலத்தில் காவிரியில் அணைகள் இல்லாத நிலையிலும், நீரோட்டத்துக்கு இடையே இந்தப் பாலங்கள் கட்டப்பட்டன.
பல்லக்குகள், குதிரை வண்டிகள், இலகுரக, கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்த காவிரிப் பாலம் 2001- ஆம் ஆண்டில் இடிந்து விழுந்ததால், புதிதாகக் கட்டப்பட்டு 2003-இல் திறக்கப்பட்டது. வெண்ணாறு பாலம் 2014-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த நிலையில், அதுவும் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்பட்டது. வடவாறு பாலமும் இடித்து புதிதாகக் கட்டப்பட்டது. அம்மன்பேட்டை வெட்டாற்றில் வாகனப் போக்குவரத்துக்காக அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மன்னர் இரண்டாம் சிவாஜி கட்டிய பாலங்களுக்குச் சாட்சியாக இப்போதும் இருப்பது வெட்டாறு பாலம்தான்.
இதுகுறித்து திருவையாறு வரலாற்று ஆர்வலரான வழக்குரைஞர் நா. பிரேமசாயி கூறியது:
'சோழர்கள், நாயக்கர்களுக்குப் பின்னர் தஞ்சாவூரை மராட்டியர்கள் ஆட்சி செய்தனர். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜிக்குப் பின்னர், தஞ்சாவூர் ராஜ்ஜியத்தின் முழு அதிகாரமும் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியிடம் சென்றது. இரண்டாம் சரபோஜியின் மகன் இரண்டாம் சிவாஜி பெயரளவுக்கு மட்டுமே மன்னராக இருந்தார். ஆங்கிலேயர்கள் வழங்கிய மானியம் உள்ளிட்ட சிறு தொகைகளை வைத்தே இரண்டாம் சிவாஜி வாழ்க்கையை நடத்தி வந்தார். திருவையாறுக்குச் செல்லும் வழியிலுள்ள ஐந்து ஆறுகளிலும் பாலம் கட்ட வேண்டும் என்ற ஆர்வம் இரண்டாம் சிவாஜிக்கு எழுந்தது.
முறையான பராமரிப்பின்மையால், பாசனக் கட்டமைப்புகள் சீரழிந்து, பயிர் சாகுபடியும் பாதிக்கப்பட்டது. இதனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மக்களால் செலுத்த முடியாததால், ஆங்கிலேயர்களுக்கு நில வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆங்கிலேய ராணுவப் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது, காவிரியில் குடகு முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை எந்தவித அணையும் இல்லாததால், எந்த நேரமும் காட்டாறு போல ஓடியது. இதில், எப்படி பாசனக் கட்டுமானங்களை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனால் காவிரியில் நீரின் போக்கைத் தாங்கக் கூடிய கட்டுமானங்களைக் கட்ட முடியும் என்பதை மேஜர் சிம் நிரூபித்தார்.
காவிரியில் ஆங்கிலேயர்கள் சில கட்டுமானங்களைக் கட்டியவுடன் திருவையாறு செல்லும் வழியிலுள்ள 5 ஆறுகளிலும் பாலம் கட்ட முடியும் என்ற நம்பிக்கை இரண்டாம் சிவாஜிக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக இரண்டாம் சிவாஜி விடுத்த கோரிக்கையை அப்போதைய தஞ்சாவூர் ரெசிடென்ட் கிண்டர்ஸி ஒப்புதல் அளித்து, அதற்கான பணியையும் தொடங்கினார். அகலம் குறைவான தஞ்சாவூர் கரந்தையிலுள்ள வடவாற்றில் பாலம் கட்டும் பணி 1831- ஆம் ஆண்டில் தொடங்கி, 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. பின்னர், பள்ளியக்ரஹாரத்திலுள்ள வெண்ணாற்றில் தொடங்கிய பால கட்டுமானப் பணி, 1836 -ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
அம்மன்பேட்டையிலுள்ள வெட்டாறு, கண்டியூர் அருகேயுள்ள குடமுருட்டி, திருவையாறிலுள்ள காவிரி ஆகிய ஆறுகளில் பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1847- ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. வெண்ணாறு பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன், பத்து ஆண்டுகள் கழித்தே காவிரிப் பால கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதற்கு தஞ்சாவூரில் ரெசிடென்ட்டுகளாக இருந்த மோண்ட்கோமெரி, ஜி.எப். பிஷப் ஆகியோர் ஆதரவாக இருந்தனர்.

இரண்டாம் சிவாஜி
இந்தப் பாலங்கள் கட்டுவதற்கு மூங்கில்கள், பனைமரங்களைக் கொண்டு சாரங்கள் அமைக்கப்பட்டன. சுட்ட செங்கல், களிமண், சுண்ணாம்புக் கலவையில் நாயக்கர் கால பாணியில் தூண் வளைவுகள் அமைக்கப்பட்டு, பாலங்கள் கட்டப்பட்டன. இந்தக் கட்டுமானங்கள் ஆங்கிலேயப் பொறியாளர் கேப்டன் லாஃபோர்ட் பொறுப்பில் கட்டி முடிக்கப்பட்டன.
அக்காலத்தில் காவிரியில் எந்த நேரமும் நீரோட்டம், பெரு வெள்ளம் இருந்ததால், பெரும் சவால்களுக்கிடையே இந்த ஐந்து பாலங்களும் கட்டப்பட்டன. இதில், வெண்ணாறு கட்டும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, ஆங்கிலேயப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
அப்போது, கல்லணையில் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் மணல் போக்கி கட்டினார். ஆங்கிலேயர்கள் கல்லணை மணல் போக்கி கட்டுமானம், கரை சீரமைப்புக்குச் செலவு செய்ததால், இந்தப் பாலங்கள் கட்டுவதற்கு செலவிடவில்லை. இரண்டாம் சிவாஜி தனது சொந்தப் பணத்தைக் கொடுத்ததால், வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய 4 பாலங்கள் கட்டப்பட்டன.
இந்த 4 பாலங்கள் கட்டுவதற்கான ரூ. 71 ஆயிரத்தை மன்னர் இரண்டாம் சிவாஜி தனது சொந்த செலவில் செய்தார் என திருவையாறு காவிரிப் பால கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில், 1846 - 47 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மகாராஜா சிவாஜி ராஜாவின் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டது.
அக்காலத்தில் சர் எச்.சி. மோண்ட்கோமெரி மற்றும் ஜி.எப். பிஷப் பொறுப்பு வகிக்கும் 'ரெசிடென்ட்' அதிகாரிகளாகவும், கேப்டன் ஈ. லாஃபோர்ட் சிவில் பொறியாளராகவும் பணியாற்றினர்.
பொது நலன் கருதி மொத்தம் 71,000 ரூபாய் செலவில் நான்கு பாலங்களைக் கட்டி, தஞ்சாவூருக்கும், திருவையாறுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மகாராஜா ஏற்படுத்தினார். ஏறத்தாழ 150 ஆண்டுகள் நீடித்த காவிரிப் பாலம் 2001-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடிந்து விழுந்தது. அப்போது, இந்தக் கல்வெட்டும் சிதைந்து போனது வேதனைக்குரியது. காவிரிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 1849- ஆம் ஆண்டில் இருபுறமும் பக்கவாட்டுச் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதற்கு ஏற்பட்ட ரூ. 5,705 செலவையும் மன்னர் இரண்டாம் சிவாஜியே ஏற்றார்.
அக்காலத்தில் ஆங்கிலேயர் கொடுத்த மானியம் உள்ளிட்ட சொற்ப வருவாயைக் கொண்டு மன்னர் இரண்டாம் சரபோஜி வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய 4 பாலங்களையும் கட்டியுள்ளார். வடவாறு பாலம் கட்டுமானப் பணிக்கான செலவு குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும், , அதற்கும் அதன் பக்கவாட்டுச் சுவர் கட்டுவதற்கான செலவையும் மன்னர் இரண்டாம் சிவாஜியே செய்திருப்பார்' என்கிறார் பிரேமசாயி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டை, கிளாங்காடு பகுதிகளில் சிவாஜி கணேசன் நினைவு தினம்

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக அமெரிக்கா தாக்குதல்; பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்
காவிரி பழைய பாலம் மூடல்: பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

பராமரிப்புப் பணிகள்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பழைய பாலம் இன்று முதல் மூடல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



