இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பேல்பூரி - 14-06-2026

வாழ்க்கை மர்மமான ஒரு புத்தகம். நினைத்தாலும் நாளைய பக்கத்தைப் புரட்டிப் பார்க்கமுடியாது.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:05 am IST

கண்டது

(கோவை - காரமடை மின் வாரிய அலுவலகத்தில் லைன்மேன்களுக்காக வைக்கப்பட்டுள்ள பலகையில் இடம்பெற்றிருந்த வாசகம்)

'இடுப்புக் கயிறே இணையற்ற நண்பன்...

எர்த்து ராடுகள் எமனையும் வெல்லும்!'

-ஆர்.தீனதயாளன், காரமடை.

(தஞ்சாவூரில் ஜோதிட நிலையம் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

'வாழ்க்கை மர்மமான ஒரு புத்தகம். நினைத்தாலும் நாளைய பக்கத்தைப் புரட்டிப் பார்க்கமுடியாது.

எவ்வளவு முயற்சித்தாலும் நேற்றைய பக்கத்தைத் திருத்தி எழுதிவிடமுடியாது!'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

(நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே ஓர் ஊரின் பெயர்)

'வினைதீர்த்தபுரம்.'

-கி.கணேசன், நமசிவாயபுரம்.

கேட்டது

(தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)

'குடை சூப்பரா இருக்கே... ஆன்லைன்ல வாங்கினதா?'

'இல்லை... நம்ப கோபாலன் கடையில போன் பண்ணி, வீட்டுக்கு அனுப்பச் சொன்னேன்...'

'அப்ப, 'போன் லைன்ல' வாங்கினதுன்னு சொல்லுங்க!'

-வி.ரேவதி, தஞ்சை.

(கோவை வடவள்ளியில் ஒரு வீட்டில்)

'200 யூனிட் மின்சாரம் தான் இலவசமாச்சே... பிறகு ஏன் பேன், லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கீங்க?'

'அடுத்த வாரம் சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க... அப்போ தேவைப்படும்னு இப்பவே சேமிச்சு வச்சுக்கலாம்னுதான்!'

-எம்.பி.தினேஷ், கோவை.

(விழுப்புரத்தில் பூங்கா ஒன்றில் தந்தையும் மகனும்)

'மௌன விரதம்னா என்ன டாடி?'

'உங்கம்மா என்னைத் திட்ட ஆரம்பிக்கும்போது நான் எதுவும் பேசாம இருக்கிறதுதான்!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!

'விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்...

விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

மைக்ரோ கதை

ஆறு வருடங்களுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பன் ரமேஷை எதேச்சையாகச் சந்தித்த மாணிக்கம், 'எப்படி இருக்கே ரமேஷ்?' என்று அவரிடம் கேட்டார்.

'அதை ஏம்பா கேக்குறே... நான் வாங்குற பென்சனை மனைவியும் மகனும் பிடுங்கிக்கிறாங்க. மருமகளும் மதிக்கிறதில்லை. எல்லா வேலைக்கும் நான்தான் அலையறேன்.' என்று புலம்பினார், ரமேஷ்.

அவரிடம் மாணிக்கம், 'அது பரவாயில்லை... என் ஒரே பையன் விரட்டி விட்ட நிலையில், பென்ஷன் வாங்குறதால பிச்சை எடுக்காம நானும் என் சம்சாரமும் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறோம்.' என்றார்.

'என்பாடு பரவாயில்லை... இக்கரைக்கு அக்கரை பச்சைனு சும்மாவா சொன்னாங்க...' என்று தனக்குள் முனகியபடி மாணிக்கத்திடம் விடைபெற்றுச் சென்றார் ரமேஷ்.

-இரா. சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

எஸ்.எம்.எஸ்.

'மிகச் சிறந்த படிப்பு... மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று

படிப்பதுதான்!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

அப்படீங்களா!

இணையவழியில் தகவல்களை வேகமாகப் பகிர உதவும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களை இந்தியர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்குக்காகவும், வணிகப் பயன்பாட்டுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இந்தச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முதலில் வாட்ஸ் ஆஃப்பில் சேமிப்புக் கணக்கில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவலைப் பகிர முடியும். பின்னர் அதிக அளவில் பயனர்களைச் சேர்க்கவும், தகவல்களைப் பகிரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் வணிகத்துக்கு தனியாக வாட்ஸ் ஆஃப் வெளியிடப்பட்டது. தற்போது, வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் ஆகியவற்றை கட்டணச் சேவையாக மாற்ற 'பிளஸ்' என்ற புதிய சேவையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் சேமிக்கப்படும் தரவுகளை வைத்து மெட்டா நிறுவனம் வருவாய் ஈட்டி வருவதாகவும், இது தனிமனித உரிமைக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த புதிய கட்டணச் சேவையால் இந்த குற்றச்சாட்டை முறியடிக்க மெட்டா நிறுவனம் முயன்று வருகிறது.

இந்தக் கட்டணச் சேவையில் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சில சிறப்பு அம்சங்களை வழங்க மெட்டா நிறுவனம் முடிவுசெய்துள்ளது. கட்டண விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பிளஸ், ஃபேஸ்புக் பிளஸ் மாதத்துக்கு ரூ.387-ஆகவும், வாட்ஸ் ஆஃப் பிளஸ் ரூ.290-ஆகவும் நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.