இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காலம்தோறும் கம்பன்

சோழ நாடாம் தேரழுந்தூரில் பிறந்து, புலமை பெற்று, பல்லவ நாட்டில் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்று, ஸ்ரீரங்கத்தில் கம்ப காதையை அரங்கேற்றி, இறுதி நாள்களில் செட்டிநாட்டுப் பகுதியான நாட்டரசன் கோட்டையிலே வாழ்ந்தவர் கம்பன்.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:31 pm

வெ.கணேசன்

சோழ நாடாம் தேரழுந்தூரில் பிறந்து, புலமை பெற்று, பல்லவ நாட்டில் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்று, ஸ்ரீரங்கத்தில் கம்ப காதையை அரங்கேற்றி, இறுதி நாள்களில் செட்டிநாட்டுப் பகுதியான நாட்டரசன்கோட்டையிலே வாழ்ந்தவர் கம்பன். கோடானு கோடிபேர் கம்ப காப்பியத்தின் அமிர்தச் சுவையைப் பருகி, அதன் அருமையை முழுவதுமாய் உணர்ந்துள்ளனர்.

நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி எனப்படும் அருள்மிகு கண்ணாத்தாள் கோயிலில், பங்குனி அஸ்த நட்சத்திரத்தன்று மாலை அம்பாள் தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, கம்பனுக்குத் திருமஞ்சனம் செய்து அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். அப்போது பிரசாதமாக கம்பன் அதிஷ்டானத்துக்கு அருகேயுள்ள குழியிலிருந்து எடுக்கப்பட்ட நாட்டுச்சர்க்கரை போன்ற அபூர்வ, அதிசய திருமண் தரப்படுகிறது.

வாழ்வில் உயர்கல்வி அந்தஸ்து பெற விரும்புபவர்கள் இந்தத் திருமண்ணை சிறிதளவு தண்ணீரில் கரைத்து நம்பிக்கையோடு அருந்துகின்றனர். பிறவியில் வாய் பேச இயலாதவர்களும் இதை நம்பிக்கையோடு அருந்துவதால் பலன் கிட்டுவதாக நம்பப்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தோர் பிறந்த குழந்தையின் நாவில் இந்தத் திருமண் கலந்தநீரை மகிழ்வோடு தொட்டு வைக்கும் நிகழ்ச்சி தொன்று தொட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது.

தேரழுந்தூரில்...

இவர் வாழ்ந்த காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என ஒருசாரார் வரையறுத்துச் சொல்கின்றனர். அதனை மறுப்போரும் உண்டு. மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் தேரழுந்தூர் உள்ளது. இவ்வூரை 'கம்பர் பிறந்த ஊர்', 'காவிரி தங்கும் ஊர்', 'கும்பமுனி (அகத்தியர்) சாபம் நீங்கிய ஊர்' என்ற சிறப்பித்துச் சொல்வர்.

இங்கு கம்பராமாயணத்தை கம்பன் அரங்கேற்றிய பங்குனி அஸ்த நட்சத்திர நன்னாளில் கம்பன் பெருவிழாவை 1939-இல் இருந்தே கம்பன் கழகத்தினர் கொண்டாடுகின்றனர்.

தேரழுந்தூரில் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக 'கம்பர் மேடு' என்று அழைக்கப்படும் தொல்லியல் பெருமையுடைய இடம் மண்மேடாக புகழ் மணமும், புராதனப் பெருமையும் சொல்லி நிற்கிறது. கம்பன் வாழ்ந்த சமகாலத்தில் தேரழுந்தூருக்குப் பக்கத்து ஊரான கூத்தனூரில் ஒட்டக்கூத்தர் பெருங்கவிஞராக வாழ்ந்திருந்தார்.

தேரழுந்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கதிர்வேய்ந்த மங்கலம். இங்கு வாழ்ந்த சடையப்பரும் கம்பனை ஆதரித்துள்ளார். தேரழுந்தூரில் 1984-இல் எழில்நயமிக்க கம்பன் கோட்டம் உருவானது. 1999-இல் இதனை விரிவுபடுத்தி திருமண மண்டபமும் கட்டப்பட்டது.

பிரதான அரங்கின் முகப்பில் நின்ற தோற்றத்தில் ஏடு தாங்கிய கம்பனின் முழு உருவச் சிலை உள்ளது. 1939-க்கு முன்பிருந்தே கம்பன் கழகத்தாரால் ஆண்டுதோறும் கம்பர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றனர். பட்டிமன்றப் பேச்சாளரும், கம்பன் கழகச் செயலாளருமான ஜானகிராமன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தற்போது விழாவை நடத்துகின்றனர்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில்..

சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்று, வால்மீகி ராமாயணத்தைச் செம்மையாகத் தமிழில் படைத்து, 10 ஆயிரம் செய்யுள்களில் தேனினும் இனிய தீஞ்சுவையில் பாடி வைத்தார் கம்பர். இவ்வாறு செம்மையாக எழுதி முடித்த கம்பராமாயணத்தை அவையோர் முன்னிலையில், 885-ஆம் ஆண்டு பங்குனி மாதம் அஸ்த நட்சத்திர நன்னாளில் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்க நாச்சியார் தாயார் சந்நிதி எதிரே உள்ள நாலுகால் மண்டபத்தில் அரங்கேற்றினார். இந்த மண்டபத்தில் இடப்புறம் வடக்கு வாசல் கோபுரமும், வலப்புறம் ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சந்நிதியும் அமைந்துள்ளன.

செட்டிநாட்டில்..

கம்பன் பேரின்பப் பெரு வாழ்வைத் தேடி ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி செட்டிநாட்டுக்கு வந்தார். தமிழுக்கும், சைவத்துக்கும் செயற்கரிய செயல்களைச் செய்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மிகுதியாக வாழும் ஊர் சிவகங்கைக்கு அருகே உள்ள நாட்டரசன்கோட்டை.

துறவிக் கோலத்தில் கம்பன் நடையாய் பயணிக்கும்போது காளையார்கோவிலைத் தாண்டி முடிக்கரை வழியாக அக்காலத்தில் பெருவழிப்பாதை இருந்தது. அங்கு ஆடு மேய்க்கும் சிறுவனிடம், 'முடிக்கரைக்குச் செல்லும் வழி யாது?' என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சிறுவனோ, பக்கத்தில் கடல் போல் நிரம்பி நின்ற குளுமையான பெரிய குளம் ஒன்றைச் சுட்டிக் காட்டி, 'இந்த அடிக்கரையைப் பற்றிப் போனால் முடிக்கரை போய்ச்சேரலாம்' எனப் பதில் அளித்துள்ளார்.

அதாவது, 'கடல் போல் பெருகிக் கிடக்கும் குளத்தில் இக்கரை வழியே ஏறி நடந்து மறுகரை வரை சென்றால், அடுத்து முடிக்கரை ஊர் வரும்' என்பது பொருளாகும். இதனால் மனம் மகிழ்ந்தார். பின்னர், அடர்ந்து செழித்திருந்த வனப்பகுதியில் தங்கிக் கொண்டு, மூலிகை மருத்துவத்தைச் செய்து வந்தார்.

தன் இறுதி நாள்களை அங்கு மன நிறைவோடு கழித்து, நல்ல நாளில் உயிர்நீத்தார். அவரது பூத உடலை அங்கேயே நல்லடக்கம் செய்து, அதிஷ்டானம் ஒன்றை அமைத்துள்ளனர். இந்த நினைவிடம் நாட்டரசன் கோட்டைக்கு கிழக்கே ஒரு கி.மீ. தொலைவில் கருதுப்பட்டி என்ற இடத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வனத்துக்குள் இருக்கிறது.

கருவறை வாசலில் ஆவிச்சி செட்டியார், அருணாசலம் செட்டியார் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. நாட்டரசன்கோட்டை கம்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் விசாலாட்சி, ராமநாதன், சுந்தர், அருணாசலம் ஆகியோர் இந்தக் கோயிலைப் பராமரித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசும் இங்கு மணிமண்டபத்தையும், கண்காட்சி அரங்கத்தையும் கட்டுவதற்கு முனைப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

120 ஆண்டுகளாக பங்குனி அஸ்த நட்சத்திர நன்னாளில் (இந்த ஆண்டு ஏப்ரல் 2) கம்பன் பெருவிழா நாட்டரசன்கோட்டையிலும், நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பிலும் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.