நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு! தமிழ்நாட்டில் 8 மணிநேரமாக மின்தடை நீட்டிக்கப்படுகிறதா? மின்வாரியம் விளக்கம்! வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!

ஆலயமா... நினைவாலயமா...

'பாரதமாதாவுக்கு பாப்பாரப்பட்டியில் ஆலயம் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த ஆலயம் இந்து மதத்துக்கோ அல்லது வேறு ஒரு மதத்துக்கோ சொந்தமானது அல்ல.

Published On :

ஆர். ராதாகிருஷ்ணன்

'பாரதமாதாவுக்கு பாப்பாரப்பட்டியில் ஆலயம் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த ஆலயம் இந்து மதத்துக்கோ அல்லது வேறு ஒரு மதத்துக்கோ சொந்தமானது அல்ல. இந்திய நாட்டில் பிறக்கும் நல்வாய்ப்பு பெற்ற அனைவருக்கும் சொந்தமானதாக இந்த ஆலயம் இருக்கும். எனது மதம் பாரதிய மதமாகும். இந்திய நாட்டில் பிறந்த அனைவரது ஒற்றுமையை இந்த ஆலயம் போற்றிப் பறைசாற்றும்.

இந்த ஆலயத்தில் வைக்கப்படும் சிலை பாரதமாதா சிலை. இச்சிலை மேற்கு உலக நாடுகளை நோக்கி இருக்கும். இங்கு வழிபாடுகள் இருக்காது. தீண்டாமை இருக்காது. இச்சிலை மேற்கு நோக்கி அமையும்போது இந்திய நாட்டின் அடிமை விலங்குகள் தகர்ந்துபோகும்' விடுதலைப் போராட்ட வீரர் வீரத்தியாகி சுப்ரமணிய சிவா 1924- இல் நவசக்தி இதழில் தனது விருப்பத்தையும், கனவையும் அறிக்கையாக வெளியிட்டார்.

விடுதலைப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தருமபுரி மாவட்ட தியாகிகளின் நட்பு கிடைத்தது. குறிப்பாக, தியாகி தீர்த்தகிரி முதலியார் நட்பினால், விடுதலையானதும் அவர் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.

பாரதமாதாவுக்கு ஆலயம் கட்டமைக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

இதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி 1923, பிப்ரவரி 15 -இல் பாப்பாரப்பட்டியில் ரூ. 500-க்கு மு.ரா. சண்முக முதலியாரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை தியாகி சின்னமுத்து முதலியார் உள்ளிட்டோரின் உதவியுடன் வாங்கினார். இந்த நிலத்தில் பாரத ஆசிரமம் கட்டிய அவர், இளைஞர்களைத் திரட்டி, விடுதலை வேள்வியில் அவர்களைப் பங்கேற்க வைத்தார்.

பாரத ஆசிரமம் அமைந்துள்ள இடத்தில் அனைவருக்குமான ஓர் ஆலயத்தைக் கட்டவேண்டும் என சுப்ரமணிய சிவா விரும்பினார். இதற்கான நிதி திரட்டும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.

பாப்பாரப்பட்டியில் மகாத்மா காந்தியை வரவழைத்து பாரதமாதா ஆலயம் கட்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என சுப்ரமணிய சிவா தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலவில்லை. இதனால், அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தரஞ்சன் தாஸை வரவழைத்து, 1923, ஜனவரி 1-ஆம் தேதி பாரதமாதா ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

1925, ஜூலை 23-ஆம் தேதி இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தார் சிவா. அதைத்தொடர்ந்து, பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் கட்டும் பணிகள் அப்படியே நின்றுபோயின.

சுப்ரமணிய சிவாவின் பாரதமாதா ஆலயம் கட்ட வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என மறைந்த காங்கிரஸ் மூத்தத்தலைவர் குமரி அனந்தன், பாப்பாரப்பட்டி தியாகி பஞ்சாட்சரம், தியாகி சுப்ரமணிய சிவா பேரவையினர் வலியுறுத்தி வந்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் பாரதமாதா நினைவாலயம்

ரூ. 1.50 கோடியில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் தொடங்கி, முடிக்கப்பட்டு 2018-இல் பாரதமாதா ஆலயம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் பாரதமாதா சிலை அதன் பின்புறம் சிங்கம் மற்றும் கைகளில் இந்திய தேசியக் கொடி ஏந்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலய வளாகத்தில் தமிழக அரசால் தற்போது போட்டித் தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் நூலகம், அவர்களுக்கான இருக்கைகள், ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

'பாரதமாதா நினைவாலயம்' என்று தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

'தியாகி சிவாவுக்கு நினைவாலயம் என்பது சரி. பாரதமாதாவுக்கு நினைவாலயமா? பாரதமாதா ஆலயம் என்று மாற்றுங்கள்' என்று கூறுகின்றனர்.

'ஆலயமா, நினைவாலயமா?' என்ற கேள்வி சட்டப்பேரவையிலும் எழுந்தது.

இதற்கு அரசின் விளக்கம், 'இது ஆலயம் என்றால், இந்துக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள். இது மதத்துக்கு அப்பாற்பட்டது' என்று கூறியது.

'மத அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நினைவாலயம் என்றால் அதன் பொருள் சிவாவின் கனவை சிதைப்பதாக உள்ளது. அறிவாலயம், அன்பாலயம் போல பாரதமாதா ஆலயம் என்று இருந்தால் என்ன குற்றம்?' என்று தேசபக்தர்கள் மனம் வருந்துகின்றனர்.

தேச பக்தர்களின் சினம் தணிக்குமா தமிழக அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.