மலைக்க வைக்கும் 'மக்கானா'
பிகார் மாநிலத்தின் பாரம்பரிய உணவான மக்கானா, 2013 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
கே.வாசுதேவன்
பிகார் மாநிலத்தின் பாரம்பரிய உணவான மக்கானா, 2013 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் 85 சதவீத மக்கானாவை பிகார் மாநிலம் மட்டும் விளைவித்து வருகிறது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வேளாண்-உணவுப் பொருளாக அது உருவெடுத்துள்ளது.
திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும் மணப்பெண்ணுக்குப் பரிசாக வழங்கப்படும் மக்கானா சுக, துக்க நிகழ்வுகள், சடங்குகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. அதோடு விரதகாலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவாகவும் உள்ளது.
இதற்கு அதன் சுவை மட்டும் காரணமல்ல; அதில் அடங்கி இருக்கும் ஊட்டச் சத்தும்தான். மக்கானாவில் 328 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் 76.9 கிராம், கொழுப்பு 0.1, புரோட்டீன் 9.7 கிராம், கால்சியம் 20 கிராம், மினரல்ஸ் 0.5 கிராம் என்ற அளவில் சத்துகள் உள்ளன.
பெருநகரங்களில் பாப்கார்னுக்கு இணையாக மக்கானா 'சூப்பர் ஃபுட்'டாகவும், சிற்றுண்டியாகவும் மாறியுள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த உணவுப் பட்டியலிலும், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களின் விருப்பமாகவும் மக்கானா உள்ளது. ரசாயனம், வேதிப் பொருள்கள் கலந்த உணவுகளை மக்கள் உட்கொண்டு பல்வேறு நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டு வரும்நிலையில், ஆரோக்கியமானதாகவும், இயற்கை உணவுப் பொருளானதாகவும் இருக்கும் மக்கானாவை அனைத்துத் தரப்பினரும் விரும்பிச் சாப்பிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
10 மாவட்டங்களில் அதிகம்
பிகார், அஸ்ஸாம், திரிபுரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஓடிஸ்ஸா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய நீர்வளமுடைய மாநிலங்களில் மக்கானா விளைவிக்கப்படுகிறது. ஆனால், பிரதானமாக பிகாரில்தான் விளைவிக்கப்படுகிறது. முக்கியமாக, வடக்கு பிகாரின் மிதிலா பிராந்தியத்தில் உள்ள மதுபானி, தர்பங்கா, பூர்னியா, கதிஹார், சமஸ்திபூர், சுபால், சஹர்சா, சீதாமர்ஹி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மக்கானா அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. தனிச்சுவையின் காரணமாக, 2022-ஆம் ஆண்டில் மிதிலா மக்கானாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
தாமரை, அல்லி விதைகளில் தயாராகும் மக்கானா
தாமரை, அல்லி பயிரிடப்பட்டிருக்கும் குளங்களின் அடியில் படிந்திருக்கும் கருப்பு நிற விதைகளை விவசாயிகள் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று கைகளால் சேகரிக்கின்றனர். பின்னர் அவற்றை களத்துக்குச் எடுத்துச் சென்று வெயிலில் நன்கு உலர்த்துகின்றனர். பின்னர், உலர்ந்த மக்கானாவை தரம், அளவின் அடிப்படையில் பிரித்து, இரும்பு வாணலியில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வறுக்கின்றனர்.
வறுபட்ட விதைகள் மரத்தடி, அல்லது மரச் சுத்தியலால் உடைக்கப்படுகின்றன. பாப்கார்ன்போல வெடித்து விதைக்குள் இருந்து மென்மையான வெள்ளை நிற மக்கானா வெளியே வருகிறது. அதை உடைந்த ஓடுகளிலிருந்து முழுமையாகப் பிரித்துச் சுத்தம் செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். எந்த இடத்திலும் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படாததால், மக்கானா ஊட்டச்சத்துடைய உணவாக இருக்கிறது.
மக்கானா அதிகளவில் தாமரைச் செடியில் இருந்தே விளைவிக்கப்படுகிறது. இதற்காக சதுப்பு நிலங்கள், ஆழம் குறைவான நன்னீர்க் குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதில் ஒன்றரை அடி முதல் 4 அடி முதல் ஆழத்துக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கானாவின் தேவை அதிகரித்தவுடன், பிகாரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வயல்கள் உருவாக்கப்பட்டு, அதில் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பப்பட்டு தாமரை விதைகள் விதைக்கப்படுகின்றன.
டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரியில் நீர்நிலைகளில் விதைகள் தூவப்படுகின்றன. பிப்ரவரி மாதத்தில் விதை தூவப்பட்ட குளம், வயல்களில் தண்ணீரில் தாமரை இலைகள் மிதக்கும். ஏப்ரல் மாதத்தில் அந்தச் செடிகள் பூக்கின்றன. மே மாதத்தில் பூக்கள் பழங்களாக மாறுகின்றன. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தப் பழங்கள் தண்ணீருக்குள்ளேயே வெடித்து, மிதக்கின்றன. சில நாள்களில் இந்த விதைகள் குளத்தின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தாமரையின் இலைகள் காயத் தொடங்கியதும், அறுவடைக்காலம் தொடங்குகிறது. அப்போது விவசாயிகள் பயிரிடப்பட்ட குளத்துக்குள் தண்ணீரில் மூழ்கி சேற்றை வாறும் பெரிய மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி விதைகளைச் சேகரிக்கின்றனர்.

1.83 லட்சம் டன் இலக்கு
இதுதொடர்பாக, பிகாரின் தோட்டக்கலைத் துறை ஆலோசகர் பிரதீப் ஹசாரி கூறியதாவது;
'பிகாரின் மொத்த விவசாயத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே மக்கானா பயிரிடப்பட்டாலும், அது நாட்டின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதமாகும். மிதிலா மக்கானாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததால், உலக அளவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா, அரபு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மக்கானா தொடர்புடைய 200 ஆலைகள் பிகாரில் இயங்குகின்றன.
மக்கானா உற்பத்திக்கு மிக முக்கியமான அடிப்படைத் தேவையான தண்ணீரும், நீரில் இறங்கி வேலை செய்யக்கூடிய திறன் மிகுந்த வேலையாள்களும் பிகாரில் தேவையான அளவு இருப்பதால், மக்கானா விளைச்சல் சாத்தியமாகிறது. மக்கானா விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்த நிலம் கிடையாது. குத்தகைக்கு நிலத்தை
எடுத்து விவசாயம் செய்கின்றனர். ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உறுதியான வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயிர் செய்ய முடியும். நவீனத்தைப் புகுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.
நொறுக்குத் தீனிகளில் மக்கானா, மக்கானா லட்டு, மக்கானா கிச்சடி, ரைத்தா, வடை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் மக்கானாவில் தயாரிக்கப்படுகின்றன.
2026 -27- ஆம் நிதியாண்டில் மக்கானா உற்பத்தி, வளர்ச்சிக்காக ரூ.87.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டில் 41 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 36,000 மெட்ரிக் டன் மக்கானா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2030-31- ஆம் ஆண்டில் 82,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1,83,024 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யவும், இதில் 30,000 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் மக்கானா கிலோ ரூ.2,000-க்கும், ஏற்றுமதி செய்யப்படுவது ரூ.3,500-க்கும் விற்கப்படுகிறது' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

