
சமயோசித சங்கீதம்
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அப்போது நான் காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில், கோடை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
ஒருநாள் இரவு, பிரபல கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி கோவிந்தராஜனின் இசைக் கச்சேரிக்காக, அந்தக் கோயிலின் ஒரு பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. கச்சேரியும் பக்தி உணர்வுடனும், மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதைக் கேட்க, நான் எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
பிரகாரம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இசை ரசிகர்களும் தரையில் அமர்ந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தனர். மேடைக்கு எதிரே, சுவாமியின் அபிஷேகத்துக்குத் தேவையான தண்ணீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கிணறு இருந்தது. கிணற்றைச் சுற்றி குறுகிய சுவர் போன்ற தடுப்பும் அமைந்திருந்தது. அங்கு அமர்ந்திருந்த ரசிகர்களில் ஒருவருடன் வந்திருந்த சுமார் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன், சற்று துறுதுறுப்புடன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில், அவன் தன்னுடன் வந்திருந்த பெரியவர்களின் கவனத்திலிருந்து சற்றே விலகி, கிணற்றின் சுற்றுச்சுவரில் கைகளை வைத்து உள்ளே எட்டிப் பார்க்க முயன்றான். சிறுவன் கிணற்றுக்குள் விழுந்துவிடக்கூடிய ஆபத்தான நிலை அது. அந்தக் காட்சியை மேடையில் பாடிக்கொண்டிருந்த சீர்காழி கோவிந்தராஜன் கவனித்துவிட்டார்.
அப்போது அவர் பாடிக் கொண்டிருந்தது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடி, 'படிக்காத மேதை' திரைப்படத்தில் எழுத்தாளப்பட்ட 'எங்கிருந்தோ வந்தான்...' என்ற பாடல். அதில் ஒரு பகுதியான, ' சொன்னபடி கேட்டிடுவான்... துணிமணிகள் காத்திடுவான்...' என்ற வரிகளும், கிணற்றை எட்டிப் பார்க்க முயன்றுகொண்டிருந்த சிறுவனின் செயலும், அவனை அழைத்து வந்திருந்தவர்கள் பதற்றத்துடன் அவனை தடுக்க முயன்றதும், ஒரே தருணத்தில் அமைந்தன.
நிலைமையைப் புரிந்துகொண்ட சீர்காழி கோவிந்தராஜன், அந்தச் சிறுவனைப் பார்த்த படியே, 'சொன்னபடி கேட்டிடுவான்... சொன்னபடி கேட்டிடுவான்... சொன்னபடி கேட்டிடுவான்...' என்று, வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடத் தொடங்கினார்.
பாடலின் பொருள் அந்த மூன்று வயதுச் சிறுவனுக்குப் புரிந்ததா என்பது தெரியாது. ஆனால், மேடையில் இருந்து தன்னைப் பார்த்துக்கொண்டே அந்த வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படுவதை அவன் கவனித்தான். அதற்குள் அருகில் இருந்தவர்கள் சிறுவனை கிணற்றின் அருகிலிருந்து அழைத்துப் பின்வாங்கச் செய்தனர். சிறுவனும் கிணற்றிலிருந்து விலகி நின்றான்.
மேடையில் இருந்த சீர்காழி கோவிந்தராஜனும், அந்தச் சிறுவனும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். உடனே பிரகாரம் முழுவதும் கைதட்டலும் சிரிப்பும் ஆரவாரமும் எழுந்தது.
அந்த மகிழ்ச்சியான ஆரவாரம் அடங்குவதற்கே சில நிமிடங்களானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





