உலக இலக்கியங்களில் திருக்குறள் ஒரு மகத்தான படைப்பு!
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்.11-ஆம் தேதி தில்லி வந்திருந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு திருக்குறள் புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்.11-ஆம் தேதி தில்லி வந்திருந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு திருக்குறள் புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினார் பிரதமர் நரேந்திரமோடி. தொடர்ந்து, அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் 'ரஷிய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷிய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தை இந்தப் புத்தகம் பறைசாற்றுகிறது. இது, இரு தரப்பு மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும்' எனப் பதிவிட்டார்.
இந்திய தத்துவங்கள் பல நூற்றாண்டுகளாக ரஷிய எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் ஈர்த்து வந்துள்ள நிலையில், திருக்குறளுக்கும், ரஷியாவுக்கு உள்ள நீண்டகால, அதிகம் அறியப்படாத தொடர்பின் காரணமாக இந்தப் பரிசு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பலராலும் தேடப்பட்ட நபர் நைரா மிகிர்த்சியான். ஆம்! அவர்தான் திருக்குறளை ஒரே நேரத்தில் ரஷிய, ஆர்மேனிய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.
ஆர்மேனிய நாட்டைச் சேர்ந்த நைரா, பேராசிரியர், தூதரக அதிகாரி, வரலாற்று ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சொற்பொழிவாளர், கனவு பகுப்பாய்வு நிபுணர் எனப் பன்முகங்கள் கொண்டவர். சீனா, கஜகஸ்தான் நாடுகளின் பண்பாடு மற்றும் கலாசாரம் குறித்த நூல்களை எழுதியுள்ளார்.
பொறியியல், உளவியல், அரசியல் ஆகிய மூன்றிலும் முதுநிலை பட்டமும், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தெற்காசிய வரலாறு குறித்து ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவில் ஆர்மேனியர்களின் பங்களிப்பு குறித்தும் ஆய்வை நிறைவு செய்துள்ளார்.
சென்னையில் உள்ள மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெற்ற இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தேசியப் பயிலரங்கில் பங்கேற்க வந்திருந்த நைராவிடம் அவரது திருக்குறள் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், அடுத்தடுத்த இலக்குகள் எனப் பல்வேறு கேள்விகளைத் தொடுத்தோம். அனைத்துக்கும் அசராமல் பதிலளித்தார் அவர்.
திருக்குறளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
நான் திருக்குறளை தேர்வு செய்யவில்லை; திருக்குறள்தான் என்னை தேர்வு செய்தது என நினைக்கிறேன். சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கடந்த 2025 -ஆம் ஆண்டு என்னை அணுகி, 'ரஷிய மொழியில் திருக்குறளை மொழி
பெயர்க்கும் திட்டம் இருக்கிறது. ஆகவே, நீங்கள் இந்த மொழிபெயர்ப்பு பணியை ஏற்க முடியுமா?' எனக் கேட்டார். அதற்கு முன் நான் திருக்குறள் குறித்து அறிந்திருக்கவில்லை; எனினும் திருக்குறள் மற்றும் அதை எழுதிய திருவள்ளுவர் குறித்து அறிந்ததும் எனக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, இந்தப் பணியை மனமுவந்து மேற்கொள்வதாக உறுதி அளித்து, அதை நிறைவேற்றினேன். புகழ்பெற்ற இலக்கியம் என்பதால் ரஷிய மொழியுடன் எனது தாய்மொழியான ஆர்மேனிய மொழியிலும் மொழிபெயர்க்க விரும்பினேன். அதை ஏற்றுக் கொண்டு வாய்ப்பளித்தனர்.
என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?
மொழிபெயர்ப்பின் மூலமொழியான தமிழ் எனக்குத் தெரியாது என்பதுதான் முதல் சவால். இதற்காக திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பை (வ.வே.சு. ஐயர்) அடிப்படையாகக் கொண்டு ஆர்மேனிய, ரஷிய மொழிகளில் மொழிபெயர்த்தேன். அப்போது ஆங்கில மொழி பெயர்ப்பிலேயே தர்க்க ரீதியாக சில விஷயங்கள் சரியாக இல்லையோ என எனக்குத் தோன்றியது. அதனால் மேலும் சிலரது ஆங்கிலப் பதிப்புகள், பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, கூகுள் உள்ளிட்ட தளங்கள் போன்றவற்றில் குறிப்புரைகளைப் படித்துப் புரிந்து கொண்டேன். தேவையான திருத்தங்களை மேற்கொண்டேன்.
அடுத்த சவால், தமிழ் குறுகிய வடிவம் கொண்டது; ரஷிய, ஆர்மேனிய மொழிகள் நீண்ட வடிவம் கொண்டவை என்பது. அதாவது தமிழில் ஒரு வார்த்தைக்கான பொருளை அந்த இரு மொழிகளில் குறிப்பிடுகையில், மூன்று அல்லது நான்கு வார்த்தைகளில்தான் எழுத முடியும். அதேவேளையில் அது நெடியதாகவும் அமைந்து விடக்கூடாது. எனவே, இதில் கவனமாக இருந்தேன். எனவே அதிகம் அறிந்திராத சில சொற்களை விளக்க அடிக்குறிப்புகளை எழுதினேன்.
மொழிபெயர்த்து முடிந்ததும் அதை தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக வாசித்தேன். அப்போது குறளுக்கான பொருள் சரியாக இருக்கிறதா, ஏதாவது விடுபட்டுள்ளதா, உணர்வு சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதா போன்ற பல விஷயங்களைச் சரிபார்த்தேன்.
குறள்களை வாசித்த அனுபவம் குறித்து கூறுங்கள்...
ஒவ்வொரு குறளையும் வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி, தத்துவவியலாளர் என்பது அவரது படைப்பில் வெளிப்படுகிறது. மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் மிகச் சுருக்கமான வரிகளில் ஆழ்ந்த புரிதலுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டை வழிநடத்தும் அரசனுக்கான தகுதிகள், கணவன்-மனைவி இடையேயான புரிதல், கல்வியின் முக்கியத்துவம், சிறந்த நிர்வாகத்தின் கூறுகள், நட்பின் சிறப்பு, சொற்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எது உண்மையான அறிவு போன்ற பண்புகள், திறன்களுக்கான இலக்கணத்தை அற்புதமாக வரையறுத்திருக்கிறார்.
பழங்காலத்தில் இயற்றப்பட்ட இந்த நூல் எக்காலத்துக்கும் ஏற்றதாக இருக்கிறது என்பதை அறியும் போது வியப்பு மேலிடுகிறது. திருக்குறள் கூறும் அறத்தை என் வாழ்விலும் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன். உலக இலக்கியங்களில் திருக்குறள் ஒரு மகத்தான படைப்பு.
உங்களது மொழிபெயர்ப்பு ரஷிய அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வை எப்படி உணருகிறீர்கள்?
அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து தற்போது வரை நான் மீளவில்லை. ஒரு மிகப்பெரிய தேசத்தில் சக்தி வாய்ந்த தலைவருக்கு மற்றொரு மிகப்பெரிய நாட்டின் சிறந்த தலைவர் எனது மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கியதை அறிந்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த கணம் வரை, நான் ஏதோ ஒரு நூலை மொழிபெயர்க்கிறேன் என சாதாரணமாக நினைத்த எனது நண்பர்கள், உறவினர்கள் எனது மொழிபெயர்ப்பு குறித்த தகவல் பொதுவெளியில் தீயாகப் பரவியதும் திருக்குறள் குறித்து என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். திருக்குறளை வாசிக்குமாறு என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் கட்டாயம் பரிந்துரைப்பேன். அதன்படி வாழ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைப்பேன்.
வரலாற்று ஆய்வாளராக இருக்கிறீர்கள்... இந்தியாவுக்கும் - ஆர்மேனியாவுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து அறிந்திருக்கிறீர்களா?
ஆர்மேனியர்கள் வணிகம், படைப்பிரிவு உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்தியாவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துள்ளனர். மும்பை, சென்னை, கொல்கத்தா, சூரத், ஆக்ரா ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். பழங்கால இந்திய ராணுவத்தில் ஆர்மேனிய படைப்பிரிவு இருந்துள்ளது. முகலாயப் பேரரசு காலத்தில் அக்பரின் ஆட்சியில் தலைமை நீதிபதியாக ஆர்மேனிய நாட்டைச் சேர்ந்தவர் இருந்துள்ளார்.
அதேபோன்று அவரது அரசவையில் பெண் மருத்துவராக இருந்த லேடி ஜூலியானா ஆர்மேனிய வம்சாவளியினர்தான். மேலும் வங்காள அரசில் படைத் தளபதியாக இருந்த குர்கின்கான், பின்னணிப் பாடகி கவுகார் ஜான் என இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளனர்.
மேலும், ஆர்மேனிய வரலாற்றில் ஆராம் ஒரு மிக முக்கியமான மன்னர். ஆர்மேனியப் பாரம்பரியத்தின்படி, இவருடைய பெயரிலிருந்தே அந்த நாட்டுக்கு 'ஆர்மேனியா' என்ற பெயர் உருவானதாகக் கருதப்படுகிறது. எங்களது சிறந்த மன்னரின் பெயரும் திருக்குறளின் மூன்று பெரும் பிரிவுகளில் முதல் பிரிவின் பெயரும் (அறம்) ஒன்றாக இருக்கிறது. திருக்
குறள் கூறும் அறத்தை எங்கள் மன்னர் பின்பற்றினார். இதனால் தமிழில் உள்ள அறத்துக்கும் எங்களின் தலை சிறந்த அரசன் அராமுக்கும் இடையே ஏதோவொரு தொடர்பு இருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.
திருக்குறளின் எந்த அதிகாரம் அல்லது எந்த குறள், பகுதி அதிகம் ஈர்த்தது?
திருக்குறளே ஒரு பொக்கிஷம்தான். 1,330 குறள்களும் தரமானவைதான். எனினும், இறைவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன் என்ன? (கற்றதனால் ஆய) என்ற குறள் இடம் பெற்ற கடவுள் வாழ்த்து அதிகாரம், ஏற்கெனவே சாப்பிட்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து பின் உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தும் மருந்து அத்தியாயம், நீதி முறைப்படி ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசன், மக்களுக்கு கடவுளாக மதிக்கப்படுவான் எனக் கூறும் குறள் (முறை செய்து காப்பாற்றும் மன்னவன்) மற்றும் நட்புக்கு இலக்கணம் வகுத்த குறள்கள் ஆகியவற்றைக் கூறலாம்.
அடுத்த கட்டமாக தமிழில் வேறு நூல்களை மொழிபெயர்க்கும் திட்டம் உள்ளதா?
திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் சிறந்த நீதி நூலான நாலடியாரை மொழிபெயர்த்து வழங்க முடியுமா என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தரப்பில் கேட்டுள்ளனர். தமிழின் அடையாளமாக விளங்கும் மற்றொரு இலக்கியத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்குத் தயாராக வேண்டும்.
முதல் முதலாக எப்போது இந்தியாவுக்கு வந்தீர்கள்? இந்திய கலாசாரம் குறித்து உங்கள் கருத்து...
கடந்த 1996- ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்தேன். இதையடுத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தியாவுக்கு வந்து செல்வேன். தில்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலை.யில் எம்ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறேன். இந்திய கலாசாரம் உலகின் மிக வளமையான கலாசாரம். உலகம் முழுவதும் பலர் இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்க்கை முறை, கொண்டாடப்படும் விழாக்கள், பல இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வது என இந்நாட்டின் மூலம் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
இந்தியாவில் ஆர்மேனியர்களின் பங்களிப்பு குறித்து எழுதும் திட்டம் இருக்கிறதா?
கண்டிப்பாக உள்ளது. மொழிபெயர்ப்பு பணியில் 18 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது. அதேவேளையில் இதுவரை சீன வரலாறு, கஜகஸ்தான் வரலாறு போன்ற வரலாற்று நூல்கள், அரசர்கள், பிரபலங்கள், படைத் தளபதிகளின் கனவுகளை பகுப்பாய்வு செய்யும் நூல் எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளேன். சில நூல்களுக்கு இணை ஆசிரியராக இருந்துள்ளேன்.
பல ஆண்டுகளாகவே இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்து வருகிறேன். இதை நூலாக எழுதுவது குறித்தும் சிந்தித்து வருகிறேன். இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்திய, ஆர்மேனிய உறவுகள் குறித்துப் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கனவுகளின் பகுப்பாய்வு குறித்து ஆர்மேனிய மொழியில் 600 பக்கங்கள் கொண்ட பெரிய நூலை எழுதியிருக்கிறேன். அது உளவியல், அறிவியல் சார்ந்த நூல். இந்த நூலின் ஒரு பகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை இந்தியாவில் வெளியிடவுள்ளேன்.
படங்கள் : ஏ.எஸ்.கணேஷ்
திருக்குறளை மேற்கோள் காட்டிய டால்ஸ்டாய்
உலகப் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவருக்கு இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக தாரக்நாத் தாஸ் என்பவர் 1908-ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு பதில் அளித்த டால்ஸ்டாயின் நீண்ட கடிதம் 'ஏ லெட்டர் டு ஏ இந்து' என வெளியானது.
இந்தக் கடிதத்தில் 'எதிரியையும் அன்புடன் அணுகவேண்டும்' என்று டால்ஸ்டாய் விளக்குகிறார். இதில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்தில் இருந்து, இன்னா செய்தாரை ஒறுத்தல் குறள் உள்பட 6 குறள்களை மேற்கோள் காட்டுகிறார்.
ஆங்கிலத்தில் வெளியான இந்தக் குறள்களைப் படித்த மகாத்மா காந்தி, சிறையில் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து மேலும் ஆர்வம் கொள்கிறார்.
டால்ஸ்டாய் எழுதிய 'லெட்டர் டு ஏ இந்து' கடிதத்தை தனது இதழில் பயன்படுத்திக்கொள்ளவும், குஜராத்தியில் மொழிபெயர்க்கவும் அனுமதி கேட்டு டால்ஸ்டாய்க்குக் கடிதம் எழுதுகிறார். இருவருக்கும் இடையிலான கடித உறவு காந்தியின் அகிம்சை போராட்ட கோட்பாடுக்கு மேலும் வலு சேர்த்தது.
டால்ஸ்டாய் படித்த திருக்குறள் கார்ல் குரவல் என்ற ஜெர்மானிய லுத்துரன் திருச்சபை பாதிரியார் 1857-இல் ஜெர்மனியின் மொழிபெயர்த்தது. அவர் குறளின் சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்திருந்தார். ரஷிய மொழியில் 1330 குறளும் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
ரஷிய, ஆர்மேனிய மொழிபெயர்ப்பு எவ்வாறு சாத்தியமானது?
'பொதுவாக தமிழிலக்கிய நூல்களுக்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்யும் போது அவர்கள் தங்களது தாய்மொழியில் ஏதாவது குறிப்பிடும்படியாக பங்களிப்பு செய்துள்ளார்களா, இலக்கியம் சார்ந்து போதுமான அனுபவம் உள்ளனவா போன்றவற்றைக் கருத்தில் கொள்வோம்.
அந்த வகையில் திருக்குறளை முதலில் ரஷிய மொழியில் மட்டுமே மொழிபெயர்ப்பது தொடர்பாக நைராவிடம் கலந்தாலோசித்தோம். அப்போது அவர், தனது தாய்மொழியான ஆர்மேனிய மொழியிலும் திருக்குறளை மொழிபெயர்க்க விரும்பினார்.
நைரா இந்தியாவின் பண்பாடு, மொழி, நாகரிகம் குறித்து நன்கறிந்தவர். மேலும் இந்தியா குறித்த சில புத்தகங்களை ஆர்மேனிய, ரஷிய மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆர்மேனிய வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். அந்த நாட்டின் மருத்துவக் குழுவில் உளவியல் நிபுணராகவும் இருந்தவர். இவற்றைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலை வழங்க முடிவு செய்தோம்.
அதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் சில அதிகாரங்களை மொழிபெயர்ப்பு செய்து அனுப்புமாறு நைராவிடம் கேட்டுக் கொண்டோம். அதன்படி அவர் அனுப்பினார். அந்த மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்ததால் ரஷிய, ஆர்மேனிய மொழிபெயர்ப்பு பணிகளை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தோம்.
இந்த மொழிபெயர்ப்பு பணிகளுக்கு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பெரிதும் உறுதுணையாக இருந்தார். அவர் ரஷியாவில் தங்கி, ரஷிய பல்கலைக்கழகத்தில் முழுமையாக ரஷிய மொழியில் 10 ஆண்டுகள் படித்தவர். ரஷிய மொழி நன்கு அறிந்தவர்.
திருக்குறளை மொழி பெயர்க்க வேண்டும் என்று அவரைத்தான் முதலில் அணுகினோம். சங்க இலக்கியம் என்பதால் அவர் தயங்கினார். ரஷிய மொழியில் மிக்க புலமை பெற்றவர் செய்யும்போது அந்த மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாக அமையும் என்று கூறினார். அதன்படி நைராவை தேர்வு செய்தோம். இந்த மொழிபெயர்ப்பை பாலசுப்பிரமணியன் மேற்பார்வை செய்தார்.
மொழிபெயர்ப்பு பணி தொடங்கியபோது, நைரா ரஷிய, ஆர்மேனிய மொழிகளில் மொழிபெயர்த்து திருக்குறளை வாட்ஸ் ஆப், மின்னஞ்சலில் பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்புவார். அதில் உள்ள பிழைகளை பேராசிரியர் பாலசுப்பிரமணியம் கண்டறிந்து, முறையாகத் திருத்தி மீண்டும் அனுப்புவார். மேலும் இது தொடர்பாக இருக்கும் சந்தேகங்கள், கருத்துகளை கைப்பேசி மூலமாக இருவரும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டனர். இதனால் இரு மொழிகளிலும் திருக்குறளை சரியாக மொழிபெயர்க்க முடிந்தது.
ரஷிய, ஆர்மேனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்புகளை ரஷிய தூதரகம், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவுள்ளோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தற்போது 65 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதிக்குள் 100 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்' என்றார் அதன் இயக்குநர் இரா.சந்திரசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






