ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

திறன் வளர்க்கும் திருக்குறள்

மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனிடமுள்ள பல்வேறு திறன்கள் ஆகும்.

@Udhaystalin

திருவள்ளுவர்

Published On :

மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனிடமுள்ள பல்வேறு திறன்கள் ஆகும். அது ஒரு மனிதனை வேறொரு மனிதனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதுமாகும். பல்வேறு வகையான திறன்களுள் எதிர்மறைச் சூழல்களில் தளர்ச்சியடையாமல் வெற்றிகரமாக இயங்குவது மிக இன்றியமையாத திறன் ஆகும். வள்ளுவப் பேராசான் இதனை,

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்

துன்பம் உறுதல் இலன். (குறள் 628)

என்று கூறுகிறார்.

எதிர்மறைச் சூழல் என்பது ஒருவனின் ஆற்றலைப் போக்கிவிடக்கூடிய, சிறிதும் உதவி கிடைக்காத, எவரிடமும் தொடர்புகொள்ள முடியாத, எப்போதும் குறைகளையே கேட்கக்கூடிய ஓர் இக்கட்டான நிலையைக் குறிக்கும். இந்த நிலையிலும் ஒருவன் வாழ்ந்தே தீரவேண்டிய நிலை ஏற்படுவதுமுண்டு; அப்போது ஒருவன் என்ன செய்யலாம் என்பதே நம்முன் உள்ள மாபெரும் கேள்வி.

எதிர்மறைச் சூழல்களில் ஒருவன் தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கேட்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது ஒரு திறன் ஆகும். மற்றவர் கூறுவதையே கேட்டுக்கொண்டிருப்பதைவிடத் தான் செய்யவேண்டிய பணிகள் குறித்து ஒருவன் மிகுதியாகச் சிந்திக்க வேண்டும். இதை 'அந்தந்தக் கணத்தில் வாழ்தல்' என்று உளவியல் வல்லுநர்கள் கூறுவர்.

திருவள்ளுவர்,

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின் பால் உய்ப்பது அறிவு. (குறள் 422)

என்று கூறுகிறார். மனத்தை அலைபாய விடாமல் நல்ல விஷயத்தை குறித்து சிந்திப்பதே அறிவுடைமை என்று வள்ளுவர் கூறுகிறார்.

மிக மோசமான சூழ்நிலைகளிலும் நல்ல மனிதர்கள் சிலர் இருப்பார்கள்; அவர்களை அடையாளம் காண்பதில்தான் ஒருவருடைய வெற்றி அடங்கியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் கூடுதல் தேர்வாணையராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது புதுதில்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வுக்குரிய ஆவணங்கள் அங்குள்ள கல்வி மையத்துக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும். அந்தக் கல்வி மையம் சில மாதங்களுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டது என்ற செய்தி எனக்குத் தெரியவில்லை.

தேர்வுக்கு நான்கு நாள்களுக்கு முன்பு ஆவணங்களை அனுப்ப முயற்சி செய்தபோதுதான் எனக்குத் தெரிய வந்தது. கவலையுடன் இருந்தபோது ஓர் அலுவலர் என்னைச் சந்திக்க

வந்தார். நான் கவலை தோய்ந்த முகத்துடன் அவருக்கு இச்செய்தியைக் கூறினேன்.

அவருடைய துணைவியார் தொடர்வண்டி அஞ்சலகத்தில் பணிபுரிந்தார்; அவர் தில்லிக்குச் செல்ல வேண்டிய ஆயிரத்துக்கும் அதிகமான தபால் கவர்களை மதுரை தொடர்வண்டி நிலையத்துக்கு கொண்டுவருமாறும் தான் உதவி செய்வதாகவும் தெரிவித்தார். நங்கள் புதுதில்லிக்குரிய கவர்களைப் பிரித்துத் தனியாக எடுத்துக்கொண்டு அட்டைப் பெட்டிகளுடன் விரைந்து சென்றோம்.

15 கி.மீ. தொலைவை மின்னல் வேகத்தில் கடந்துசென்று தொடர்வண்டி நிலையத்தை அடைந்தோம். தொடர்வண்டி நடைமேடையில் ஆளுக்கு ஒன்றாகப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஓடினோம். தொடர்வண்டி நிலைய அஞ்சலகத்தில் சேர்த்துவிட்டுத் திரும்பினோம். எல்லாப் பணிகளும் குழப்பமின்றி முடிந்தன. நல்ல மனிதர்களின் நட்பினால் நெருக்கடி தீர்ந்தது.

வள்ளுவப் பேராசான்,

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும். (குறள் 522)

என்று கூறியதை நான் நினைத்துக்கொண்டேன். சுற்றத்தைப் பாதுகாத்து உடன் வைத்துக்கொள்வதே மிக முக்கியமான திறன் ஆகும்.

எதிர்மறைச் சூழல்கள் நமது ஆற்றலை முழுவதுமாகக் கரைத்துவிடக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்திவிடக்கூடாது. நமது எண்ணங்களை நேர்மறைத் திசைகளில் திருப்பிவிட வேண்டும். வள்ளுவர்,

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து. (குறள் 486)

என்ற குறட்பாவில், மோதும் நிலையிலுள்ள ஆட்டுக்கிடாய் சிறிது பின்வாங்கி நின்று மோதுவது உண்டு; எனவே, பின்வாங்குவதே அதிக ஆற்றலுடன் மோதுவதற்கு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். அதாவது எதிர்மறைச் சூழலை நேர்மறையாக மாற்றிக்கொள்வது இவ்வுத்தி.

எப்போதும் இலக்கைக் கவனித்தல் எதிர் மறைச்சூழல் என்பது நிரந்தரமானதன்று. நமது வாழ்வின் நெடிய பயணத்தில் அது ஒரு சிறு கூறு.

எனவே, நாம் வெற்றிபெற நமது நிரந்தர இலக்கைக் குறிவைத்துப் பயணம் தொடர வேண்டும். அது நமக்கு உடன்பாட்டு மனநிலையைத் தரும். வள்ளுவப் பெருமான்,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (குறள் 666)

என்று கூறுகிறார். தான் மேற்கொண்ட இலக்கின்மீது அதிகக் கவனமுடையவன் வெற்றிபெறுவது திண்ணம்.

வள்ளுவர் மேலும் ஒரு குறட்பாவில்,

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (குறள் 612)

என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய நட்பு வட்டம் மிக இன்றியமையாதது என்கிறார் வள்ளுவர். நட்பு வட்டத்தைச் செம்மையாக வைத்திருப்பதும் ஒரு திறன் ஆகும். நெருக்கடி ஏற்படும் காலங்களில் நல்ல நண்பர்களே பெரிதும்

உதவுவார்கள்; அத்தகைய நண்பர்களைப் பேணிக்கொள்வதும் ஒரு திறன்தான்.

வள்ளுவர் இத்திறன் குறித்து,

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். (குறள் 442)

என்று கூறுகிறார். இதைப்போன்ற குறட்பாக்கள் பல உண்டு. திருக்குறள் ஓர் அறநூலாக மட்டுமல்லாமல் வாழ்வியல் நூலாகவும் பயன்படுகிறது என்ற கருத்துக்கு இவையெல்லாம் சான்றுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.