பதிப்பாளர்கள் தேடும் பக்க வடிவமைப்பாளர்கள்!
முதலில் சென்னையில் மட்டும்தான் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


முதலில் சென்னையில் மட்டும்தான் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தகத் திருவிழாக்களையொட்டி சுமார் 3000க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அது தவிர ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பலநூறு பதிப்பாளர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 50 - 100 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்ட ஆனால் மறுபதிப்பு செய்யப்படாத பழைய புத்தகங்கள் புதிதாகப் பதிப்பிக்கப்படுகின்றன.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக, கைகளால் அச்சுக் கோர்க்கப்பட்டுவந்த நாட்களில், அச்சிடும் வேகம் குறைவாகவே இருந்தது. காரணம் அன்றைய நாட்களில் இருந்த அச்சு இயந்திரங்கள் எத்தனை வேகமாக முயன்றாலும் மணிக்கு ஆயிரம் தாள்களுக்கு மேல் அச்சிடும் திறன் இல்லாதவையாக இருந்தன. ஆனால் கணினி வழியே அச்சுக்கோர்க்கு புதிய தொழில்நுட்பம் வந்தபிறகு பக்க வடிவமைப்பும் எளிதாகிவிட்டது பக்கங்களை அச்சிடும் வழிமுறையும் மாறி, முழுவதும் ஆப்செட் முறையிலேயே புத்தகங்கள் அச்சிடும் வழக்கம் வந்துவிட்டது. இதனால் மிக விரைவில் அதிக அளவிலான புத்தகங்களை அச்சிட முடியும்.
கணினி வரைகலைஞர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. ஆசிரியர் எழுதிக் கொடுக்கும் அல்லது கணினியில் உள்ளீடு செய்து கொடுக்கும் தரவுகளை கணினி வரைகலையில் சரிசெய்து முழுமையான பக்கங்களாக வடிவமைக்கும் கணினி வரைகலைஞர்கள் பற்றாக்குறை மிக அதிகமாகிவிட்டது. இதனால் இன்று படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த பக்க வடிவமைப்பில் முன்பு அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டுவந்தது. காலப்போக்கில் அந்த நிறுவனம் பேஜ்மேக்கரை நிறுத்திவிட்டு அதனிலும் பல வகைகளில் மேம்படுத்தப்பட்ட இன்டிசைன் என்ற மென்பொருளை உருவாக்கிக் கொடுத்துவிட்டனர். அச்சுத்துறையினருக்கான அனைத்துத் தேவைகளும் இந்த மென்பொருளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஒரு புத்தகம் உருவாக்குவதற்குத் தேவையான ஏராளமான வசதிகள் இந்த மென்பொருளில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த ஒரு மென்பொருளை முறையாக, முழுமையாக கற்றுத் தேர்ந்தால் எந்தவிதமான பதிப்பு வேலைகளை மட்டுமல்லாது, பல துறைகளுக்குத் தேவையான வடிவமைப்பையும் செய்து கொடுக்க முடியும். இதனுடன் கூடுதலாக இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் போட்டோஷாப் ஆகிய மென்பொருட்களில் பயிற்சி இருந்தால் நல்லது.
இத்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தட்டச்சு தேர்ச்சி கண்டிப்பாக தேவையாகும். ஆங்கிலம் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தால் போதும். அதன் அடிப்படையில் கணினி வழியே தமிழ் தட்டச்சை மிக எளிதாக அதிகபட்சமாக 8 மணி நேரத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் பெற்றுள்ளவர்கள் முறையான பயிற்சி எடுத்தால் இந்தப் பகுதியில் அதிகபட்சமாக 3 மாதங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம். அதன் பிறகு சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள புத்தகப் பதிப்பாளர்கள், அச்சகதாரர்களை அணுகி அவர்கள் வழியே வேலைகளைப் பெற்று முடித்துக் கொடுக்கலாம்.
இந்தப் பகுதியில் செயல்படும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு முதன்மையான பகுதிகள் உள்ளன. 1. பிழையில்லாமல் தட்டச்சு செய்து கொடுப்பது 2. குறித்த நேரத்தில் பணியை முடித்துக் கொடுப்பது. இந்த இரண்டையும் 100 சதவீதம் கடைபிடித்தால் உங்களுக்கான வாய்ப்புகள் உங்கள் வாசல்தேடி வந்து நிற்கும்.
துவக்கத்தில் வடிவமைப்பிற்கான கட்டணங்கள் சற்று குறைவாகக் கிடைக்கலாம். எனினும் உங்களது ஈடுபாட்டுடன்கூடிய செயல்பாடுகள் நீங்கள் விரும்பும் கட்டணத்தை உங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிழை திருத்துநர் என்ற பதவி தற்போது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது. எனவே பிழையின்றி தட்டச்சு செய்து கொடுத்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தப் பதிப்புப் பகுதிகளுக்கான வடிவமைப்பைச் செய்து கொடுக்க அதிக திறன் கொண்ட கணினி தேவையில்லை. உங்களிடம் உள்ள பழைய 512 எம்பி நினைவகத் திறன் கொண்ட கணினியாக இருந்தால்கூட போதும். அடோபி இன்டிசைன் சிஎஸ்4 பதிப்பை நிறுவி நமது வடிமைப்பைச் செய்து முடிக்கலாம். தமிழ் எழுத்துக்களைப் பொருத்தமட்டில், தொழில்முறை எழுத்துரு மென்பொருள் கண்டிப்பாகத் தேவை. இணையம் வழியாக இலவசமாகக் கிடைப்பன புத்தக வேலைகளுக்கு நல்ல மதிப்பைக் கொடுப்பது இல்லை. எனவே உங்களுடைய கணினியில் தொழில்முறை எழுத்துருவிற்கான மென்பொருள் நிறுவப்பட வேண்டும்.
புதிதாக இந்தப் பகுதியில் சுயதொழில் தொடங்க விரும்பினால் கணினி (ரூ.40,000), இன்டிசைன் மென்பொருள் (ஆண்டிற்கு ரூ. 12,000), தமிழ் எழுத்துரு மென்பொருள் (ரூ.5,500), ஏ4 அளவு லேசர் அச்சு இயந்திரம் (ரூ. 7,000), ஸ்கேனர் கருவி (ரூ. 6000) மேசை உள்ளிட்ட பிற தளவாடங்கள் (ரூ. 5,000) உள்ளிட்ட அனைத்தையும் புதிதாக வாங்கி நிறுவ அதிகபட்சமாக ரூ 80 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். மிகக் குறைந்தபட்சமாக, ஒரு நாளைக்கு டெமி 18 அளவிற்கு 30 பக்கங்கள் வடிவமைப்பு செய்து, ஒரு மாதத்திற்கு 25 நாட்களில் 750 பக்கங்கள் முடித்துக் கொடுக்கலாம். இதற்கு ஒரு பக்கத்திற்கு 25 ரூபாய் கட்டணம் வாங்கினால் மொத்த வருமானம் ரூ. 18,750 ஆகும். இதில் அதிகபட்சமாக ரூ. 8,750 செலவு செய்தாலும், ரூ. 10,000 இலாபம் கிடைக்கும். எனினும் இது மிகக் குறைந்தபட்சமான கணக்கீடாகும்.
துவக்க காலத்தில் இந்த அளவிற்கு செய்தாலும் போதும். நல்ல அனுபவம் கிடைத்தால் இதனைவிட அதிகமான வேலைகள் கிடைக்கவும், புத்தக வேலைகள் மட்டுமல்லாது பிற வடிவமைப்புகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அச்சுத்துறைக்கான வேலைகளை உங்களது கற்பனைவளம், ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யும்போது வண்ணங்களால் ஆன வடிவமைப்பிற்கு அதிகக் கட்டணம் கிடைக்கின்றது.
இது அல்லாமல், மேலே சொன்ன மூன்று மென்பொருட்களில் நல்ல பயிற்சி இருந்தால், அச்சகங்கள், பதிப்பகங்கள், புகைப்பட நிலையங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் பாதாகைகள் உருவாக்குபவர்கள் போன்ற இடங்களிலும், நாளிதழ்கள் மற்றும் இதழ்கள் உள்ளிடக்கிய பத்திரிகை துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
தற்போது அதிக வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உள்ள பகுதி இந்தப் பதிப்புத்துறை என்பதாகும். முயற்சியுங்கள்... முடிவெடுங்கள்... தயங்காமல் இறங்குங்கள்... நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...