புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அச்சின்றி அமையாது உலகு!

எத்தனைதான் மின்னணுக் கருவிகள் வந்தாலும் அச்சின் தேவையும் பயன்பாடும் குறைவது இல்லை. பெரும்பாலான தினசரிகளும், இதழ்களும் மின் பதிப்பாக வெளியிடப்பட்டாலும், திறன் பேசிகளிலும்,

News image
Updated On :6 ஜூன் 2016, 2:17 pm

ஜெ. வீரநாதன்

எத்தனைதான் மின்னணுக் கருவிகள் வந்தாலும் அச்சின் தேவையும் பயன்பாடும் குறைவது இல்லை. பெரும்பாலான தினசரிகளும், இதழ்களும் மின் பதிப்பாக வெளியிடப்பட்டாலும், திறன் பேசிகளிலும், கணினிகளிலும் இணையம் வழியாக அவை இலவசமாகவே கொடுக்கப்பட்டாலும், காலை நேரத்தில், ஒரு கையில் தேநீர் கோப்பை, மறுகையில் நாளிதழை எடுத்து படிக்கும் நம் பழக்கம் மாறுவது இல்லையே!

15ஆம் நூற்றாண்டு முதல் நிலையான தனது வளர்ச்சியைத் துவக்கிய அச்சு, தற்போது கணினி யுகத்தில் எண்ணியல் (டிஜிட்டல்) முறையிலும் முதன்மையான இடத்தில் உள்ளது. அச்சு என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் இதில் பல முறைகளும், செயல்பாடுகளும் அடங்குகின்றன.

தற்போதும் சில இடங்களில் புழக்கத்தில் உள்ள கைகளால் அச்சுக் கோர்க்கப்பட்டு, முழுமையாக மனித உழைப்பால் மேற்கொள்ளப்பட்ட டிரெடில் அச்சு முறை முதல் முழுமையான கணினி தொழில்நுட்பத்தில் செயல்படும் டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலும் பல்வேறு முறைகள் உள்ளன.

பல்வேறு தளங்களில், காகிதங்களில், அட்டைகளில் அச்சிடுவது என்பது நடைமுறையில் எளிதாக மேற்கொள்ளப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், அச்சிட முடியாத தளமே கிடையாது என்றே கூறலாம்.

இந்த அச்சு என்பது தற்போது ரிலீஃப் பிராசஸ், இன்டாக்ளியோ பிராசஸ், லித்தோகிராபி, ஸ்டென்சில் பிராசஸ், ஜெரோகிராபி, டை-சப்ளிமேசன் - என்பன போன்ற பல்வேறு முறைகளில், பல்வேறு பிரிவுகள், செயல்பாடுகளில் இயங்குகிறது. என்னதான் கணினி தொழில்நுட்பம் பெருமளவில் புகுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கு மனித உழைப்பு என்பது தேவைப்படுவதாகவே உள்ளது.

பொதுவாக மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு இந்த அச்சுத்துறை செயல்படுகிறது. அச்சிற்கு முந்தைய பிரீ-பிரஸ் எனும் பகுதி, அச்சிடும் பிரஸ் எனும் பகுதி, அச்சிற்குப் பிந்தைய கட்டுகள் செய்யும் போஸ்ட் பிரஸ் எனும் மூன்றாவது பகுதி - என்ற பொதுவான இந்த மூன்று பகுதிகளும் தங்களுக்குள் பல்வேறு துணைப் பிரிவுகளையும் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக பிரீ-பிரஸ் எனப்படும் அச்சிற்கு முந்தைய பகுதியில் கணினி வரைகலை என்ற கணினி தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் வடிவமைப்பு செய்யும் பகுதியும் உள்ளது பிளேட் மேக்கிங் என்ற, ஆப்செட் பிரஸில் அச்சிடுவதற்குத் தேவையான அச்சுத்தளத்தை உருவாக்கும் பகுதியும் உள்ளது. அச்சிடுவதற்குத் தேவையான காகிதம், அட்டை உள்ளிட்டவற்றை ஆயத்த நிலைக்குக் கொண்டுவரும் கட்டு செய்யும் பகுதியின் ஒரு பிரிவும் வருகிறது.

தற்போது, அச்சுத்துறையின் எல்லா நிலைகளிலும் கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் அடிப்படைக் கல்வித் தகுதி என்பது கட்டாயமாகிவிட்டது.

அத்துடன் அச்சுத் துறைக்காக ஓர் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான சான்றிதழ், பட்டயம் மற்றும் பொறியியல் பட்டப் பாடங்களும் நடத்தப்படுகின்றன. முனைவர் படிப்பும் தற்போது அச்சுத் தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, பொள்ளாச்சி, சிவகாசி, கோயம்புத்தூர் நகரங்களில் கல்லூரிகளில் அச்சுத்துறை பயிற்றுவிக்கப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகங்களில் பிரிண்டிங் டெக்னாலஜி பி.ஈ. பட்டப்படிப்பாகவும், சென்னை, சிகா பாலிடெக்னிக் கல்லூரி, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் பயிலகம் ஆகியவற்றில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகவும் அச்சுத் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.

குறிப்பாக கோயம்புத்தூர் அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் இந்தியாவிலேயே மகளிருக்காக மட்டும் அச்சுத் தொழில்நுட்பம் பொறியியல் பட்டமாக பயிற்றுவிக்கப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகம், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில பயிலகங்களில் அச்சுத் தொழில்நுட்பத்திற்காக முனைவர் படிப்பு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு தவிர, இந்தியாவின் பிற நகரங்களான கண்ணனூர், பூனா, அலகாபாத், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, கொச்சி, மணிபால் உள்ளிட்ட பல நகரங்களில் சிறப்பான பயிலகங்கள் வாயிலாகவும் அச்சுத் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுபற்றிய மேலதிகத் தகவல்களை http://www.htcampus.com/college-search/printing-technology/all/ மற்றும் http://www.nipa.in/vendors/Printing%20Institutes%20in%20India.pdf என்ற வலைதளங்களில் பார்த்தறியலாம்.

சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு 10வது தேர்ச்சியும், பொறியியல் பட்டப் படிப்பிற்கு தகுந்த மதிப்பெண் பெற்று ப்ளஸ் 2 தேர்ச்சியும் அடிப்படையாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அச்சகங்கள், பதிப்பகங்கள், வர்த்தகரீதியில் இயங்கும் அச்சகங்கள் மற்றும் பதிப்பகங்கள், நாளிதழ்கள் மற்றும் பிற இதழ் நிறுவனங்கள், பிரீ-பிரஸ் சேவையளிக்கும் தனியார் நிறுவனங்கள், மின்னூல் பதிப்பகங்கள், கணினி வரைகலை நிலையங்கள், அச்சுத்துறைக்காக செயல்படும் மென்பொருள் நிறுவனங்கள், பேக்கேஜிங் நிறுவனங்கள், அச்சு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அச்சுக் காகிதத் தயாரிப்பு ஆலைகள், அச்சு மை தயாரிப்பு நிறுவனங்கள், அச்சுத்துறைக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

அச்சகப் பொறுப்பாளர், மேலாளர், மேற்பார்வையாளர், பொறியாளர்கள், பராமரிப்புப் பொறியாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், உற்பத்திப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வேலை வாய்ப்பு கள் உள்ளன.

இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் அச்சுத் தொழில்நுட்பம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இந்த அச்சுத்துறையில் வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது, சுயதொழில் வாய்ப்புகளும் உள்ளன. அச்சுத் தொழில்நுட்பப் படிப்பை முடித்தவர்கள் தொழில்நுட்பப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படலாம். சிறிய அளவிலான அச்சகம் அல்லது கணினி வரைகலை நிலையம் தொடங்கலாம். டிஜிட்டல் பிரிண்டர் நிறுவி சேவை கொடுக்கலாம், பொருளாதார வசதி இருந்தால் பெரிய அளவிலான அச்சகம் துவங்கலாம். சுயதொழில் துவங்கி தொழில்முனைவோராக வளம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.