புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேவை : துணிச்சலும், முயற்சியும்!

ஊடகம் என்றாலே இன்று வரையிலும் அது அச்சு ஊடகத்தையே குறிப்பிடுவதாக உள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2016, 10:07 am

ஜெ. வீரநாதன்

ஊடகம் என்றாலே இன்று வரையிலும் அது அச்சு ஊடகத்தையே குறிப்பிடுவதாக உள்ளது. அறிவியல் வளர்ச்சியால் மின்னணு ஊடகங்களாக வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்றவை வளர்ந்து வந்தாலும், அச்சு ஊடகங்களுக்கான தேவை குறையவில்லை. வருங்காலத்திலும் குறையாது.

தற்போது செய்தி இதழ்கள் தனித்தனி துறைகளுக்காக வெளியிடப்பட்டு நன்கு விற்பனையாகின்றன. மருத்துவம், ஆன்மீகம், உடல்நலம், உடற்பயிற்சி, ஆட்டோமொபைல், குற்றவியல், விவசாயம், தொழில்நுட்பம், தொழில்துறை, அறிவியல், சட்டம், சமுதாயம், மகளிர், ஆடவர், சிறுவர் - என்று ஏராளமான பிரிவுகளுக்காக இதழ்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளில் ஏராளமான இலக்கியம் மற்றும் துறை சார்ந்த சிற்றிதழ்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

தினசரி வெளியாகும் நாளிதழ்களுடனேயே சிறப்புப் பகுதிகளுக்காக வார இதழ்கள் இணைத்து வெளியிடப்படுவதும் அதிகரித்து வருகிறது.

உங்களுக்கு நன்கு எழுத வருமா - செய்தியாளராகலாம். துறைசார்ந்த தகவல்கள் உங்களிடம் உள்ளனவா? மிகவும் நல்லது. முன்பே சொன்னதுபோல துறைசார்ந்த இதழ்கள் பல வெளியாகின்றன. அவற்றிற்காக எழுதலாம்.

நல்ல கட்டுரைகளை எழுதலாம் விமர்சனங்கள் எழுதலாம். பேட்டி எடுக்கலாம். கதை எழுதலாம். நெடுங்கதை, கவிதை எழுதலாம் - இப்படி உங்களுக்கு உகந்த, உங்களால் முடிந்த பகுதிக்கு எழுதலாம். பொதுவாக இதழாளர் என்பவருக்கு இதுவே பணியாக முதலில் இருந்தது. ஆனால் இன்று இதழியல் உலகில் பல்வேறு பணிகள் உருவாகியுள்ளன.

செய்தியாளர் (நிருபர்), புகைப்படச் செய்தியாளர், உதவி ஆசிரியர், ஆசிரியர், பதிப்பாளர், ஓவியர், கணினி வரைகலைஞர், கருத்துப்படம் வரைபவர், இதழ் வடிவமைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், விளம்பரங்களுக்கான சொற்றொடர்களை உருவாக்குபவர்கள், பிழைதிருத்துவோர், அச்சிடுவோர், விற்பனை பிரிவில் பணிபுரிவோர், விளம்பரப் பிரிவில் பணிபுரி

வோர் - என்று பலதிறன் படைத்த நபர்களின், பணிகளின் கூட்டுழைப்பில் உருவாக்கப்படுவதே ஓர் இதழ் ஆகும்.

எழுத்து வராது. ஆனால் நன்கு ஓவியம் வரைய வரும் என்றால், ஓவியராக, கருத்துப்படங்கள், கேலிச்சித்திரங்கள் வரைபவராக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.

சரியான நேரம் பார்த்து புகைப்படம் எடுக்கத் தெரியுமா? புகைப்பட செய்தியாளராகச் செயல்படலாம். நொடிப்பொழுதில் நடந்து முடிக்கும் செயல்களை மூன்றாம் கண்ணாகக் கருதப்படும் ஒளிப்படக் கருவியில் பதிவு செய்து வெளியுலகிற்குத் தெரியப்படுத்திய புகைப்படக்காரர்களின் பணி மகத்தானது. வியட்நாம் போரின்போதும், சூடானில் ஏற்பட்ட பஞ்சத்தின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மனிதகுலத்தை அதிர வைத்தவை என்றால் மிகையாகாது.

கணினி வரைகலையில் பக்க வடிவமைப்பு செய்வேன் என்பவர்களுக்கும் இதழ்களில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. நாளிதழ்களிலும், இதழ்களிலும் நல்ல வடிவமைப்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது. வலைத்தளங்களில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பக்க வடிவமைப்பாளர்களின் தேவையை அறிய முடிகிறது.

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்ய விருப்பம் இல்லை; வெளியே சுற்ற வேண்டும் என்று நினைப்பவரா? இதழ்களின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவுகளில் பல பணியிடங்கள் உள்ளன. இவை தவிர, பிழைதிருத்துநர், அச்சிடுவோர், கட்டுசெய்வோர், பொறுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று பல பணிகள் உள்ளன. ஏதேனும் நிறுவனத்தில் சேர்ந்து இதழாளராக பணிபுரிவதில் விருப்பம் இல்லை என்பவர்களுக்காக உள்ளதே சுதந்திர எழுத்தாளர்கள் (ஃப்ரீலேன்ஸ் ஜர்னலிஸ்ட்) பணியாகும். எந்த ஒரு துறைக்கும் தேவையான செய்தியை எழுதி எந்த ஓர் இதழுக்கும் அனுப்பலாம். சிறந்த முறையில் செயல்படும் சுதந்திர எழுத்தாளர்களுக்கு சிறப்பான ஊதியம் வழங்கப்படுகிறது.

இதழாளர்களுக்கு அடிப்படைத் தகுதி, கூடுதல் முயற்சியும், மிகப்பெரும் துணிச்சலும்தான் தேவை. உங்களிடம் அது அதிகமாகவே உள்ளது என்று நீங்கள் கருதினால் இதழியல் துறைக்கு வாருங்கள். இலக்கியம், வரலாறு, இதழாளர் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் அத்துடன் தட்டச்சு, கணினியின் அடிப்படை செயல்பாடுகள் அறிந்திருத்தல் போன்றவையே இதழியல் துறையில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும். சுருக்கெழுத்து, கணினி வரைகலையில் செயல்முறை பயிற்சி, புகைப்பட நுணுக்கம் போன்றவை கூடுதல் தகுதிகளாகும்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பல கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஜர்னலிஸம் என்று தனித் துறையே இயக்கப்படுகிறது. சான்றிதழ், பட்டயம், முதுகலைப் பட்டயம், இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களுக்காக என்று பலதரப்பட்ட நிலைகளில் வகுப்புகள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்கள் இதழியல் துறைக்கான பட்டப் படிப்புகளை அஞ்சல் வழியில் மிகச் சிறப்பாக, செயல்முறை பயிற்சி வகுப்புகளுடன் நடத்தி வருகின்றனர். தமிழ் வழியிலும் நடத்தப்படும் இந்தப் படிப்புகளில் தென் தமிழக பிள்ளைகள் பலரும் ஆர்வத்துடன் சேர்ந்து வருவதை அறிய முடிகிறது. திருநெல்வேலியில் இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ள இதழியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் 63 மாணவியர் சேர்ந்து தங்களது பயிற்சியைத் துவக்கியுள்ளனர் என்பது மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.