நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! பின்னடைவைக் கண்டு கலங்க வேண்டாம்!

2015 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித்தேர்வுகளின் முடிவுகளை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டது. நீங்கள்

News image
Updated On :24 மே 2016, 8:52 am

மு.சிபிகுமரன்

2015 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித்தேர்வுகளின் முடிவுகளை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாடு அரசின் குடிமைப்பணித் தேர்வுகள் பயிற்சிமையம் வழக்கம் போல் தன்னிடம் பயிற்சி பெற்ற அதிகமான தேர்வர்களை வென்றிட வைத்து, சிறந்த வெற்றியினை ஈட்டியுள்ளது. விகிதாச்சாரங்களின்படி தமிழ்நாட்டுத் தேர்வர்கள் தேர்ச்சி விகிதம் குறைவுதான். எனினும், சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தமிழை விருப்பப்பாடமாக எடுத்தும், தமிழ் வழியிலேயே எழுதியும் வந்த தேர்வர்கள் பெற்ற வெற்றி குறிப்பிடத் தகுந்ததும், பாராட்டத்தக்கதுமாகும்.

 குறிப்பாக, இத்தொடரின் 15ஆவது பகுதியில் நாம் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டிய க.இளம்பகவத் தேசிய அளவில் 117ஆவது நிலையிலும், மாநில அளவில்  மூன்றாவது  நிலையிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது எட்டாவது வாய்ப்பினை வெற்றியாக்கி ஐ.ஆர்.எஸ். பணிவாய்ப்புப் பெற்றார். ஒன்பதாவது வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் நிலையினை அடைந்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்வழி தேர்வராவார்.

 எனவே, முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என எந்த நிலையிலும் வெற்றியில் தாமதம் ஏற்படலாம். அதற்காக மனம் சோர்ந்துவிடக் கூடாது.

 ஆம். குடிமைப்பணிகளின் முதல்நிலைத்தேர்வு பல போட்டியாளர்களுக்கு வெற்றியை எளிதில் வழங்கிடுவதில்லை. தாம் பிற தேர்வர்களைப் போல் நூல்களைப் படித்தும், மாதிரி வினாக்களைப் பயிற்சி செய்தும் முதல்நிலைத்தேர்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் வெற்றி பெற இயலாதவர்களுக்கு வந்துவிடுகின்றது. சில முறை முயற்சி செய்தும் இந்நிலை தொடர்கிறது.

 நாம் எங்கு தவறு செய்கிறோம் எவ்வாறு வெற்றியைத் தவற விடுகிறோம் என்றெல்லாம் பல சிந்தனைகளும், கேள்விகளும் தேர்வர்களைத் துளைத்தெடுக்கின்றன.

 சக போட்டியாளர்கள் படிக்கின்ற நூல்களையே நாமும் படிக்கின்றோம். அவர்கள் எவ்வாறு மாதிரி வினாக்களை பயிற்சி செய்கிறார்களோ, அதுபோலவே பயிற்சியினை மேற்கொள்கிறோம். அவர்களைப் போலவே குறிப்புகளும் எடுக்கிறோம். ஆனால் முதல்நிலைத்தேர்வில் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. நம்மால் முடியவில்லை என்றெல்லாம் கலங்கித் தவிப்பவர்களை நாம் காண்கிறோம்.

அவர்களை மிகவும் குழப்பத்திற்கு ஆளாக்குகின்ற இம்மனோநிலை  முதல்நிலைத்தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு முறையும் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத்தேர்வினை எழுதி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத தேர்வர்களும் கூட இச்சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்.

அதேபோல நான்குமுறை, ஐந்துமுறை நேர்முகத்தேர்வுக்குச் சென்று வெற்றிப்பட்டியலில் இடம் பெறாமல் போனவர்களும் இதுபோன்ற மனவேதனைக்கு உள்ளாவதை நாம் பார்க்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும். சிலர் கொள்குறி வினாக்களை திறமையாகக் கையாள்வர். அவர்களுக்கு முதல்நிலைத்தேர்வு எளிதாகி விடுகின்றது.

சிலர் எழுத்துத் தேர்வில் விடைகளைச் சிறப்பாகக் கட்டமைத்து எழுதும் திறனுடையவர்களாக இருப்பர். இத்தகையோருக்கு முதன்மைத்தேர்வு எளிதாகிவிடுகின்றது. சிலர் ஆளுமைத்திறனும், சமயோசித அறிவும் கொண்டவராக இருப்பர். இவர்களுக்கு நேர்முகத்தேர்வு அணுகுமுறை சிரமமின்றி அமைந்துவிடுகின்றது.

ஆனால் கடுமையான போட்டி நிறைந்த இத்தேர்வில் எல்லா நிலைகளை வெற்றி பெற்ற ஒருவரே வெற்றியாளராக அறியப்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே தருணத்தில் முதல்நிலைத் தேர்விலேயே பின்னடைவு ஏற்பட்டாலும் அதற்காக வருந்த வேண்டாம்.

 அதற்கொரு சிறு எடுத்துக்காட்டினைத் தருகிறேன். அவர் பெயர் ரவிசங்கர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணி (IAS) வாய்ப்புப் பெற்று பணியாற்றி வருகிறார்.

இவர் முதல் ஐந்து முயற்சிகளில் முதல்நிலைத்தேர்வில் வெற்றி வாய்ப்பினைப் பெற முடியாமல் தொடர்ந்து போராடினார். ஆறாவது முறையாக முயன்றார். அந்த வாய்ப்பில் முதல்நிலைத்தேர்வில் வென்றார். முதன்மைத் தேர்விலும் வென்றார். நேர்முகத்தேர்விலும் வெற்றிக்கொடி நாட்டி ஐ.ஏ.எஸ்.பணி வாய்ப்பு பெற்றார்.

 இவரைப் போல முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், இடைவிடாத தொடர் போராட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பல வெற்றியாளர்களை நாம் வரிசைப்படுத்தலாம்.

 ஆகவே, சில முறை முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் போகலாம். இறுதி வாய்ப்பில் முயன்று முதல்நிலை, முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கும் சென்று ஐ.ஏ.எஸ் பணிவாய்ப்புப் பெறலாம். பின்னடைவு கண்டு கலங்க வேண்டாம்.

 முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே முழுமையான வெற்றியாகிவிடாது. இறுதி வெற்றியே முக்கியம். இல்லையெனில் முதல்நிலை, முதன்மைத் தேர்வின் வெற்றிகள் பலனோ, பெருமையோ அளிப்பதில்லை.

 இன்றைய நவீன உலகில் போட்டி இல்லாத துறையே இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது என்பதை யாவரும் அறிந்துள்ளோம். அவ்வாறிருக்க போட்டித்தேர்வர் நிலை பற்றிக் கூற வேண்டியதில்லை. தோராயமாக 1000 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் முதல்நிலையில் சுமார் எட்டு இலட்சம் படித்த பட்டதாரி இளைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.

 இதற்குள் இருந்து ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் மட்டும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் போது மீதமுள்ளவர்களின் எண்ணிக்கையையும், நிலையையும் நீங்களே யோசித்துப் பாருங்கள்.

 பின் நேர்முகத்தேர்வுக்கு இந்த பதினைந்தாயிரத்தில் இருந்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறுபேர் மட்டுமே அழைக்கப்படும்போது இரண்டாம் நிலைக்கு முன்னேறியவர்களால் மூன்றாம் நிலையைத் தொட முடியாமல் போய்விடுகிறது.

மூன்றாம் நிலைக்கு வந்தவர்களிலும் பணியிடங்களின்படி ஆயிரம் பேர் மட்டுமே வெற்றியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று பணி வாய்ப்பினை உறுதி செய்கின்றார்கள். இந்த இறுதி வெற்றியாளர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கான இடத்தினைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் வெற்றியாளராக வேண்டுமெனில், அதற்கு பிற போட்டியாளர்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்களைவிட உங்களை சிறப்பாகத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறெனில், சக போட்டியாளர் ஒருவர் ஒரு தலைப்பில் 7 POINT -களை தொகுத்திருக்கிறார் என்றால் நீங்கள் 10 POINT-களைத் தொகுத்திருக்க வேண்டும். அவர் ஐந்து நிமிடங்களில் எழுதுகின்ற பதிலை நீங்கள் 3 நிமிடங்களில் எழுதுகின்ற அளவிற்கு உங்களை விரைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது சாத்தியமே. எங்ஙனமெனில், பயிற்சி செய்தல், மீண்டும் பயிற்சி செய்தல். குறிப்பாக நாம் எப்பகுதிகளை கடினம் என்று கருதி விலக்குகின்றோமோ அப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தல்.

CONCENTRATE ON DELIBERATIVE PRACTICE INSTEAD OF REPETITIVE PRACTICE

பயிற்சி எனப்படுவது படித்தல், எழுதுதல், குறிப்புகளை எடுத்தல்,  மாதிரி வினாக்களை நஞகயஉ செய்தல், இவை அனைத்தையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.

ஆக, தேர்வு நோக்கில் ஒரு நிகழ்வினை எடுத்துக் கொண்டால் அதன் பன்முகத் தன்மையைக் காணுதல் அவசியம். இந்த ஆண்டு தேர்வுநோக்கில் பயன்படத்தக்க ஒரு எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். நவூரு குடியரசு (REPUBLIC OF NAURU) தொடர்பான செய்திகளை நீங்கள் சமீபத்தில் நாளிதழ்களில் படித்திருக்க முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 189 ஆவது உறுப்பு நாடாக இக்குடியரசு இணைக்கப்பட்டுள்ளது. இச்செய்தி பொருளாதார, புவியியல், அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்டது.

புவியியல் ரீதியாக இக்குடியரசு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். மேலும் உலகின் மிகச் சிறிய குடியரசு நாடும் ஆகும்.

இந்நாட்டின் மக்கள் தொகை 9378 பேர் ஆவார். எனவே, வாடிகனுக்கு அடுத்ததாக உலகளவில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்நாடு ஆங்கிலேயே காலனியாதிக்கத்தின் கீழிருந்தும், ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சியிலிருந்தும் 1968 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

இச்சிறிய தீவின் பாதுகாப்புப் பொறுப்பு ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகாரப்பூர்வ நாணயமாக ஆஸ்திரேலியாவின் டாலர் பயன்படுத்தப்படுகின்றது.

தமிழை விருப்பப்பாடமாக எடுத்து சமீபத்திய வெற்றிப் பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்த தேர்வர் ஒருவரின் விடாமுயற்சியை அடுத்த பகுதியில் காண்போம்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.