திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நீ... நான்... நிஜம்! -13: சுயநலம்... நன்றியின்மையின் விதை!

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா மஸ்கட் போயிருந்தார். மஸ்கட் மன்னர், ஓமான் பேரரசர் க்பூஸ் பின் சாய்த் அல் சாய்த் (Sultan Qaboos bin Said al Said) அவரை விமான நிலையம் வந்து தாமே வரவேற்ற

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 6:38 am

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா மஸ்கட் போயிருந்தார். மஸ்கட் மன்னர், ஓமான் பேரரசர் க்பூஸ் பின் சாய்த் அல் சாய்த் (Sultan Qaboos bin Said al Said) அவரை விமான நிலையம் வந்து தாமே வரவேற்றார். 
இதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? பெருவாரியான உலகத் தலைவர்களை அவரது அமைச்சர்கள் தான் விமான நிலையத்தில் வரவேற்பது வழக்கம். சங்கர் தயாள் சர்மா விஷயத்தில் மன்னரே வரவேற்றார். அடுத்து இன்னோர் அதிசயம் நடந்தது. இந்திய அரசு விமானம் கதவு திறந்து சங்கர் தயாள் சர்மா நிற்பது தெரிந்ததும் மஸ்கட் மன்னர் படியேறி மேலே சென்று சங்கர் தயாள்சர்மாவைக் கவனமாகக் கீழிறக்கி அழைத்து வந்தார். உலகின் எந்தத் தலைவரும் பிறநாட்டுத் தலைவருக்கு இப்படி ஒரு மரியாதை கூடிய வரவேற்பு கொடுத்ததில்லை. இந்திய ஜனாதிபதி படிகளில் இருந்து இறங்கியதும் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. காரின் பின்பக்கக் கதவுகளைத் திறந்து விட்டு அவரை அமரச் செய்த பின் ஓட்டுநர் பகுதிக்குப் போன மாமன்னர் ஓட்டுநரை ஒதுங்கச் சொல்லிவிட்டு தாமே ஓட்டுநராகி வண்டியோட்டத் தொடங்கினார். வளைகுடா நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்தன.
உலகின் வேறெந்தத் தலைவருக்கும் (அமெரிக்க ஜனாதிபதி பிரிட்டிஷ் அரசியார் உட்பட) கிடைக்காத வரவேற்பு இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவுக்கு ஏன்? என்று உலகம் புருவத்தை உயர்த்தியது. மாமன்னர் சொன்னார்: ""அவர் இந்திய ஜனாதிபதி என்பதற்காக விசேஷமான இத்தனை பெரிய மரியாதைகள் இங்கு நிகழவில்லை... பூனாவில் அவரிடம் படித்த மாணவன் நான். ஓர் ஆசிரியருக்குத்தர வேண்டிய சரியான மரியாதையை மாணவன் என்ற முறையில் செய்தேன்'' என்றார், பாருங்கள். ஒரு மன்னராக இருப்பதை விட, ஜனாதிபதியாக இருப்பதைவிட, ஆசிரியராக இருப்பது அதிக மரியாதைக்குரியது.


ஆசிரியர் தினம் ஒருநாள் விடுமுறை விஷயமல்ல... தினம் தினம் மதிக்கப்பட வேண்டியவர் ஆசிரியர்.
குருவினுடைய ஆசியிருந்தால் மாணவன் பெருகிற பலம் பலமடங்கு. ஓர் உதாரணம் சொல்லுகிறேன். அறிவில் சிறந்த விவேகானந்தர், இராமகிருஷ்ணருடைய எளிய மென்மையான இன்னொரு சீடருடன் விவாதத்தில் ஈடுபட்டார். கடுமையான கேள்விகளால் திணறடித்தார். 
திகைத்த சீடருக்குப் பின்னால் வந்து அமர்ந்து கொண்ட குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர், ""எங்கே இனி இவனோடு விவாதம் செய்.. பார்ப்போம்'' என்று சிரித்தார். என்ன ஆச்சர்யம்? விவேகானந்தருக்கு இணையாக சில இடங்களில் மேலோங்கி அந்தச் சீடர் விவாதிக்கத் தொடங்கினார். என்ன நடக்கிறது என்று ஒரு கணம் திகைத்த விவேகானந்தர் ஓர் உண்மையைக் கண்டறிந்தார். குருதேவர் தமது கால் கட்டைவிரலால் சீடரைத் தொட்டுக்கொண்டு இருந்தார். அதனால் அவரால் அவ்வளவு திறமையாக வாதிட முடிந்தது. குருவின் அருள் கூடுதல் வெற்றி தரும் என்பதை அறிவை மட்டுமே நம்பும் இளைஞர்கள் அனுபவித்து பழக வேண்டும். அதனால் தான் சொல்லுகிறேன்... "குருவுக்கு மரியாதை கொடு' என்கிறேன்......
அதிகாலை வீட்டு வாசலைத் திறந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வீசி எறியப்படும் நாளிதழ், பால் பாக்கெட், இவற்றை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த எனக்கு ரத்தக்கறை படிந்த மாடப்புறாவின் உடலைப் பார்க்க நேர்ந்தது. பதறிப் போனேன். இறகு பிய்க்கப்பட்ட, கழுத்து குதறப்பட்ட, புறாவின் கிடப்பு, சற்று நேரம் என் மன அமைதியைப் பாதித்துவிட்டது. சுத்தம் செய்யும் வேலை நடந்த பிறகு, இரண்டொரு நாளில் இந்தச் சம்பவம் மறந்தும் போனது. 
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதே மாதிரி பலியிடப் பட்ட பாணியில், ஓர் அணில் வாசலில் கிடந்ததும் மனம் விதவிதமாகக் கற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. யாரும் பில்லி சூன்யம் ஏவல் செய்கிறார்களோ என்ற கவலை தொடங்கி, அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் நம்மோடு சண்டை வளர்க்க ஆவல் காட்டுகிறார்களோ என்கிற எண்ணம் வரை வந்தது. ஏதோ கெட்டகாலம்... கெட்ட சகுனம் என்கிற இல்லத்துப் பெண்களின் கலக்கங்கள் உண்மையோ என்று கூட தடுமாற்றம் வந்து போனது. 
முடிவில் ஒருநாள் இத்தனை அராஜகமும் எங்கள் வீட்டுப் பூனையின் சேட்டை என்று புரிந்து போனது. ஆனால் தன் குட்டிகளுக்காக அல்லது தனக்காக அது செய்யும் உயிர்க் கொலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றைத் தான் தின்னாமல், என் வீட்டு வாசலில், கோயில் பலிபீடம் போல கொண்டு வந்து போடுவது தான் ஏன் என்று புரியாமல் இருந்தது. ஒரு முறை ஒரு விலங்கு ஆர்வலருடன் பேசிக் கொண்டிருந்த சமயம் (செய்திகள் திருடத்தான்) அவர் சொன்ன தகவல் என்னை ஒரு புரட்டு புரட்டிவிட்டது. "பூனைகள் தாங்கள் நேசிக்கும் நபருக்குப் பரிசளிக்க கையாளும் வித்தியாச யுக்தி இது' என்றார் விலங்கு ஆர்வலர். 
"பூனைகள் அன்பும் நன்றியும் சொல்ல இப்படிச் செய்யும்' என்றார். "தான் சிரமப்பட்டு சேகரித்த, கைப்பற்றிய, உணவைத் தான் உண்ணாமல் முழுமையாக அவற்றை ஒருவருக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் உடையவை... அது நன்றியின் வெளிப்பாடு' என்றார். திகைத்துப் போனேன். மூன்று தலைமுறையாக என் வீட்டில் வலம் வந்த(!) பூனைகளின் சேட்டை என்று புரிந்ததும் பூனைகளை வீடு கடத்தி விட்டேன். நாங்கள் சைவம் என்பது அவற்றுக்குத் தெரிய வேண்டாமோ? 
"நாய் நன்றி உடையது' என்று மட்டும் படித்திருந்த எனக்குப் பூனையின் நன்றி உணர்ச்சி புதுச்செய்தி ஆனது. பண்பாடு, நாகரீகம், என்றெல்லாம் பேசுகிறோம். யாரிடத்திலிருந்தும் எதையும் இலவசமாக எதிர்பார்க்கக் கூடாது. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாகப் பெற்று விட்டால் அதைத் திருப்பிச் செலுத்துவது மிகமிக அவசியம். திருப்பிச் செலுத்தவே முடியாத கடன்கள் (தாய்ப்பால்?) பெற நேர்ந்து விட்டால், நன்றியாக வாழ்வது தான் ஒரே வழி. மனிதப் பண்பாக நன்றி எதிர்பார்க்கப் படுகிறது. ஒன்று, நன்றியுணர்வு தானாக வரவேண்டும். அல்லது வளர்ப்பு முறையில் ஊட்டப்பட வேண்டும். சுயநலமானவர்கள் நன்றிகாட்டுவதே இல்லை.
இறையன்பு ஐ.ஏ.எஸ்., ஒரு கட்டுரையில் எழுதிய செய்தியை இப்போது சொல்கிறேன். பண்பாடு உள்ளவர்கள் காலி டிபன் பாக்ஸ்களைத் திருப்பித் தர தயங்குவார்கள். யார் வீட்டிலிருந்தாவது பட்சணம், சிற்றுண்டி வந்த பாத்திரத்தைக் காலியாகக் கொடுக்க வெட்கப் படுவார்கள். முடிந்தால் வேறு உணவால் நிரப்பிக் கொடுப்பார்கள். சாக்லெட் டோ, நாலு பேரீச்சைகளோ, காய்ந்த திராட்சைகளோ போட்டுத்தான் டிபன் பாக்ஸ்ûஸக் கொடுப்பார்கள். மனிதகுலத்தின் நன்றி அறிவிப்பு இது. எதையும் யாருக்கும் திருப்பிக் கொடுக்க மனமில்லாத மனிதர்கள் கீழானவர்கள். விலங்குகளை விட மோசமானவர்கள்... 
என் நெருங்கிய நண்பர் ஒருவர் தம் மகனை உயர்கல்வி படிக்க வைக்க படாதபாடு பட்டார். தமது சகல செலவுகளையும் ஒடுக்கி தாயும் தகப்பனும் மகனுக்கு மகத்தான கல்வி கொடுத்தனர். வெளிநாட்டு வேலையும் மகனுக்குப் பழுத்தது. நண்பர் பூரித்துப்போனார். தரம் உயர்த்தப்பட்ட மகனுக்கு தலைக்கனம் மிக்க பணக்கார வீட்டுப் பெண் மனைவியாவது சபிக்கப்பட்ட வரம். அதுவும் நடந்தது. சில வருடங்களில் நண்பரின் சஷ்டி அப்த பூர்த்தி பற்றிப் பேச்சுவந்த போது, வெளிநாட்டில் இருக்கும் தனக்கு விடுமுறை கிடைக்காது. வரமுடியாது என்று மகன் மறுத்தான். யதார்த்தமான சிக்கல் இது என்பதறிந்து மணி
விழாவை மகனின்றி செய்ய மனமில்லாமல், என் நண்பர் விட்டுவிட்டார். 
ஆனால் அதே உத்தமபுத்திரன் அதற்கு ஒரு வாரம் முன்பு நடந்த தன் மாமனாரின் மணிவிழாவுக்கு மனைவி குழந்தை சகிதமாக வந்து இறங்கிய போது நண்பர் நொறுங்கிப் போனார். இரண்டு வீடுகளும் தராசுக் கோலின் இரு சமமான தட்டுகள் என்பது அந்த மகனுக்கு ஏன் புரியாமல் போனது? இரண்டுக்கும் வா... இரண்டுக்கும் வராதே... இரண்டையும் இணைத்து ஒரு நாளில் நடத்து... இப்படி சமமாக நடக்கப் பிள்ளைகள் பழக வேண்டும். இன்றைய லாபத்துக்காக நேற்றைய தியாகத்தை அவமதிக்கக் கூடாது. 
இனி இதைவிட வருந்ததக்க இரண்டு சம்பவங்கள் சொல்லுகின்றேன். இவற்றை உங்கள் வாழ்வோடு சம்பந்தப் படுத்திக்கொள்வதும் விடுவதும் உங்கள் பொறுப்பு. 


(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.