திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நீ... நான்... நிஜம்! -15: தியாகம் மறந்தால்... துரோகம்?

பேரறிஞர் அண்ணா சொந்தப் புகழ் மிக்கவர். சுயம்பிரகாசம். என்றாலும் பெரியாரின் வழித்தோன்றல் என்கிற அடையாளத்தை நேசித்தார்.

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 2:47 pm

பேரறிஞர் அண்ணா சொந்தப் புகழ் மிக்கவர். சுயம்பிரகாசம். என்றாலும் பெரியாரின் வழித்தோன்றல் என்கிற அடையாளத்தை நேசித்தார். அவர்கள் இருவருக்கும் பிளவு நேர்ந்து 1967 தேர்தலில் அண்ணாவை எதிர்த்து, பெரியார் கடுமையான பிரச்சாரம் செய்தார். ஆனால் அண்ணா தேர்தலில் வென்றார். ஆட்சியேற்றதும் அண்ணா அவர்கள் செய்த முதல் காரியம், திருச்சி சென்று பெரியாரைச் சந்தித்ததுதான். 
இதைச் சற்றும் எதிர்பாராத பெரியார், ""புதுமணப்பெண் போல அண்ணாவுக்கு முகம் காட்ட நாணினேன்'' என்றார். 
மனம் அமைதியான பிறகு பெரியார், ""எப்போது என்னைப் பார்க்க வந்தாலும் ஏதாவது வாங்கி வருவீர்களே?'' என்று உரிமையுடன் கேட்க, ""மிகப் பெரிய பரிசை இம்முறை கொண்டு வந்திருக்கிறேன். இந்த அரசு உங்கள் அரசு... இந்த ஆட்சியை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்'' என்றார் அண்ணா. 
எதிர் எதிரான பிறகும் நன்றி காட்ட முடியும் என்பது ஒரு புதிய சித்தாந்தம். புதிய அத்தியாயம். அண்ணா அதைத் தொடங்கி வைத்தார். 
கி.வா.ஜ. தம் மகனுக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார். காரணம் தம் குருநாதர் டாக்டர் உ.வே.
சாமிநாத ஐயர் மீதான நன்றி அறிவிப்பு அது. நன்றி காட்டுவதில் ஒரு சிலர் இன்னும் அதீ தீவிரம் உள்ளவர்களாக இருந்ததும் உண்டு. 
க்வாஜா முயினுத்தீன் சிஷ்தி என்ற சூஃபி ஞானி உரையாடலின் நடுவில் எப்போது வலதுபுறம் திரும்ப நேர்ந்தாலும் எழுந்து வணங்கிவிட்டு உட்காருவார். ஏன்? என்று கேட்டபோது, ""அந்தப் பக்கம் என் குருநாதரின் அடக்க ஸ்தலம் உள்ளது'' என்றாராம். இசையுலகிலும் சிலர் இப்படி இருந்ததுண்டு. 
ஒருபுகழ் பெற்ற இசைமேதை, ஒரு தெருவழியே நடக்கும் போது தம் கால் செருப்பைக் கழற்றிவிடுவார். அவரது குருநாதர் உயிருடன் இருந்தபோது, அவருக்கு இசை சொல்லிக் கொடுத்த இல்லம் அந்தத் தெருவில் இருந்ததே காரணம்.""என் கடவுள் வாழ்ந்த, கோவில் உள்ள தெருவில், செருப்புடன் நான் எப்படி நடப்பது?'' என்பார். 
தன் அருமை, பெருமை, திறமை இவற்றை மட்டுமே பெரிதாக நினைக்கும் இளமை இத்தகு நன்றி உணர்வைப் பத்தாம் பசலித்தனமாகக் கருதும். ஆனால் நன்றி உள்ளவர்களாக வாழ்ந்து பார்த்தால்தான் வாழ்வின் பெருமிதம், நறுமணம், உயிர்ச்சக்தி உங்களுக்கு 
வசப்படும்.
கணினி வலையில் கையகப்பட்ட செய்தி ஒன்று. நன்கு உடை உடுத்திய இளைஞர் ஒருவர் உயர்பதவிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். தனியார் நிறுவனம் அது. இளைஞரை மனதால் எடைபோட்ட தேர்வுக்குழுத்தலைவர் அவரது கல்வித் தகுதிகள், பரிசுகள், கண்டு மலைத்துப் போனார். மனதளவில் அவரைத் தேர்வு செய்தும் விட்டார். பின்னர் ""நீங்கள் மிக உயர்ந்த கல்வி நிறுவனத்தில் படித்துள்ளீர்கள். பெரும் செலவாகி இருக்கும்... உங்கள் தந்தை பெரும் பணக்காரரா?'' என்று கேட்டார். சட்டென்று மறுத்த இளைஞர், ""மன்னிக்கவும் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவன் நான்'' என்றார். ""சாரி... தாய் சொத்துள்ளவரோ?'' என்றார். கண்களில் மிரட்சியுடன் இளைஞர் ""இல்லை'' என்றார். 
""உங்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் உங்கள் அம்மா. அவர் எங்கு பணிபுரிகிறார்? கல்வித் தகுதிகள் என்ன?'' என்றார் மேலதிகாரி.
ஒருகணம் திகைத்த இளைஞர் கண்கள் பனிக்க தடுமாற்றத்துடன், ""அம்மா.. படிப்புக் குறைந்தவர்.. உண்மையைச் சொல்வதானால் பத்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து படாதபாடு பட்டுதான் என்னைப் படிக்க வைத்தார்'' என்று தழுதழுக்கச் சொன்னார். அதிகாரி, ""நல்லது நீங்கள் பகுதி மேலாளர் பதவிக்குத் தேர்வு ஆகிவிட்டீர்கள். ஒரு நிபந்தனை. உங்கள் அம்மாவுடன் நாற்பத்தெட்டு மணி நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கு எப்படி எல்லாம் நன்றி காட்ட முடியுமோ அப்படியெல்லாம் நன்றி காட்டுங்கள். அதன் பிறகு என்னை வந்து சந்தியுங்கள். வாழ்த்துக்கள்'' என்று அனுப்பி
விட்டார். 
நாற்பத்தெட்டு மணி நேரம் கழித்து வந்த இளைஞர் குழைந்து போயிருந்தார். ""என்ன புரிந்து கொண்டீர்கள்? என்ன நடந்தது?'' என்றார் அதிகாரி. 
""ஐயா.. உங்களுக்கு முதலில் நன்றி. என் அம்மா எனக்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்தீர்கள். என் அம்மா எனக்காக என்னென்ன இழந்திருக்கிறார் என்றும் கற்றுக் கொள்ள வைத்தீர்கள். இதுவரை அம்மாவை எனக்கான லாபகரமான நபராக மட்டுமே கண்டேன். அவர் உழைக்க, என்னைக் காப்பாற்ற கடமைப் பட்டவர் என்று மட்டுமே கருதினேன். இன்னும் என்ன என்ன அவர் செய்திருக்க வேண்டும் என்ற பெரிய பட்டியலே வைத்திருந்தேன். நான் எத்தனை பெரிய சுய நலவாதி? அம்மாவின் கைகளை முதன் முறையாகப் பிரித்துப் பார்த்தேன். தோல் பிய்ந்து கரடுகரடாக வெடிப்புடன்.. ஆண்டவா! என் வசதிக்காக எத்தனை வீடுகளில் பாத்திரம் தேய்த்து துணி துவைத்த கைகள்.. இரத்தம் கசியும் விரல்கள்.. அதற்கு முதன்முறையாக மருந்து போட்டேன். அம்மா... இன்று நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்று தடுத்து விட்டேன். 
என் துணிகளை நானே துவைத்தேன். இறைவா.. ஒரு ஜீன்ஸ் பேண்ட் துவைப்பது இத்தனை கஷ்டமா? சமையல் செய்ய முயன்றேன். எதுவுமே சரியாக வரவில்லை. அம்மாவின் முதுகுவலி கால்வலி பற்றி இதுநாள் வரை நான் அலட்சியமாக இருந்திருக்கிறேன். அம்மாவுக்கு நான் உணவு ஊட்டிய போது அம்மா பெரிதாக அழுதுவிட்டார். கால்களைப் பிடித்து விட்டபோது என் கைகளை இறுகப்பிடித்து தடுத்து, உன் கைவலிக்கும் வேண்டாம் என்றார். ஆனால் நான் தொடர்ந்த போது அவர் கண்களில் எல்லையற்ற பிரகாசம் தெரிந்தது. ஒரு வேலையைச் சரியாகச் செய்வது, முழுமையாகச் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். அதனால் நன்றி காட்டுவது அவசியம் என்று அறிந்தேன்'' என்று முடித்தார் இளைஞர். பேசமுடியவில்லை அவரால். 
அதிகாரி தொடங்கினார்: ""பிறரது சிரமங்கள் தெரியாதவர்கள் உயர்பதவிக்கு வரக்கூடாது. நன்றி இல்லாதவர்கள் உயரத்துக்கு லாயக்கற்றவர்கள்'' என்று மேலதிகாரி முடித்துக் கொண்டார்.
நன்றியின் புதிய பரிமாணம் ஒன்று படித்தேன். ஓர் இளைஞர் ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெறப் போனார். அவரோ அடித்துத் துரத்தினார். மீண்டும் மீண்டும் போன போது, குண்டு கட்டாகத் தூக்கி ஜன்னல் வழியே வெளியே போட்டார் குரு. 
ஆனால் இளைஞர் தாமே ஞானமடைந்து உயர்ந்த பிற்பாடு ""உங்கள் குரு யார்?'' என யாராவது கேட்டால் தம்மை விரட்டியவர் பெயரையே சொன்னார். அவருக்குப் பணிவிடையாளாக ஆகிவிடாதபடி தடுத்து ஞானம் சொந்த மலர்ச்சி என்று அவர்தானே புரிய வைத்தார். அதனால் அவரே என் குரு'' என்று கொண்டாடினார். இது ஒரு புதுக் கோணம். நன்றி பற்றிய புதுப்பார்வை.
நன்றி ஆலாபனையில் இன்னும் ஒரு கூடுதல் பிரயோகம். கிறித்துவ பிரச்சாரக் கூடங்களில் டதஅவஐசஎ ஏஅசஈந என்ற அமர ஓவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் உள்ள செய்தி தெரியுமா? கூப்பிய அந்தக் கைகள், பலவீனமான கைகள். தோல் காயப்பட்டு எலும்பில் வலிக்கும் கைகள். ஆனால் அந்த அழுகிய கைகளுக்கு ஓர் அழகிய பின்னணி உண்டு.
நியூரம்பர்க் நகரில் குக்கிராமத்தில் வாழ்ந்த பொன்நகை கைவினைஞர் ஒருவருக்குப் பதினெட்டு பிள்ளைகள். குசேலர் கோத்திரம் போலும். குடும்பத்தில் அனைவருக்கும் உணவு கொடுக்கவே அவரது உழைப்பால் முடியவில்லை. இதில் மூத்த இரண்டு பிள்ளைகளுக்குப் பெரிய ஓவியராகி உலகப் புகழ் பெற ஆசை. 
ஆனால் வறுமை தின்கிறது. கனவை நனவாக்க சகோதரர்கள் புதுவழி யோசித்தனர். நாணயத்தைச் சுண்டிப்போட்டு இருவரில் ஒருவர் வெற்றி பெற்றதும் அவர் ஆறுவருடம் ஓவியக் கல்லூரியில் படிக்கப் போகலாம். அவர் படிப்புக்கும் சேர்த்து மற்றவர் கடும் உழைப்பு செய்து காசு அனுப்ப வேண்டும். 
அல்பெர்க்ட் ட்யூரர் ஜெயித்து ஓவியக் கல்லூரி புகுந்தார். மற்றவன் ஆல்பர்ட், காடுகளிலும், சுரங்கங்களிலும் கைவலிக்க கடினமாக உழைத்தான். உலகப் புகழ் பெற்ற ஓவியனாக ட்யூரர் மலர்ந்து ஊருக்குத் திரும்பியதைக் குடும்பமே கொண்டாடியது. அவனோ தனக்காக வருந்தி உழைத்த சகோதரனை நன்றியுடன் வணங்கி,
""ஒப்பந்தப்படி இனி நீ ஓவியக்கல்லூரி போகலாம். உனக்கும் சேர்த்து நான் சம்பாதிப்பேன்.. நீ புறப்படு'' என்கிறான். 
நடுங்கிய கரங்களைக் கூப்பி கண்ணீர்மல்க, ""என் கைகள் சிதைந்துவிட்டன.. கனவுகளும் தான்.. சுத்தியலில் அடிபட்டு தோலும் எலும்பும் நலிந்து விட்டன.. நடுங்கும் இந்தக் கைகள் ஓவியம் கற்க இனி இயலாதவை'' என்று அழுதான். குற்ற உணர்வுடன் அவனைக் கட்டித் தழுவிய ட்யூரர் அழுகிய கூப்பிய கைகளை உற்று நோக்கினான். ""உலகம் உள்ளவரை இந்தக் கைகளை நிலை நிறுத்துவேன். பிறரை வாழவைத்த இந்தக் கைகள் அழியவே கூடாது'' என்று சபதம் செய்தான். 
அந்தக் கைகளை அமர ஓவியமாக்கினான். தியாகத்தின் அடையாளமான கைகள் நன்றியின் அடையாளமான ஓவியமாகி இன்றுவரை உயிர் வாழ்கிறது. நண்பர்களே.. நன்றியை அழிய விடாதீர்கள்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.