தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நீ... நான்... நிஜம்! -24: அலங்காரம் போதும்... அடையாளம் வேண்டும்!

ஆண் பிள்ளைகளின் அட்டகாசத்தையும் அதே நேரத்தில் அவர்களுக்குரிய அவஸ்தைகளையும் கடந்த இரண்டு வாரங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

News image
Updated On :26 ஜூன் 2018, 1:15 pm

ஆண் பிள்ளைகளின் அட்டகாசத்தையும் அதே நேரத்தில் அவர்களுக்குரிய அவஸ்தைகளையும் கடந்த இரண்டு வாரங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். "என்னடா.. பெண் பிள்ளைகளைப் பற்றி இவன் பேசவே இல்லையே' என்று சிலர் வருத்தப்பட்டிருக்கக் கூடும். பெண்களின் பிரச்னைகளை அத்தனை சுலபத்தில் பேசி விட முடியுமா என்ன? ஆங்கிலத்தில் பெண்ணைக் குறிக்கிற பல சொற்கள் ஆண்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்கி அமைந்து இருக்கும். இதைக் கொண்டு பெண்ணுக்குள் ஆண் அடங்கி இருப்பதாகச் சிலர் பேசுகிறார்கள். உதாரணம் S(HE), M(ADAM), WO(MAN), FE(MALE), (MR)S இப்படி பெண்களைக் குறிக்கும் சொற்களில் ஆணைக் குறிக்கும் சொற்கள் உள்ளடங்கி இருப்பதால் பெண்ணுக்குள் ஆண் அடங்கி விடுவதாகப் பேசுகிறார்கள். பட்டிமன்றங்களில் மக்கள் கரவொலியை மகசூல் செய்யவும், பேச்சுப் போட்டிகளில் பரிசுகளை அள்ளிச் சுருட்டவும், இத்தகைய மொழி விளையாடல்கள் பயன்படக் கூடும். நிஜத்தில் இவை சாமர்த்தியங்களே ஒழிய சத்தியங்கள் அல்ல. 

நிதர்சனத்தில் எவ்வளவு முயன்றாலும் எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் பெண் ஆணுக்கு ஏற்ப, தன் அகல, நீளங்களை வரைந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குரியவள். எவ்வளவு சமத்துவம் பேசினாலும் இந்திய சமூகம் ஆணாதிக்க சமூகமே. ரயில் நிலையங்களிலும், பொது இடங்களிலும் அமில வீச்சுக்கும், கத்திக் குத்துக்கும், அதிக துன்புறுத்தலுக்கும் ஆளாவது பெண்ணினமே. ஐக்கிய நாடுகள் சபையில் பேச முடியாத மலாலாக்கள் லட்சக்கணக்கில் இந்திய வீடுகளில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு பெண் எதிர்காலத்தில் தான் யாராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழுச்சுதந்திரம் பெற்றவளாக இருப்பதில்லை. ஒன்றிரண்டு மம்தா பானர்ஜிகளும், மாயாவதிகளும் இந்திய சமூகத்தின் இயல்பு நிலை அன்று. ஒரு ஜெயலலிதாவின் வெற்றி அரசியலில் நுழைந்து விட்ட எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விட முடியாது. பொறியியல், கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படிப்பை விட்டுவிட்டு, திருமணம் ஆகி, குடத்துக்குள் திரும்பிய குத்து விளக்குகள், ஒன்றல்ல இரண்டல்ல... ஆயிரம் ஆயிரம்.

ஓர் உதாரணம் சொல்லுகிறேன். தமிழ்நாட்டில் வசதியான குடும்பத்தில் தங்கவிக்ரகம் போல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. நடனத்தில் அந்தப் பெண் குழந்தை தன் ஆத்மாவைக் கரைத்துக் கொண்டது. மேடையேறி ஆடியபோது கலையுலகமே கைதட்டி துள்ளிக் குதித்தது. கவர்னர்களும், முதல் மந்திரிகளும் பரிசுகள் கொடுத்து பாராட்டுகளும் கொடுத்து கெüரவம் காத்தனர் நல்ல நாளில் திருமணம் நடந்தது. மனைவியின் கலையுலக் கனவுகளைக் கலைக்க விரும்பாத கனவான் ஒருவரைத் தான் அவர் கரம் பிடித்தார். ஆனால் மேடையேறி மனைவி ஆடியபோது அவர் ஆடிப்போனார். கலையுலகக் காவலராக அவரால் நீடிக்க முடியவில்லை. கனவானாகக் கலை வளர்ப்பதை விட கணவனாக மனைவியின் சிறகுகளைக் கத்தரிப்பது அவசியம் என்று அவருக்குத் தோன்றியது. கலையைக் கலையாக ரசிக்காமல் அவருடைய மனைவியின் உடுப்பையும், இடுப்பையும் பற்றி ஒன்றிரண்டுபேர் பேசுவதைக் கேட்ட அவர் நொறுங்கிப் போனார். அதிக வேதனையுற்றார். பேசும் சலங்கை ஊமையாக்கப்பட்டது. சப்தமில்லாத தங்க விலங்குகள் அந்தக் கலா தேவியின் கால்களில் பூட்டப்பட்டன. 

இது போல் ஓர் ஆணின் வாழ்வில் நடப்பதற்கு அதிக வாய்ப்பில்லை. திருமணத்திற்குப் பின்னும் முன்னும் ஓர் ஆண் தன்னுடைய சுயம் கெடாமல் வாழ முடிகிறது. ஒரு பெண் எதிர்காலத்தில் என்ன ஆவாள் எந்த ஊரில் இருப்பாள், என்ன தொழில் செய்வாள் என்பவை எல்லாம் அறுதியிட்டு தீர்மானிக்க முடியாதவை. UNCERTAINTY என்கிற உறுதியற்ற தன்மை ஒரு பெண்ணின் வாழ்வில் எப்போதும் நீடிக்கிறது. வறுமை அல்லது வசதியின்மை காரணமாக, ஒரு வரை மட்டும் தான் படிக்க வைக்க முடியும் என்ற நிலை ஒரு குடும்பத்தில் வருமானால், அந்த ஒருவர் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தின் ஆண் மகனாகவே இருப்பார். இப்பொழுது எத்தனையோ பெண்கள் தகப்பனாருடைய தொழிலை வணிகத்தை எடுத்து நடத்தி வந்தாலும் RAMASAMY & DAUGHTERS  என்ற பெயர்ப் பலகையை நீங்கள் பார்த்து இருக்க முடியாது. எங்கு திரும்பினாலும் அண்ணாமலை & சன்ஸ், ஈஸ்வரன் & பிரதர்ஸ் என்று ஆண்கள் தான் அகல நீளமான பெயர்ப் பலகைகளை ஆக்ரமித்துக் கொண்டு அராஜகம் செய்கிறார்கள். ராஜேஸ்வரி & சிஸ்டர்ஸ் என்ற பெயர்ப்பலகை அதிசயம் மற்றும் அபூர்வம் அல்லவா?

இதைவிட சோகமான விஷயத்தைச் சொல்லுகிறேன். பிரபலமான ஆண்களாகவும், அதே சமயத்தில் இனிமையான வெற்றிகரமான குடும்பத்தை உடையராகவும், வலம் வருகிற பல ஆண்களை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் பிரபலமான பெண்கள் பலரும் தங்கள் சொந்த வாழ்வில் சந்திக்கும் சோகங்களைச் சொல்லில் அடக்க முடியாது. ஓர் ஆணின் வெற்றிக்கு பெண் கொடுக்கிற ஒத்துழைப்பைப் போல, ஒரு பெண்ணின் வெற்றிக்கு ஆணின் ஒத்துழைப்பு கிடைப்பது அபூர்வம். சினிமா, சிறுகதை, இலக்கியங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் பெண் என்பவள் தியாகப் பொருள் என்று புகழப்பட்டாலும், நடைமுறை வாழ்வில் போகப் பொருளாகத்தான் சமூகம் அவளை அடையாளம் காண்கிறது. கொடுமையிலும் கொடுமை இந்தச் சமூகத்தின் சதிவலையில் பெண் சிக்கிக் கொள்வது. ஒரு பெண் அழகுணர்ச்சியுள்ளவளாக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது தான், தன் வாழ்நாளின் முழுநேரப்பணி என்று பெண்களில் பலர் சிறைப்பட்டு விடுகிறார்கள்.

அழகு சாதனப் பொருட்கள், துணிக்கடைகள், நகை மாளிகைகள், பியூட்டிபார்லர்கள், எல்லாமே பெண்களின் பலவீனமே பலமாகக் கொண்ட சமாச்சாரங்கள். ஒரு திருமண வீட்டில் மணப்பெண் அலங்கரித்துக் கொள்வது தவிர்க்க முடியாத கலாச்சாரச் சுமை. மணப்பெண்ணின் சகோதரியும் கிட்டத் தட்ட மணப்பெண் போலவே அலங்கரித்துக் கொள்ளும் அலங்கோலம், பெண் அழகுணர்ச்சி என்கிற மாயவலையில் அடிமைப் பட்டு விட்டதற்கான சான்று. இரண்டு பெண்களையும் விஞ்சுகிற வகையில் பெண்களின் தாயார் பியூட்டி பார்லர்களில் தஞ்சம் புகுவதும், வயதுக்குப் பொருந்தாத ஆடை அலங்காரங்களுடன், அசட்டுக் கிழட்டுத்தனத்துடன் வலம் வருவதும், அரிதாரம் பூசி, புது அவதாரம் எடுப்பதும், பெண் குலத்தைப் பீடித்திருக்கும் ஒரு வகை மனநோயின் அடையாளம். கலையுணர்ச்சியும், அழகுணர்ச்சியும் ஒரு பெண்ணின் ஜீவசக்தி என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அழகுணர்ச்சி என்ற பெயரில் உடல் சார்ந்த, தோலும், துகிலும், குழலும், அணிமணியும் சார்ந்த, மேனாமினுக்கி விஷயங்களில், அதிக அக்கறை காட்டுகிற அசட்டுத்தனத்தை நியாயப் படுத்த முடியாது. திரைப்பட நடிகைகளைப் பார்த்து. இவர்களைப் போல் நாம் ஏன் உடுத்தக் கூடாது என்று இளம்பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஒன்றை மறந்து போனார்கள். ஒரு திரைப்பட நடிகை உடை உடுத்துவதன் நோக்கமே பிறரைக் கவருவது. தன்னைப் பார்க்கச் செய்வது. ஆனால் மற்ற சராசரிப் பெண்களின் நோக்கம் உரிமையுடன் பிறரது மரியாதையைப் பெறுவது.

இன்று ரயிலிலும் பொது இடங்களிலும் பல பெண்களின் உடையலங்காரம் மற்றும் உடல்மொழி பலரது கவனத்தைத் தன் மீது திருப்பும் முயற்சியாகி விடுகிறது. "கியாஸ்லைட் மங்கம்மா' என்றொரு சிறுகதை சினிமா ஆனது. அதில்  M.S.பெருமாள் அவர்களின் வசனம் ஒன்று வரும். "பொம்பளை தெருவுல இறங்கினா கும்பிடறாப்புல இருக்கணும்.. கூப்பிடறாப்பில இருக்கக் கூடாது' இந்த வசனம் என்னால் மறக்க முடியாது. விபரீதமான உடை அணியும் பெண்கள் தாங்கள் காட்சிப் பொருள் அல்ல; பரம்பொருள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓர் அழகான கவிதை படித்தேன். தகப்பன் தன் மகளுக்கு எழுதிய கடிதம் அது. "மகளே.. விலை கூடிய முத்து சுலபத்தில் கிடைப்பதில்லை. கடலின் அடி ஆழத்தில், அதிக சிரமப்பட்டு தான் அதைக் கண்டெடுக்க வேண்டியுள்ளது. தங்கம் தரையில் கிடைப்பதில்லை. சுரங்கம் வெட்டி, படாத பாடு பட்டு, சேகரிக்க வேண்டி உள்ளது. வைரம் தெருவில் கொட்டிக் கிடப்பதில்லை. பூமியின் கர்ப்பத்தில், ஆயிரமாண்டுகள் தவமிருந்து கரி வைரமாகிறது. முயன்று தேடுபவனுக்கே கிடைக்கிறது. மிகச் சிறந்த பொருட்கள் சுலபத்தில் பிறர் கண்களுக்குக் கிடைத்து விடாது. மகளே.. உன் உடலும் இளமையும் அழகும் அப்படி ஒரு விலை மதிப்பற்ற பொருள்.. அதனால் பலருக்கும் அது எளிதில் கிடைத்து விடாதபடி கவனமாக இரு' என்று அந்தக் கவிதை இருக்கும்.

பட்டவர்த்தனமாக உடைத்துச் சொன்னால், ஒரு பெண் பாலுணர்ச்சி பேதக் கவர்ச்சி காரணமாகவே அங்கீகாரம் பெற்றால் அது தனி மனித அவமானம். பெண் என்பதற்காகவே நியாயமான அங்கீகாரம் மறுக்கப்பட்டால் அது சமூக அவமானம். "பெண் வழிச்சேரல்' என்ற திருக்குறள் அதிகாரத்தை இந்த அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தேட வேண்டிய அடையாளம் அல்லது அங்கீகாரம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லுகிறேன்.

1967 பாஸ்டனில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் காத்ரைன் ஸ்விட்சர் என்ற பெண்மணி ஒரு சாதனை படைத்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மராத்தான் ஓட்டத்தில் தானும் ஓடுவது என்று தீர்மானித்தார். முழுப் பெயரையும் கொடுத்தால் நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தன் பெயரின் சுருக்கத்தை மட்டும் கொடுத்து பதிவு செய்து கொண்டார். ஆண் போலவே உடையணிந்து தன் பயிற்றுநர் ARNIE மற்றும் ஆண் நண்பர் TOM இருவருடன் இணைந்து ஓடத் தொடங்கினார். அவர் பெண் என்பதை யாரும் கவனிக்கவில்லை, ஆனால் பத்திரிக்கையாளர்க்கான ஒரு சிற்றுந்து (Mini van) இவர்களைக் கடந்து போனபோது மராத்தான் அமைப்பாளர்களின் சிறப்பு அலுவலர் காத்ரைனைக் கவனித்து விட்டார். வேனிலிருந்து குதித்து இந்தப் பெண்ணைத் தாக்கத் தொடங்கினார். JOCKSEMPLE என்கிற அலுவலர் போட்டியிலிருந்து அவரை ஒதுக்கப் போராடி அவருடைய எண் எழுதிய முதுகுப் பகுதியைக் கிழித்து எறிய முயன்றார்.

உடன் வந்த ஆண் நண்பரும், பயிற்றுநரும், ""அலுவலரோடு சண்டையிடாமல் காத்ரைன் நீ ஓடு, ஓடிக் கொண்டேயிரு'' என்று சொன்னார்கள். வெறி பிடித்தவள் போல் காûத்ரன், ""என் கால்களால் ஓட முடியாமல் போனாலும் முழங்கால்களாலும் முன்னங் கைகளாலும் நான் ஓடியே தீருவேன். நான் ஓடாமல் போனால் எனக்கு மட்டுமல்ல. பெண் குலத்திற்கே அவமானம்'' என்று சொல்லி நான்கு மணி இருபது நிமிடத்தில் (4.20M) அந்தத் தொலைவை ஓடி முடித்தார். இப்பொழுது பெண்களுக்கான மராத்தான் ஓட்டம் வந்து விட்டது. அதற்கு விதை இட்டவர் காத்ரைன். ஒரு பெண் இப்படிப் பட்ட அங்கீகாரங்களை, அடையாளங்களைப் பெண் குலத்திற்கே தேடிக் கொடுப்பது தான் பெருமை. 

அருமைப் பெண்மக்களே உங்களுக்கு அலங்காரங்கள் போதும்; உயர்ந்த அடையாளங்கள் வேண்டும். 
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.