வாங்க இங்கிலீஷ் பேசலாம் 132
புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் உள்ள சர்வரிடம் உரையாடும் புரொபஸர், கணேஷ், ஜூலி ஆகியோர் அரட்டை அடிக்கையில் from the horse’s mouth எனும் சொலவடை தட்டுப்படுகிறது.


புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் உள்ள சர்வரிடம் உரையாடும் புரொபஸர், கணேஷ், ஜூலி ஆகியோர் அரட்டை அடிக்கையில் from the horse’s mouth எனும் சொலவடை தட்டுப்படுகிறது. அது எப்படி புழக்கத்துக்கு வந்தது என ஜூலி வினவ புரொபஸர் பதிலளிக்கிறார்.
புரொபஸர்: இந்த idiom குதிரைப் பந்தயத்தில் இருந்து வந்தது. அந்த காலத்தில், அதாவது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பந்தயத்தில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை குதிரைகளுடன் அருகாமையில் இருந்து கவனித்துக் கொள்பவர்களால் ஓரளவு கணிக்க முடிந்தது. இவர்கள் லாயத்தில் வேலை பார்ப்பவர்களாகவோ, ஜாக்கிகளாகவோ இருப்பர். பந்தயத்தில் பணம் கட்டும் வாடிக்கையாளர்கள் இந்த நபர்களிடம் "எந்தக் குதிரை பரிசு வெல்லும்? எது நல்ல நிலையில் இருக்கிறது? எது அதிக வலுவாக அதிக வேகத்துடன் ஓடக் கூடியது?' என்றெல்லாம் விசாரித்து அறிந்து வைத்திருப்பார்கள்.
கணேஷ்: ஒருவித match fixing?
புரொபஸர்: கிட்டத்தட்ட. ஆனால் ஊழல் இல்லாத fixing. சரி, இப்படி குதிரைகளுடன் குதிரையாக இருப்பவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வதை from the horse’s mouth என்று சொல்வார்கள். அதாவது குதிரையைப் பற்றி "குதிரையே' சொல்லக் கேட்டு அறிந்து கொள்வது. ஒரு பிரச்னை வரும் போது அதில் நிபுணர்களாய் இருப்பவர்கள் அல்லது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு பிற்பாடு இந்த idiom பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
கணேஷ்: சார்... உங்களிடமே ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்வது from the horse’s mouth ஆகுமா?
புரொபஸர்: ஆகாது.
கணேஷ்: சார் நீங்க தொண்டையைச் செருமும் போதும் முதுகை வளைத்து குனிந்து யாரையாவது பார்க்கும் போதும் கொஞ்சம் குதிரையைப் போன்றே இருக்கிறீர்கள்.
புரொபஸர்: ஷட் அப்... கொஞ்சம் இடம் கொடுத்தா என்னையே கலாய்க்கிறியா?
கணேஷ்: ஹி... ஹி...
புரொபஸர்: குதிரை இப்படித் தான் சிரிக்கும். சரி... we are losing the way.
கணேஷ்: நாம தான் எங்கேயுமே போகலையே
புரொபஸர்: அதில்லடா losing the way என்றால் பேச வந்த பொருளில் இருந்து கவனம் சிதறி எதையெதையோ பேசுவது. Becoming distracted. சரி, நாம eventually, finally ரெண்டுக்குமான வேறுபாட்டை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம்.
கணேஷ்: கரெக்ட் சார்
புரொபஸர் (சர்வரை நோக்கி): தம்பி உன் கருத்து என்ன? என்ன நினைக்கிறாய்?
சர்வர்: Finally என்றால் படிப்படியாய் ஒரு செயலை முடிக்கையில் இறுதியில் வருவது. He kissed her on the forehead, then the eyes, then on the lips, and finally on the…
புரொபஸர்: நிறுத்துப்பா. ஏதாவது நாகரிகமான உதாரணமாச் சொல்லு...
சர்வர்: சரி, ஒரு கதை சொல்கிறேன். ஒரு பாலைவனத்தில் கடுங்குளிரான ஓர் இரவு. மணல் காட்டின் நடுவே ஒரு கூடாரம். அங்கு ஓர் அரபி கம்பளியில் தன்னை புதைத்துக் கொண்டு சுகமாய் துயில்கிறார். அப்போது வெளியே யாரோ கூப்பிடும் ஓசை. அரபி எழுந்து ஆச்சரியமாய் வெளியே வருகிறார். அங்கு குளிரில் நடுங்கியபடி அவரது ஒட்டகம் நிற்கிறது. "ஐயா எனக்கு ரொம்ப நடுங்குகிறது. செத்து விடுவேன் போல் இருக்கிறது. நான் என் தலையை மட்டும் கொஞ்சம் கூடாரத்துள் வைத்துக் கொள்ளட்டுமா?'' அரபிக்கு பாவமாய் இருந்தது. "சரி வைச்சுக்கோ'' என்றார். இதை அடுத்து அரபி தூங்கப் போனார். மீண்டும் ஓசை கேட்டது. கூடாரத்துக்குள் இருந்த ஒட்டகத்தின் தலை சற்று நேரத்தில் கேட்டது: "ஐயா தயை மிகுந்தவரே, என் கழுத்தை மட்டும் நான் உள்ளே இழுத்துக் கொள்ளட்டுமா? குளிரில் உறைந்து விடுவேன் போல் உள்ளது.'' "சரி உள்ளே இழுத்துக்கோ''. ஒரு கட்டத்தில் அரபி அது என்ன கேட்டாலும் "சரி' என சொல்லி விட்டு கண்ணயர்ந்து விடத் தொடங்கினார். அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...