வளர்ச்சிக்கான ஒரு கல்வித் திட்டம்!
லடாக் மற்றும் இமயமலைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் உயர்கல்வியை வழங்கவும், சூழலியல் சுற்றுலா, கலாசார மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு, தொழில்முனைவோர், நிலையான வளர்ச்சி


லடாக் மற்றும் இமயமலைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் உயர்கல்வியை வழங்கவும், சூழலியல் சுற்றுலா, கலாசார மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு, தொழில்முனைவோர், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்துடனும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது நரோபா ஃபெல்லோஷிப் (Naropa Fellowship) கல்வித் திட்டம்.
ஓராண்டு உண்டு உறைவிட முதுநிலைக் கல்வித் திட்டமான நரோபா ஃபெல்லோஷிப் மூலம் உருவாகும் இளைஞர்கள், இமயமலையின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதேவேளையில், தொழில்முனைவோராகவும், சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பவர்களாகவும் பணியாற்றுவார்கள்.
லடாக் மற்றும் இமயமலைப் பகுதி கடந்த சில ஆண்டுகளாக பெரிய சமூக மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டு வருகின்றது. கல்வியின் அளவும், தரமும் குறைவாகவும், முதன்மை வாழ்வாதாரமான விவசாயம் பின்தங்கியும் உள்ளன. இதன் விளைவாக, பிராந்திய வளர்ச்சி குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
வேலையின்மை, பயிற்சியின்மை, தொழில்முறைத் திறன்கள் மற்றும் லடாக்கி சமுதாயத்தில் படிப்படியாக ஏற்பட்டு வரும் கலாசார மாற்றம் மற்றும் இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நரோபா ஃபெல்லோஷிப் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் உற்சாகமான எதிர்காலத் தலைவர்களை உருவாக்கவும், 21 -ஆம் நூற்றாண்டில் வணிக மற்றும் குடிமைத் தலைமையை வெற்றிகரமாக ஊக்குவிக்கவும் தேவையான திறன்கள் மற்றும் கருவிகளை "நரோபா ஃபெல்லோஷிப்' கொண்டுள்ளது.
நரோபா ஃபெல்லோஷிப் பாடத்திட்டம் ஆண்டு முழுவதும் இயங்கும் நேரடி செயல் திட்டமாகும்.
இதையொட்டி, இந்த ஃபெல்லோஷிப் திட்டம் - தொழில்முனைவோர், சமூகம் மற்றும் கலாசாரம், தொடர்பு திறன், தனிப்பட்ட வளர்ச்சி ஆகிய 4 கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த கட்டணம் ரூ. 10 லட்சம். இது தங்குமிடம் மற்றும் உணவுக் கட்டணங்களுடன் முழு கல்வியையும் உள்ளடக்கியது.
நரோபா ஃபெல்லோஷிப் திட்டத்தில் ஆண்டுதோறும் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். செப்டம்பர் தொடங்கி, ஆகஸ்ட் வரை வகுப்புகள் இருக்கும். இதில் சேரும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் முழு உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு தேவைகளின் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். தற்போதைய நரோபா வளாகம் லே-விலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ஹெமிஸ் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் கடந்த ஆண்டு பயின்ற ஆற்றல்மிக்க 52 இளம் தொழில்முனைவோர் குழு இமயமலைப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிலையான தீர்வுகளுடன் வடிவமைக்க பல்வேறு துறைகளில் பல புதுமையான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்தக் குழுவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். நரோபா ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ், வேளாண் சுற்றுலா முதல் நிலையான பசுமை இல்லங்கள் வரை 22 தனித்தனி யோசனைகளில் இந்தக் குழுவினர் பணியாற்றியுள்ளனர்.
அவற்றில் ஒன்று - லடாக் பாஸ்கட். லே மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆண்கள் இந்தக் குழுவுக்கு தலைமை வகிக்கின்றனர். இதற்காக அவர்கள் ஒரு வலைதளத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த தளத்தின்மூலம், பூர்வீக லடாக்கி தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து வாங்க முடியும். இந்தக் குழு உறுப்பினர் 28 வயதான ஸ்டான்சின் ஜோர்டான் கூறுகையில், ""உள்ளூர் லடாக்கி உலர் பழங்கள் மற்றும் பிற தயாரிப்புகள் நிலையான சந்தையைப் பெறவில்லை. இதையடுத்து, அவற்றை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் நோக்கில் இந்த வலைதளத்தை நிறுவியுள்ளோம். இதில், பார்லி, வறுத்த கோதுமை, பாதாமி கர்னல்கள், வால்நட் கர்னல்கள், ஆர்கானிக் மிளகுக்கீரை, தேநீர் மற்றும் ஆர்கானிக் கெமோமில் தேநீர் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்'' என்றார்.
அதேபோல, லடாக்கைப் பூர்வீகமாகக் கொண்ட ஜிக்மெட் சிங்கே, ஷில்லாங்கின் அக்ஷிதா பிரதான், பெங்களூரின் நிச்சிதா பிசானி ஆகியோரால் "அக்ரோ' என்ற மற்றொரு உத்தி செயல்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கற்களை (eco-bricks) பயன்படுத்தி நிலையான பசுமை இல்லங்களை இந்தக் குழு உருவாக்க முயல்கிறது.
கட்டடக் கலைஞரான பிசானி, லடாக்கி மக்களுக்கு வழக்கமான பசுமை இல்லத்தைவிட, மிகக் குறைந்த செலவில் புதுமையான மற்றும் நிலையான பொருள்களால் ஆன பசுமை இல்லங்களை வழங்கியுள்ளார். இந்த பசுமை இல்லங்கள் கடும் குளிர்காலத்தில்கூட, விவசாய உற்பத்தியை அதிகரிக்க உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
லடாக் பாஸ்கட் மற்றும் அக்ரோ ஆகிய 2 குழுக்களும் தங்களின் செயல்பாடுகளின் மூலம் மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அடிப்படை நிதியுதவியுடன் 3 மாதங்கள் கொண்ட ஓர் ஆய்வு திட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...