சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 34 - தா.நெடுஞ்செழியன்

கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்த மேலும் சில முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 34 - தா.நெடுஞ்செழியன்

கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்த மேலும் சில முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சின்னசாமி இராஜம்: 
இவர் 1882 - ஆம் ஆண்டு நவம்பர் 28 - ஆம் தேதி கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பிறந்தார். இவர் தனது உயர்கல்வியினை கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் படித்த பின் 1904 - ஆம் ஆண்டு சேலம் அரசு நெசவுப் பள்ளியில் பயின்றார். நெசவுத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினார். 
பின்னர் இவர் சிறந்த தொழிலதிபராகவும் மற்றும் VISIONARY ENTREPRENEUR ஆகவும் விளங்கினார். 
இவருடைய ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தது, அவருடைய மனைவி 1944 - இல் இறந்தது இவரைப் பாதிப்புக்குள்ளாக்கியது. அதற்குப் பிறகு இவர் தனது இரண்டு பங்களாக்களை 5 இலட்சம் ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தில் - அவருடைய நண்பர்களாகிய டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், வழக்கறிஞரும் வள்ளலுமான எம்.சுப்புராம ஜயர், எம்ஐடியின் முதல் இயக்குநரான எம்.கே.ரங்கநாதன், ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சி.ஆர்.சீனிவாசன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் எல். வெங்கடகிருஷ்ண ஐயர் ஆகியோருடன் சேர்ந்த ஒரு குழு அமைத்து - முதல் தனியார் பொறியியல் கல்லூரியை 1949 - ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் MADRAS INSTITUTE OF TECHNOLOGY -MIT - ஐ நிறுவினார். இங்குதான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பயின்றார். பின்னர் சின்னசாமி இராஜம் காங்கிரசில் சேர்ந்து நாட்டு மக்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்தார். இவற்றுக்கெல்லாம் காரணம், இந்த டவுன் ஹை ஸ்கூல் பள்ளி ஆசிரியர்கள் இவருக்கு அளித்த கல்வி மற்றும் நேர்மை, சமுதாய நலன், பரந்த மனப்பான்மை, எல்லாரையும் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் சமமாகப் பார்க்க கற்றுக் கொடுத்தவை ஆகிய பண்புகளைச் சொல்லலாம். 
டாக்டர் எஸ்.ரங்காச்சாரி:
பறக்கும் மருத்துவர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டவர். இவர் 1882 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 - ஆம் தேதி கும்பகோணம் அருகில் உள்ள சருக்கை என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி ஒரு பொறியாளர். சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா, பொதுமருத்துவமனை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளில் உதவி புரிந்தவர். ரங்காச்சாரி கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில்தான் படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். நிப்லாக், ஜிஃப்போர்ட் (Nibblock and Gifford) என்ற இரண்டு ஐரோப்பிய மருத்துவர்கள் இவரை ஊக்குவித்ததால் 1900 - ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1904 -இல் மருத்துவப் படிப்பை முடித்தார். 1906 - ஆம் ஆண்டு முதல் தனது மருத்துவமனைப் பணியை அரசு மருத்துவமனைகளில் தொடங்கினார். சென்னை எழும்பூர், ஹைதராபாத், மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், பெர்ஹாம்பூர் (ஒடிசா) ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் பணி செய்தார். 1917 - ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உதவி கண்காணிப்பாளராகப் பதவி ஏற்றார். இந்தப் பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான். 
1919 -இல் அறுவைச் சிகிச்சை மருத்துவம் பயின்று அறுவைச் சிகிச்சை நிபுணரானார். 1922 - இல் அரசுப் பணியிலிருந்து விலகி, கென்சிங்டன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையை சென்னை பூந்தமல்லி ஹை ரோட்டில் தொடங்கினார். இவர் நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்தார். தொடக்கத்தில் சைக்கிளில் வந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். அதற்குப் பிறகு மோட்டார் பைக் ஒன்றை வாங்கி நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்தார். 1920 - ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய் கார் ஒன்றை ரூ.52 ஆயிரத்துக்கு வாங்கினார். ரூ.60 ஆயிரம் ரூபாய்க்கு Puss Moth என்ற விமானத்தை வாங்கினார். விரைவாகச் சென்று மக்களுக்கு மருத்துவம் செய்வதற்காக இதை வாங்கினார். இதனால் இவருக்கு பறக்கும் மருத்துவர் என்று பெயர். 
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்:
இவர் 1892 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 - ஆம் தேதி கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வரலாற்றாளர். இவரே சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். இவர் 1910 - - ஆம் ஆண்டு கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் நாராயணசாமி ஐயர் மற்றும் வலம்புரி பாலசுப்ரமணியம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து தமிழ் இலக்கியமும், இலக்கணமும் நன்கு கற்றறிந்தார். இவர் பள்ளிப் படிப்புக்குப் பின் தாலுகா அலுவலகத்திலும் , கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார். பின்னர் வாணதுறை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். 1930 - ஆம் ஆண்டு "முதலாம் குலோத்துங்க சோழன்' என்ற முதல் நூல் வெளியானது. பின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழராய்ச்சித்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல்வேறு இடங்களுக்குச் சென்று சோழர்கள் வரலாற்றை நன்கு ஆய்வு செய்து "பிற்காலச் சோழர் சரித்திரம்' என்ற பெரும் நூலை எழுதி மூன்று தொகுதிகளாக 1949, 1951 மற்றும் 1961 - ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். இவரது பல வரலாற்று நூல்களையும் மற்ற படைப்புகளையும் தமிழக அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. 
உமையாள்புரம் கே.சிவராமன்: 
1935 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 - ஆம் தேதி பிறந்தார். இவர் பள்ளிப் பருவத்திலேயே கர்நாடக சங்கீதத்தில் மிக ஆர்வம் கொண்டு அதைக் கற்றுக் கொள்ள அருபதி நடேச ஐயர், தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காட்டு மணி அய்யர், கும்பகோணம் ரங்கு ஐயங்கார் ஆகிய நால்வரிடமும் முறையாக மிருதங்கத்தைக் கற்றறிந்தார். இவர்களிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீதத்தைக் கற்றறிந்தார். இந்த ஆசிரியர்களிடம் பயிலும்போதே இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சட்டப் படிப்பு படிக்கும்போதே இந்த மிருதங்கப் பயிற்சியையும் தொடர்ந்தார். கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் கற்றார். இவர் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வெவ்வேறு இசை வல்லுநர்களிடம் மிருதங்கத்தில் தனிமுத்திரையைப் பதித்தார். இதனால் 2001 - ஆம் சங்கீத கலாநிதி என்ற விருதை சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு வழங்கியது. இவருடைய தந்தை ஒரு மருத்துவராக இருந்தபோதிலும், தனது மகன் கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்து, அவருடைய விருப்பப்படி பயில்வதற்கு அனுமதி அளித்தார். இவருக்கு இந்திய அரசு 1988 - ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. 2010 - ஆம் ஆண்டு பத்மவிபூண் விருது வழங்கப்பட்டது. கேரளப் பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. 
மகாராஜபுரம் சந்தானம்: 
இவருடைய தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆவர். இவருடைய தந்தையாரிடம் இசைப் பயிற்சியைப் பெற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரிடமும் இசையைக் கற்றுக் கொண்டார். 
இவர் முருகக் கடவுள் பற்றியும், காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் பற்றியும் பல பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் இலங்கையில் உள்ள ராமநாதன் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். 
இவர் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி சங்கரமடம், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோயில் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக இருந்திருக்கிறார். 
இவருக்கு 1990 - ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சென்னை மியூசிக் அகாதெமி 1989 - ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதை வழங்கியது. 1984 - ஆம் ஆண்டு இவருக்கு சங்கீத நாடக அகாதெமி விருது கிடைத்தது. இவை தவிர எண்ணற்ற விருதுகளை இவர் பெற்றார். 
எல். வெங்கடகிருஷ்ண ஐயர்:
இவர் 1944 -இல் கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் படித்த பிறகு, அவருடைய நண்பரான சின்னசாமி ராஜம் என்பவருடன் இணைந்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி உருவாவதற்கான எல்லா வேலைகளையும் பொறுப்பேற்று, அதன் முக்கிய குழுவில் இணைந்து பணியாற்றினார். 1961 -இல் இவருக்கு பத்மபூஷண் விருதை இந்திய அரசு வழங்கியது. இவர் கோதாவரி ஆற்றின் அருகில் உள்ள போலாவரம் அணைக்கட்டு உருவாவதற்கு காரணமாக இருந்தார். அதுவே கோதவரி ஆற்றுப்படுகைப் பகுதியில் விவசாயம் செழிக்க இன்றுவரை உதவி வருகிறது. 
கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டப் பகுதிகளின் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்த மத்திய அரசால் இந்த போலாவரம் அணைத்திட்டம் அமைக்கப்பட்டது. இந்த அணை சத்தீஷ்கர் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கும் உதவி வருகிறது. இதை திவான் பகதூர் எல்.வெங்கடகிருஷ்ண ஐயர் 1941 - ஆம் ஆண்டு சென்னை மாகாண நீர்ப்பாசனத்துறையின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது அமைத்தார். 3,50,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்த நிலப்பகுதியில் இரண்டு போகம் சாகுபடி செய்ய பாசன வசதிக்காகத் திட்டமிட்டார். அது மட்டுமல்லாமல், 40 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நீர்மின்நிலையம் அமைக்கவும் திட்டமிட்டார். இவை எல்லாவற்றையும் ரூ.6.5 கோடி செலவில் உருவாக்கினார். இந்த போலாவரம் அணைக்கட்டின் முழுநீர்க் கொள்ளளவு 208 அடியாகும். 836 டிஎம்சி தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம். இதன் பெயர் ராமபடா சாகர் என்று மாற்றப்பட்டுள்ளது. இவருடைய பொறியியல் திட்டமானது, சோழமன்னர்களால் கல்லணை கட்டப்பட்டு காவிரி நதி நீர் பாயும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குப் பயன்படுவதைப் பார்த்து, அதன் அடிப்படையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.


(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com