கரோனா காலம்...: நம்பிக்கையை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகள்!
கரோனா வைரஸ் படுவேகமாக நம்மைத் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கரோனாவை எதிர்த்த போரில் உதவக் கூடிய கண்டுபிடிப்புகளை


கரோனா வைரஸ் படுவேகமாக நம்மைத் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கரோனாவை எதிர்த்த போரில் உதவக் கூடிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. அதற்கு அம்மாநில அரசும் உதவுகிறது.
கரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் மூலிகைத் தூய்மைப்படுத்தி (Herbal hand sanitiser), கரோனோ ஓவன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் செயலி ஆகியவை ஐஐடி -ரூர்க்கியின் முன்முயற்சியினால் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
கைகளைக் கழுவ மூலிகைத் தூய்மைப்படுத்தி: ஐஐடி - ரூர்க்கியில் உள்ள சென்டர் நானோ டெக்னாலஜி துறையில் ஆய்வு மாணவராக இருக்கிறார் 29 வயதான சித்தார்த் ஷர்மா. அதே ஐஐடி- ரூர்க்கியில் மெட்டலர்ஜிகல் அன்ட் மெட்டீரியல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார் வைபவ் ஜெயின். இருவரும் சேர்ந்து 2019 -ஆம் ஆண்டு ஹீல் அக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்களை விரைவில் கண்டறியும் தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். திசுக்கள் உற்பத்தியாவது அவற்றைக் கட்டுப்படுத்தும் உயிரி மருத்துவக் கருவிகள், பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தும் நோய்கள் என இவர்கள் ஆராய்ச்சி விரிவடைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கரோனா தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களுக்குத் தேவைப்படும், கைகளைத் தூய்மைப்படுத்தும் சானிடைசரின் தேவையை அதிகமானதைக் கருதி அதைத் தயாரிக்கத் திட்டமிட்டனர்.
""நமது நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதலைப் பற்றிய செய்தி வரத் தொடங்கியதுமே நாங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் மூலிகை சானிடைசரை தயாரிக்கத் திட்டமிட்டு பணிகளில் இறங்கினோம். மூலிகையால் செய்யப்பட்ட சானிடைசரை முதலில் நண்பர்களிடம் கொடுத்து பயன்படுத்திப் பார்க்கச் சொன்னோம். அதன் பின் எங்களுடன் சேர்ந்து பயிலும் மாணவர்களின் உதவியுடன் இரவு பகலாக உழைத்து 300 லிட்டர் சானிடைசரைத் தயாரித்தோம். தற்போது ஐஐடி- ரூர்க்கி தந்த நிதியுதவியினால் நிறையத் தயாரித்து இருக்கிறோம்.
இதை முதலில் 100 மி.லி. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்துக் கொடுத்தோம். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்சுற்றுச் சூழலுக்குக் கேடு என்பதால், அதைத் தவிர்த்துவிட்டு, ஒரு பெரிய பாட்டிலில் நிரப்பி ஐஐடி- ரூர்க்கி வளாகத்தில் வைத்தோம். இதுவரை 600 லிட்டர் சானிடைசரை வைத்திருக்கிறோம். சானிடைசர் தேவைப்படுபவர்கள் தங்களிடம் உள்ள பாட்டில்களில் இலவசமாகப் பிடித்துச் செல்லலாம். இதேபோன்று ரூர்க்கி நகராட்சிக்கு 10 லிட்டர் கொடுத்தோம். மிக விரைவில் இந்த மூலிகை சானிடைசர் கடைகளில் கிடைக்கும்'' என்கிறார் ஷர்மா.
கரோனா ஓவன்: கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க கைகளைத் தூய்மையாக வைத்திருந்தால் மட்டும் போதுமா? நாம் தொடும் எல்லாப் பொருள்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
கடைகளில் இருந்து வாங்கி வரும் பிஸ்கெட் பாக்கெட்களில் கூட கரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். இதேபோன்று ஏராளமான பொருள்களை நாம் நாள்தோறும் வாங்குகிறோம். பயன்படுத்துகிறோம். அவற்றை எல்லாம் எப்படித் தூய்மைப்படுத்துவது?
ஐஐடி- ரூர்க்கியின் அரவணைப்பில் 2015 - இல் உருவான நிறுவனம்தான் கர்ஞ்9 ஙஹற்ங்ழ்ண்ஹப்ள். இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள் அக்ஷய் சிங்கால், கார்த்திக் ஹஜெலா என்ற இரண்டு இளைஞர்கள். இவர்கள் இருவருமே ஐஐடி- ரூர்க்கியில் பட்டம் பெற்ற பொறியாளர்கள்.
அவர்கள் இப்போது உருவாக்கியுள்ள கரோனா ஓவன் புற ஊதாக் கதிர்களினால் (UV-C) இயங்கக் கூடியது. இது மரபணுக்களைச் சிதைத்து, அவற்றை இயங்கவிடாமலும், புதுப்பித்துக் கொள்ளாதவாறும் தடுக்கக் கூடியது. இந்த கரோனா ஓவனில் வைக்கக் கூடிய பொருள்களில் படிந்திருக்கக் கூடிய எந்தக் கிருமிகளையும், வைரஸ்களையும் சிதைத்து அவற்றை அழிக்கக் கூடியது.
இந்த ஓவனில் வீட்டுக்கு அன்றாடம் பயன்படக் கூடிய பொருள்களை மட்டுமல்ல, வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று ஐயப்படும் எந்தப் பொருளையும் வைக்கலாம். உதாரணமாக பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை இந்த கரோனோ ஓவனில் வைத்தால், அது வைரஸ் நீக்கம் செய்யப்பட்டுத் தூய்மையாகிவிடும்.
""நாங்கள் தயாரித்துள்ள கரோனா ஓவனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், கரோனா வைரûஸ அழிக்க எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவுக்கு மட்டுமே வெளிப்படும். இதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் அங்குள்ள மனிதர்களைப் பாதிக்குமே? என்ற கேள்வி எழலாம். இந்த ஓவனுக்குள் பொருள்களை வைத்து மூடிய பிறகே புற ஊதாக் கதிர்கள் வெளிப்படத் தொடங்கும். இந்த ஓவனின் உட்புறப் பகுதி புற ஊதாக் கதிர்களை ஊடுருவிச் செல்ல அனுமதிப்பதில்லை. அது பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் பொருள்களினால் இந்த ஓவன் செய்யப்பட்டுள்ளதால் அவை வெளியே வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும்'' என்கிறார் அக்ஷய் சிங்கால்.
கண்காணிக்கும் செயலி: ஐஐடி - ரூர்க்கியில் பணிபுரிந்த கமால் ஜெயின் என்ற பேராசிரியர் மூலமாக உருவாக்கப்பட்ட நிறுவனம் RAVENEYE GEOSPATIAL PRIVATE LIMITED. இது ஏற்கெனவே "ஃபைன்ட் மை வெஹிகிள்' என்ற செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியிருந்தது. இந்தச் செயலியின் மூலம் பொது இடங்களில் நிறுத்தி வைத்த தனது வாகனம் எங்கே இருக்கிறது என்று ஒருவர் கண்டுபிடித்து விடலாம்.
கரோனா தொற்று அதிகரித்துவிட்ட நிலையில் இந்தச் செயலியை மேம்படுத்தி, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை அடையாளம் காணும் விதமாக இதை உருவாக்கியிருக்கிறார் கமால் ஜெயின். ஒரு வேளை இணையதளம் வேலை செய்யாவிட்டாலும் கூட, இந்தச் செயலி வேலை செய்யும். எஸ்எம்எஸ் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிவித்துவிடும்.
இந்தச் செயலி மருத்துவமனைகளுக்குப் பெரிதும் பயன்படும். அரசும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கூட்டமாக மக்கள் சேர்ந்திருந்தால் இந்தச் செயலி உடனே அரசு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்துவிடும்.
கரோனா தொற்று காலத்தில் மக்களுக்குத் தேவைப்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது இந்த கண்டுபிடிப்புகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...