முந்தி இருப்பச் செயல் கருத்துப்  பரிமாற்றத் திறன்

"தாயும் பிள்ளையுமே ஆனாலும், வாயும் வயிறும் வேறு' என்பார்கள். இதயத்தால், மனத்தால் எவ்வளவுதான் ஒன்றுபட்டிருந்தாலும், கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், மேலாளர்-ஊழியர் என அனைத்து மனித உறவுகளுக்குள்ளும்
முந்தி இருப்பச் செயல் கருத்துப்  பரிமாற்றத் திறன்
Published on
Updated on
3 min read

"தாயும் பிள்ளையுமே ஆனாலும், வாயும் வயிறும் வேறு' என்பார்கள். இதயத்தால், மனத்தால் எவ்வளவுதான் ஒன்றுபட்டிருந்தாலும், கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், மேலாளர்-ஊழியர் என அனைத்து மனித உறவுகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. 

ஓர் உறவின் ஆழமும், முக்கியத்துவமும் அதிகரிக்க, அதிகரிக்க, கருத்துப் பரிமாற்றத்தின் தேவையும், கடினமும் அதிகரிக்கின்றன. அதேபோல, உண்மையான  கருத்துப் பரிமாற்றம் நடக்கும் உறவுகளுக்குள், நேசமும், பாசமும் ஆழமாகின்றன. நுண்மங்களும், சிக்கல்களும் நிறைந்த வாழ்வில் கருத்து வேறுபாடுகளைத் திறமையுடன் கையாண்டு, வாழ்க்கைப் படகை சீரிய வழியில் செலுத்த உதவும் துடுப்புத்தான் இந்த கருத்துப்பரிமாற்றத் திறன். 

ஆணையிடுவது, அறிவுரைப்பது, அவதூறு  பேசுவது, அன்பொழுகக் குழைவது போன்றவை கருத்துப் பரிமாற்றம் ஆகாது. அரட்டை, வம்பளப்பு, திண்ணைப்பேச்சு போன்ற உரையாடல்களும் கருத்துப்பரிமாற்றம் அல்ல; ஏனென்றால் இவற்றிலெல்லாம் ஓர் இணக்கப் புள்ளியை நோக்கிய நகர்வு எதுவும் நடப்பதில்லை. 

எந்தவிதமான நோக்கங்களும் இல்லாத அளவளாவல் மற்றும் வாக்குவன்மையின் துணையோடு ஒருவரை தன் பக்கம் இழுத்து இணங்கச் செய்தல் எனும் இருதுருவங்களுக்கு இடையே அமைகிறது கருத்துப் பரிமாற்றம். கருத்துப் பரிமாற்றத்தில் நோக்கங்களோ, இணங்கச் செய்யும் முயற்சிகளோ முற்றிலுமாக இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சாதாரண உரையாடல் போலல்லாமல், கருத்துப்பரிமாற்றத்தில் ஓர் உண்மைத் தேடல் நிகழ்கிறது. 

ஒருவர் தமக்குத் தாமே  பேசிக் கொள்ளும் தனிமொழி (மோனோலாக்) தன்னலத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது. விவாதங்களில் பங்கேற்போர் மற்றவர்களை மனிதர்களாகக் கொள்ளாமல், அவர்களின் நிலைப்பாடுகளை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். அன்றாட உரையாடல்களில் பிறரை ஈர்ப்பதே பெரும் நோக்கமாக அமைகிறது. காதலர்களின் சிருங்காரங்களில் ஒருவரோடொருவர் பேசிக் களிக்கும் அனுபவம் மட்டுமே உயர்ந்து நிற்கிறது. மேற்குறிப்பிட்டவற்றைப் போலல்லாமல், கருத்துப் பரிமாற்றம் என்பது சிந்திப்பது மற்றும் சேர்ந்தியங்குவது எனும் இரண்டு மிக முக்கியமான  கூறுகளைக் கொண்டது என்கிறார் தத்துவாசிரியர் மார்ட்டின் பூபர். 

சிம்ஹா ஃபிளாப்பன் என்கிற இஸ்ரேலிய சமூக சேவகர் யூதர்களுக்கும், அரபுகளுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றச் சந்திப்புகள் நடத்த முயன்றார். ஆனால் ஒரு தரப்பினர் அறைக்குள் நுழைந்ததும், மறு தரப்பினர் வெளியேறியதைக் கண்ட அவர், மார்ட்டின் பூபரிடம், இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்று கேட்டார். பூபர் சொன்னார்: ""கருத்துப்பரிமாற்றம் நடப்பதற்கு உடனிருத்தல் தேவையில்லை, உணர்ந்திருத்தலே  போதுமானது''. 

அதாவது எதிர்த்தரப்பையும் இணைத்துக்கொண்டுதான் கருத்துப்பரிமாற்றம் நடத்த முடியும். ஆனால் அப்படி இணைத்துக் கொள்வது என்பது எதிர்த்தரப்பு உங்களருகே வந்து ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது அல்ல; மாறாக, எதிர்த்தரப்பு என்று ஒன்று இருப்பதை நீங்கள் அங்கீகரிப்பது, ஆமோதிப்பது, ஏற்றுக் கொள்வது. இதுதான் கருத்துப்பரிமாற்றத்தின் முதற்படி. 

இரண்டாவது படி, மனம்திறந்து முழுமையாகப் பேசுவது. தகவல் அதிகாரமென்று கொள்ளப்படும் இந்தக் காலகட்டத்தில், கருத்துப் பரிமாற்றம் அதிகாரப் பகிர்வைக் குறிக்கிறது. ஆட்டிப் படைக்கும் இடத்திலிருந்து கீழே இறங்கி வந்து, அருகருகே உட்கார்ந்து, தனது எண்ணங்களை, உணர்வுகளை எடுத்தியம்பி, எதிர்த்தரப்பும் அங்ஙனம் செய்ய உதவுவதுதான் கருத்துப் பரிமாற்றம். இது ஒருவரோடொருவர் சேர்ந்து நடத்தும் ஓர் உண்மைத் தேடல். 

மூன்றாவது படியாக, கருத்துப் பரிமாற்றம் முழுமையைக் கோருகிறது. காதுகள், கண்கள், இதயம், மனம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மனந்திறந்து  பேசுவதும், அகம்திறந்து கேட்பதும்தான் கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியக் கூறுகளாக அமைகின்றன. 

நான்காவது படி, குற்றஞ்சாட்டும், தாழ்மைப்படுத்தும் இழிமொழியைப் பயன்படுத்தாமல், உங்கள் எண்ணங்களின், உணர்வுகளின் மீது மட்டுமே கவனஞ் செலுத்திப் பேசுவது. அதாவது உண்மையை அன்போடு  பேசுவது! 

ஐந்தாவது படி, யாரும் முகம் இழப்புக்கு, கேவலத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் 
கொள்வது. கருத்துப் பரிமாற்றத்தின் இரண்டு மிக முக்கியமான அம்சங்கள் அனைத்துத் தரப்பாரின் மரியாதையும், கௌரவமும் போற்றப்படுவது. தான் அவமானப்பட்டுவிடுவோமோ அல்லது நகைப்புக்கிடமாகிவிடுவோமோ  என்கிற அச்சம் எழும்போதுதான் பலரும் வன்முறையில் இறங்குகிறார்கள். 

அமெரிக்க இல்லங்களில் மனைவி கணவனிடம், ""உங்களை ஒரு நிமிடம் சமையலறையில் பார்க்கலாமா?'' என்று கேட்டால், போர் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். ""உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்'' என்று நம்வீட்டு இல்லத்தரசிச் சொன்னால், கனமழை பொழியப் போகிறது என்று பொருள். இந்த கருத்துப்பரிமாற்றக் கலாசாரம் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இதன் பின்புலம் வாழ்தலின் வடிவமாகவும், முன்புலம் தேடலின் வடிவமாகவும் அமைகின்றன. பின்புலம் வலுவானதாக இருந்தால், முன்புலம் எளிதானதாக இருக்கும்.

 ஓர் எளிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம். அமெரிக்காவில் ஒரு சாலை விபத்து நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மோதிக் கொண்ட இரு வாகனங்களின் உரிமையாளர்களும் சத்தமாகக் கத்தி சண்டை போடவோ, அடிதடியில் இறங்கவோ மாட்டார்கள். அமைதியாக தத்தம் தொலைபேசி எண்களையும், வாகனக் காப்பீட்டு விவரங்களையும் பரிமாறிக் கொண்டு தத்தம் வழிகளில் போய் விடுவார்கள். பொருளாதார பலம், வலுவான காப்பீடு கட்டமைப்புகள் என வாழ்தலின் வடிவம் மேம்பட்டதாக இருப்பதால், நியாயம், இழப்பீடு போன்ற தேடலின் வடிவம் எளிதாக இருக்கிறது. 

உண்மை  பேசி, உண்மையைத் தேடும் கருத்துப் பரிமாற்றம் மனித உறவுகளுக்குள் மட்டுமே நடக்கும் என்பதல்ல. மனிதனுக்கும், இறைவனுக்குமிடையே கூட நடக்கிறது. அர்ஜுனனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவுக்கும் இடையே நடக்கும் ஒரு கருத்துப் பரிமாற்றம்தான் பகவத் கீதை. 

111 ஆண்டுகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி எழுதிய "ஹிந்த் ஸ்வராஜ்' என்கிற சிறு நூல், ஆசிரியர்- வாசகர் எனும் இரு மனிதர்களுக்கிடையே நடக்கும் கருத்துப்பரிமாற்றமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி மென்முறை போற்றும் தன்னை ஆசிரியராகவும், வன்முறையில் நம்பிக்கைக் கொண்டிருந்த தீவிர  தேசியவாதி ஒருவரை வாசகராகவும் உருவகப்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறார். ஆசிரியர் சில இடங்களில் பொறுமையிழந்தாலும், எந்த இடத்திலும் தன் சகிப்புத்தன்மையை இழக்கவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். 

சனநாயகத்தை வலியுறுத்தி, அதிகாரப் பரவலை ஊக்குவிக்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது அடிப்படையான சமூகச் செயல்பாடு. இது சீராக, செம்மையாக, செழுமையாக நடந்த காரணத்தால்தான், மனிதகுலம் இத்தனை  தூரம் பயணப்பட்டு இங்கே வந்து சேர்ந்திருக்கிறது. 

வானொலி, தந்தி, தொலைபேசி, செயற்கைக்கோள் போன்ற தொடர்பு ஊடகங்கள் அனைத்தையும் கடந்து, இன்று மின்னஞ்சல், வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்ற இணையதளக் காலத்தில் நிற்கிறோம் நாம். எவ்வளவு மேம்பட்ட  தொழில் நுட்பங்கள் வந்தாலும், மனித வாழ்வில் நேருக்கு நேர் அமர்ந்து நாம் மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றம்தான் முக்கியமானதாக இருக்கிறது. 

ஏற்கெனவே நாம் விவாதித்திருக்கும் பேச்சுத் திறன், கேட்கும் திறன் போன்றவற்றின் நுண்மங்களை உள்வாங்கி, நம் கருத்துப் பரிமாற்றத் திறனை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. இதற்கான ஓரிரு செய்முறைப் பயிற்சிகளைப் பார்ப்போம்:

உங்கள் தோழர்கள் சிலருடன் அமர்ந்து உங்கள் பகுதியின் கருத்துப் பரிமாற்றக் கலாசாரம், மற்றும் அதன் நிறை குறைகளை விவாதி
யுங்கள்.

இருவர் இருவராக அமர்ந்து, ஏதேனும் ஒரு பொருள் குறித்து ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்கள் பேசி, ஒரு பத்து நிமிடக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுங்கள். பின்னர் மொத்தக் குழுவும் கூடியிருந்து, அனைவரின் அனுபவத்தையும் பகிருங்கள்.

இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து, பாலியல் தொந்தரவு செய்வோரை, ஒருதலைக்காதலைத் தெரிவிப்போரை, இம்மாதிரியான ஆபத்தான சூழல்களை எப்படி  சாதுரியமாக அணுகுவது, மடைமாற்றுவது என்றெல்லாம் கருத்துப்பரிமாற்ற நுணுக்கங்களுடன் "பங்கேற்பு நாடகம்' நடத்திப் பயிலலாம்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தொடர்புக்கு: spuk2020@hotmail.com.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com