கடினமான சூழல்... எதிர்கொள்வது எப்படி?

உலகில் வாழும் ஒவ்வொருவரும் கடினமான சூழலில் தான் தங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
கடினமான சூழல்... எதிர்கொள்வது எப்படி?


உலகில் வாழும் ஒவ்வொருவரும் கடினமான சூழலில் தான் தங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்கள். நாள்தோறும் புதுப்புது பிரச்னைகள் மக்களுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த காலங்களை விட தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிரச்னைகளை எதிர்கொண்டு அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதை வெற்றிகரமாகக் கடந்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பல வழிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் மட்டுமே நாம் ஓட வேண்டுமே தவிர பிரச்னையைக் கண்டு ஓடக் கூடாது. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டவர்கள் வெற்றிக்கனியை சுலபமாகத் தட்டிப் பறித்த வரலாறு ஏராளம்.

சவால்களை எதிர்கொள்ளல்: எந்த ஒரு பிரச்னையை சிந்திக்கும் பொழுதும் நம்மால் அது முடியாது என்று நினைத்தால் அது எதிர்வினை ஆற்றி அந்த செயலைப் பற்றிய சிறிய சிந்தனையைக் கூட நமக்குள் உருவாக்காது. அதைவிட்டு விட்டு நம்மால் முடியும் என நினைத்து அந்தச் சவாலை அணுகினால் அதன் மூலம் உருவாகும் கஷ்டங்களும், சிரமங்களும் கூட நமக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அது நம் சவாலை நோக்கிய பயணத்திற்கு படிக்கல்லாகக் கூட அமையலாம்.

நமது உறவுகளின் தொடர்பை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவோர், அதற்காக பல விஷயங்களை இழந்தாக வேண்டும்.

உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டுமானால் கடினமான உடற் பயிற்சிகளையும், கடினமான உணவுப் பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதுபோல் பதவி உயர்வு பட்டியலில் பலர் இருக்கும் போது ஒருவர் மட்டுமே அதற்கு தேவைப்படும் நிலையில் கடினமாக உழைத்தால் மட்டுமே அந்த இடத்திற்கு தகுதியானவர் நாம் என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். அது போல் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் சிரமங்களையும், பிரச்னைகளையும் எதிர்கொண்டு அதை நோக்கிப் பயணித்தால் மட்டுமே உயர்ந்த நிலையை எட்ட முடியும். அதற்காக அவர்கள் பல அசெüகரியங்களை சந்திக்க நேரிடும். இந்த அசெüகரியங்கள் தான் எதிர்காலத்தில் அவர்களுக்கு பல செளகரியங்களைக் கொடுக்கும். நமது வெற்றியும், தோல்வியும் நாம் எதிர்கொள்ளும் சவால்களின் மூலமாகத்தான் கிடைக்கும்.

சமூக ஆதரவைப் பயன்படுத்துதல்: பொதுவாக நம் எல்லாருடைய மனதிலும் இந்த சமூகம் நாம் உயர்வு அடைவதை விரும்புவதில்லை; இந்த சமூகத்தில் உள்ள யாரும் நமக்காக யோசிப்பதில்லை; நம் உயர்வுக்கு வழி சொல்வதில்லை என்றுதான் நினைத்து வருகிறோம் அப்படி நினைப்பது தவறு. சமூகத்திலுள்ள யாரோ ஒருவர் நம்முடைய உயர்வுக்காக வழி சொல்லக் கூடிய நபராக நிச்சயம் இருப்பார் .அவரைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நமது வெற்றி இருக்கிறது.

சமூகத்தில் உள்ள அனைவருமே ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொண்டு வரத்தான் செய்கிறார்கள். நீங்கள், நான் மட்டும்தான் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் அறியாமை. நீங்கள் அதை விடுத்து அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சவால்களைச் சமாளித்து வருகிறார்கள் என்று நினைத்தால் உங்களாலும் எளிதாக சவால்களை எதிர்கொள்ள முடியும்.

எனவே, உறவுகள், நட்புகள் , சமூகம், ஆன்லைன் மூலமான ஆலோசனைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பிரச்னைகளில் தேவையான ஆலோசனைகளைப் பெற்று அந்த பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். எனவே, சமூகம் சார்ந்து அவர்கள் ஒத்துழைப்புடன் நம்மால் எளிதில் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று நம்பி செயலாற்ற வேண்டும்.

திட்டமிடுதல்: எந்தவொரு பிரச்னையையும் சமாளிக்க அது குறித்து திட்டமிடாமல் நாம் எதையும் செய்தால் அது பெரிதாகத்தான் தெரியும். அதையே இதை எப்படி செயல்படுத்துவது என திட்டமிட்டுச் செயல்படுத்தினால் மிக எளிதாக அந்த பிரச்னையை அணுக முடியும். ஒரு பிரச்னையைக் கண்டு ஒருவர் தெறித்து ஓடுகிறார் என்றால் அதற்கு அவரிடம் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதால்தான்.

குறிப்பிட்ட பிரச்னையைத் தீர்ப்பதற்கு தன்னிடம் போதுமான நேரம் இல்லை. அதிக வேலைகள் குவிந்து கிடக்கின்றன என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல. பிரச்னையை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு அந்த கால அவகாசத்திற்குள் அது போன்ற பிரச்னைகளை மற்றவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்னை நமக்கு பிரச்னையாக இருக்காது.

பிரச்னைகள் குறித்து பலரும் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அதை ஒருங்கிணைப்பதன் மூலம் சரியான தீர்வை எட்ட முடியும். கணினியில் நிரல் உருவாக்குவது போல் படிப்படியாக அதை வரிசைப்படுத்தி கொண்டு செயல்பட்டால் பிரச்னைக்கான தீர்வு விரைவில் கிடைத்துவிடும். முதலில் பிரச்னையை சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. அந்தப் பிரச்னையை லட்சியமாக மனதில் இருத்தி அதை நோக்கிய பயணத்தை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

சரியான நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்: மனிதர்கள் அனைவருக்குமே ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள். நல்ல நண்பர்களைத் தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்று. நண்பர்களில் சிலர் அவன் நம்மை விட உயரத்துக்குச் சென்று விடக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் பிரச்னைக்கு நிச்சயமாக தீர்வு சொல்ல மாட்டார்கள் இன்னும் சிலரோ எதிர்மறை சிந்தனைகளை உடையவராக இருப்பார்கள் எடுத்த எடுப்பிலேயே உன்னால் முடியாது என்று சொல்லிவிடுவார்கள். இதனால் நமக்கு பிரச்னைகளை எதிர் கொள்ளவே தயக்கம் ஏற்பட்டுவிடும்.

நம்மை நாமே தயார் செய்தல்: உலகின் உயரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே அந்தப் பயணத்தில் ஏற்படும் இடர்களை முதலில் தெரிந்துகொண்டு அதை எதிர்கொள்வதற்கு தயார்ப்படுத்திக் கொள்வார்கள். தம்மைத்தாமே தயார்படுத்தி கொள்பவர்களால் மட்டுமே உயரிய இலக்குகளை அடைய முடியும். எனவே பிரச்னைகளை எதிர்கொள்ள முதல் தகுதியே நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதுதான்.

உதாரணமாக மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இருக்கும் ஒருவர் உண்மையாகவே சுயமாகவே யோசித்து விட வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே விட முடியும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக விடுவது என்பது கடினம். எனவே, எந்த பிரச்னை என்றாலும் அல்லது மாற்றம் வேண்டும் என நினைத்தாலும் அது நம்மிடம் இருந்து தான் உருவாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com