கதைகள் மூலம் கல்வி!

வளர்ந்துவரும் நவீன சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க புதுமையான முறைகளில் பாடம் கற்பிப்பது அதிகரித்து வருகிறது.
கதைகள் மூலம் கல்வி!
Updated on
1 min read

வளர்ந்துவரும் நவீன சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க புதுமையான முறைகளில் பாடம் கற்பிப்பது அதிகரித்து வருகிறது. கதைகள், பாடல்கள், பல்வேறு விளையாட்டுகளின் மூலம் பாடம் கற்பிக்கும் பாரம்பரிய வழக்கமுறைகள் மறைந்து தற்போது நவீன கற்பிக்கும் முறைகள் வந்துவிட்டன. வகுப்புகளில் மாணவர்களை அமர வைத்து கரும்பலகையின் முன்நின்று எழுதிக் காட்டி கற்பிக்கும் முறையைவிட எதையும் செயல்முறை மூலம் கற்பித்தால் மாணவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.

பல கல்விக் கூடங்களில் செயல்வழிக் கற்றல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் செயல்வழிக் கற்றலைவிட, இளம் மாணவர்களுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் கற்பித்தால் மிக எளிமையாகப் புரிந்து கொள்வார்கள் என்ற ஆய்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழகத்தின் "மில்னர் சென்டர் ஆஃப் எவால்யூஷன்' அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஆரம்பப்பள்ளி மாணவர்கள் செயல்முறை கற்றலை விட ஆசிரியரால் கூறப்படும் கதைகள் மூலமாக பரிணாம வளர்ச்சியைப் பற்றி திறம்பட கற்றுக்கொள்கின்றனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எளிய மற்றும் சற்று கடினமான பாடங்கள் என இரு விதங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2,500 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதற்காக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை செயல்முறையில் ஈடுபடுத்தியும், கதைகளைச் சொல்லியும் கற்பித்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளில் கதை சொல்வதன் மூலமாக மாணவர்கள் அதிகப் புரிதலைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. "சயின்ஸ் ஆஃப் லேர்னிங்' என்ற இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பாத் பல்கலைக்கழகத்தின் மில்னர் சென்டர் ஆஃப் எவால்யூஷன் இயக்குநர் பேராசிரியர் லாரன்ஸ் ஹர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதுகுறித்து அவர், "கதை கேட்பதைக் காட்டிலும் செய்முறையில் ஈடுபடுவதையே மாணவர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று நினைத்திருந்த சூழ்நிலையில், அவர்கள் கதைகளில் ஆர்வம் காட்டியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பரிணாம வளர்ச்சி பற்றிய பாடங்களில் இம்மாதிரியான முடிவுகள் வந்துள்ளன. என்றாலும் தொடர்ந்து மற்ற பாடங்களிலும் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

தற்போதைய கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கதைகள் மூலம் ஆசிரியர்கள் ஒரு புது யுத்தியை கையாள்வது மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com