பன்னாட்டு  தொலைக்காட்சி திரைக்கதைப் போட்டி!

பன்னாட்டு தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் கழக அறக்கட்டளை (The International Academy of Television Arts & Sciences Foundation) எனும் பன்னாட்டு அமைப்பு 1989 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும்.
பன்னாட்டு  தொலைக்காட்சி திரைக்கதைப் போட்டி!

பன்னாட்டு தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் கழக அறக்கட்டளை (The International Academy of Television Arts & Sciences Foundation) எனும் பன்னாட்டு அமைப்பு 1989 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் "சர் பீட்டர் உஸ்தினோவ் தொலைக்காட்சி  திரைக்கதை விருதினை' வழங்கி வருகிறது.  

அமெரிக்கர் அல்லாதவர்களைத் தொலைக்காட்சித் திரைக்கதை எழுத ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் விதிமுறைகளை ஒரு முறை படித்துத் தெரிந்து கொள்ளலாம். 
18 வயதுக்கு மேற்பட்ட 30 வயதுக்குட்பட்ட அமெரிக்கர் அல்லாத எவரும் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். 31-12-2020 ஆம் நாள் வரை 30 வயதை அடையாதவராக இருக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்பவர் பன்னாட்டுத் தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் கழக அறக்கட்டளையில் பணியாற்றுபவர்களின் உறவினர்களாக இருக்கக் கூடாது.  

இப்போட்டிக்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரையிலான தொலைக்காட்சி நாடகத் திரைக்கதையினை ஆங்கில மொழியில் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். 

போட்டிக்கான திரைக்கதை, தனியாகவோ அல்லது முன்னோட்டக் கதையாகவோ இருக்க வேண்டும். தொடரின் ஏதாவதொரு பகுதியாக இருக்கக் கூடாது.  

இத்திரைக்கதையானது போட்டியில் கலந்து கொள்பவரின் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். 

பங்கேற்பவர் இப்போட்டிக்கான நுழைவு மற்றும் வெளியீட்டுப் படிவங்களை நிரப்பிச் சமர்ப்பித்திட வேண்டும்.

பங்கேற்பவர் சமர்ப்பிக்கும் திரைக்கதை உலகின் எந்தவொரு தொலைக்காட்சியிலோ அல்லது இணையதளங்களிலோ வெளியானதாக இருக்கக் கூடாது. 

இதேபோல், முன்னர் விற்கப்பட்ட அல்லது விற்பனைக்காக அனுமதிக்கப்பட்ட திரைக்கதைகளையும் போட்டிக்குச் சமர்ப்பிக்கக் கூடாது. 

ஒரு நுழைவுக்கு ஒருவர் எனும் நிலையிலேயே போட்டிக்கான திரைக்கதை சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழுவாக இருப்பின், குழுவிலிருந்து ஒருவரை அங்கீகரித்து அவர் வழியாகவே  சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கே  பரிசுத்தொகையும், விருதும் அளிக்கப்படும்.   

முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.  இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. 

போட்டிக்கான திரைக்கதையினைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2020 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவர்கள் கையொப்பமிட்ட நுழைவுப்படிவம், திரைக்கதை எழுதியவரின் ஒரு பக்க அளவிலான சுயவிவரக் குறிப்பு, வயதை உறுதிப்படுத்துவதற்கான அரசுச் சான்றுகளில் ஒன்று, போட்டிக்கான திரைக்கதை என்று நான்கினையும் ஒரே மின்னஞ்சல் மூலமாக foundation@iemmys.tv எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.

திரைக்கதையின் தலைப்புப் பக்கத்துடனான திரைக்கதையின் ஒரு பகுதியை பங்கேற்பவரின் தலைப்பெழுத்துடன் (Initial's) பிடிஎப் கோப்பாக http://upload.iemmys.tv/Ustinov எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். திரைக்கதையின் சுருக்கம் 100 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 250 வார்த்தைகளுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் திரைக்கதையின் அமைப்பு, கதை மாந்தர்கள் உருவாக்கப்பட்ட தன்மை, படைப்பாற்றல், அறிவுத்திறன் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நடுவர்கள் பரிசுக்குரியவரைத் தேர்வு செய்வர்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

போட்டியில் வெற்றி பெற்றவர் குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும்.  
இப்போட்டியில் வெற்றிக்குரியவராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு அமெரிக்க டாலராக $2500 பரிசாக வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 21-11-2020 ஆம் நாளில் நியூயார்க் நகரில் நடைபெறும் பன்னாட்டு எம்மி உலகத் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பரிசுத்தொகை வழங்கப்படுவதுடன், பரிசுத்தொகையினைப் பெறுவதற்காக அவர் நியூயார்க் வந்து செல்லும் செலவையும் இந்த அமைப்பே ஏற்றுக் கொள்ளும்.  

இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுடையவர்கள், இந்த அமைப்பின் https://www.iemmys.tv/international-emmy-awards/other-awards/sir-peter-ustinov-scriptwriting-award/ எனும் இணைய முகவரிக்குச் சென்று கூடுதல் தகவல்களைப் பெறலாம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com