நன்றி பாதி... நல்லெண்ணம் மீதி!

""வளர்ச்சிக்கான வரம்புகள் எதுவுமில்லை,ஏனென்றால் மனித அறிவாற்றலுக்கானவரம்புகள் எதுவுமில்லை.''
நன்றி பாதி... நல்லெண்ணம் மீதி!

""வளர்ச்சிக்கான வரம்புகள் எதுவுமில்லை,
ஏனென்றால் மனித அறிவாற்றலுக்கான
வரம்புகள் எதுவுமில்லை.''

- ரொனால்ட் ரீகன்.

ஒருவருக்கு பணமும் பதவியும் வரும்போது, அது ஏனோ அவர் அந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாரும் பெரும்பாலும் அவர் அருகில் இருப்பதில்லை. புதுப் பணக்காரர், புதிய பதவிக்கு சொந்தக்காரரைச் சுற்றி புது உறவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். புதுப்பொழிவு பெற்றவரோ "நன்றி கெட்டவர்' என்று புதிய பட்டம் ஒன்றை வாங்கியிருப்பார்.

"நாம் நல்லவர்கள். நன்றியுள்ளவர்கள். நம்மைத் தவிர நம்மைச் சுற்றி இருப்பவர்கள் யாரும் நல்லவர்களில்லை; நன்றியுள்ளவர்களில்லை' - நன்றி கொன்ற மனிதர்களாகத் திரியும் நம்மில் பெரும்பான்மையான மனிதர்களின் உளவியல் இப்படித்தான் இருக்கிறது. ""இவனுக்கு எவ்வளவு செய்திருப்பேன் தெரியுமா? ஒண்ணுமில்லாம வந்தான்... இன்னைக்கு எல்லாத்தையும் மறந்துட்டான்'' என்று பெருமூச்சுடன் அங்கலாய்ப்பவர்கள் ஏராளம்.

இவ்வுலகில் வெற்றிபெற்றவர்களின் பயணத்தில் நன்றியுணர்வுக்கு ஒரு மிகப் பெரிய இடம் இருக்கும். முயற்சி திருவினையாக்கும் என்கிற பிரபஞ்ச தாத்பரியம் இங்கு பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

பயிற்சியோடு முயற்சி செய்கின்றவர்கள் எல்லாம் வெற்றி என்னும் இலக்கை தொடுவர் என்பதில் எவ்வித ஐயமும் நமக்கில்லை. ஆனால், வெறும் முயற்சி மட்டும் போதுமா? நல்லெண்ணம் வேண்டாமா? ஒருவருடைய வாழ்வுக்கு, உயர்வுக்கு, வளர்ச்சிக்கு காரணமான மனிதர்கள், வாய்ப்புகள், இயற்கையின் கொடைகள் மற்றும் வளங்களின் மீது ஒருவருக்கு நன்றியுணர்வு வேண்டாமா?
பலமான எதிர்ப்புகள் மற்றும் தடைகளற்ற வளர்ச்சிக்கு அவசியமான தகுதிகளோடு, ஆற்றலோடு, குணங்களோடு பயணித்த அனைவரும் நன்றியுணர்வு மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்கிறார்கள் என்பதே உண்மை. நன்றியுணர்வு ஒருவருக்கு நேர்மறையான சிந்தனையை, நல்லெண்ணத்தைக் கொடுத்து, அவரை வீரியமாக்குகிறது. நாம் எந்தச் சூழலில் படைக்கப்பட்டோமோ, பிறந்தோமோ, இருக்கின்றமோ... அதற்காவே முதலில் நாம் இயற்கைக்கு நன்றி சொல்பவர்களாக இருக்கவேண்டும். அதேசமயம், பிறரிடமிருந்து எந்த நன்றியுணர்வையும் எதிர்பார்க்காமல் வாழ நாம் பழகிக் கொண்டால், இன்னல்கள், ஏமாற்றங்களிலிருந்து தப்பித்து, வெற்றி பெற்றுவிட்டோம் என்று திண்ணமாகச் சொல்லலாம்.

உலகின் அனைத்து மதங்களும் நன்றியுணர்வை வலியுறுத்துகின்றன. பழங்கால கிரேக்கத் தத்துவஞானி சிசெரோ, ""நன்றியுணர்வு என்பது நல்லொழுக்கங்களில் மிகச் சிறந்தது மட்டுமல்ல, மற்ற நல்லொழுக்கங்களின் பிறப்பிடமே அதுதான்'' என்கிறார். மாஸ்லோவின் பார்வையில், "ஒருவர் தனக்குக் கிடைத்த வரங்களை எண்ணி மகிழ வேண்டும்' என்கிற கூற்று மிகவும் முக்கியமானது.

மனிதர்களின் அனைத்து உறவுகளுக்கும், திருமணம் மற்றும் காதல் உறவுகளுக்கும் இது பொருந்துமா? ஆம். அனைத்து உறவுகளுக்கும் இது நூறு சதவிகிதம் அப்படியே பொருந்தும். "அனைத்து உறவுகளுக்கிடையேயும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த நன்றியுணர்வோடு இருக்கும்போது, அவர்களுக்கிடையில் பெரிதாகச் சண்டைகளோ, மனக்கசப்புகளோ வருவதில்லை' என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உறவுகளுக்குள் தினசரி சின்னச்சின்ன விஷயங்களில் வெளிப்படுத்திக் கொள்ளும் எளிய நன்றியுணர்வானது அவர்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்பதே நிரூபணம். பொருட்களை, பணத்தை, பசப்பும் போலியான மொழிகளை உறவுகளுக்குள் பரிமாறிக்கொள்வதைக் குறைத்து - அல்லது அறவே தவிர்த்து - ஒருவர் நன்றியுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதற்கு நீடித்த, வலுவான பலன் இருக்கும்.

ஒருவர் தனது தினசரி வாழ்க்கையில் எந்த அளவிற்கு நன்றியுணர்வைக் கொண்டு வருகிறாரோ, அந்த அளவிற்கு அவரது மகிழ்ச்சிக்கும் நலனுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சுய பிரகடனமாக நாம் ஒவ்வொருவரும் இனி தவறாமல் நன்றியுணர்வைப் பின்பற்றுவதாக ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் நமது நன்றியுணர்வு வாக்குறுதியை, உறுதிமொழியை மிக எளிமையாக எழுதிக் கொண்டு, நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ அனைவரது பார்வையிலும் நன்றாகப் படுகிற ஓர் இடத்தில் அதைப் பொருத்தி... பார்ப்பதும், வாசிப்பதும், அதை நமக்கு நாமே... மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கடைப்பிடிப்பதும், ஒருவரது வாழ்வில் பெரியதொரு மாற்றத்தையும், உயர்வையும் கொண்டுவரும்.

வெறுமனே உதட்டளவில் நன்றி சொல்லிக் கொண்டிருப்பதோ, மனசார நன்றியை உணர்வதோ மட்டுமே நன்றியுணர்வு ஆகாது. இயற்கையும், இந்த பிரபஞ்சமும் நமக்கு அளித்திருக்கும் பல்வேறு வகையான வாய்ப்புகளையும், வசதிகளையும் முழுமையாக நன்றியுணர்வோடு பயன்படுத்திச் செல்ல வேண்டும். இந்த நன்றியுணர்வு எல்லாவிதமான கடின உழைப்பு, ஆற்றல், திறமைகளைக் கடந்து ஒருவருக்கு நல்லெண்ணத்தை கொடுக்கும். அந்த நல்லெண்ணமே ஒருவரது வாழ்க்கையில், வெற்றியில் பூஜ்ஜியங்களுக்கு முன்னே வந்து நிற்கும் முழுஎண்ணாக அமைகிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில், "செய்நன்றி அறிதல்' என்கிற பதினொன்றாவது அதிகாரத்தில்... "கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்' (குறள்: 109) என்று சொல்வதன் மூலம், "முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்' என்று நன்றியுணர்வின் உன்னத வலிமையை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார் வள்ளுவர். மேலும், "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்று குறள்: 110 -இல், "எத்தனை பெரிய அறங்களை அழித்தவருக்கும் விமோச்சனம் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு எந்த விமோச்சனமுமில்லை' என்று நமது பொட்டில் அறைவது போல சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

"ஆள் பாதி... ஆடை பாதி' என்கிற பழமொழி நம் புறத்திற்கு. "நன்றி பாதி... நல்லெண்ணம் மீதி' என்கிற புதுமொழி நம் அகத்திற்கு. நன்றியோடும் நல்லெண்ணத்தோடும் வாழ்வோம். வெற்றிபெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com