வருமுன் காப்போம்... வந்த பின்பும் காப்போம்!
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.


1918 -ஆம் ஆண்டை உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. முதல் உலகப் போர் முடிவடையும் தறுவாயில் பல நாடுகளில் பரவியது ஸ்பானிஷ் ஃபுளூ. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சில மணி நேரங்களில் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் நோய்த்தொற்றுக்கு இரையாகின. சில குடும்பங்களில் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சுமார் ஓராண்டு காலம் நீடித்த அந்த நோய்த்தொற்று பரவல், 5 கோடி முதல் 10 கோடி மக்களை உயிரிழக்கச் செய்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவிலான பாதிப்பை கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) இன்னும் ஏற்படுத்தவில்லை. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு அதன் தீவிரம் அதிக அளவில் இல்லை என்றும், நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு அதிகமானவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
எனினும், கரோனா நோய்த்தொற்றை அவ்வளவு சாதாரணமாக நாம் கருதிவிடக் கூடாது. ஏனெனில், கரோனா நோய்த்தொற்று என்பது முதல்கட்டமாக நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. கரோனா வைரஸ் மக்களுக்கு எளிதில் பரவும் என்பதாலும், அதற்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்பதாலும் நோய்த்தொற்றை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாவிட்டால், லட்சக்கணக்கான நபர்கள் உயிரிழக்கக் கூடும். அதற்கான காரணங்களைக் காண்போம்:
நோய்த்தொற்றைப் பொருத்தவரை முதலில் நாம் ஆராய வேண்டியது பாதிக்கப்படுவோரின் விகிதம். 2009-ஆம் ஆண்டு பரவிய ஹெச்1என்1 பன்றிக் காய்ச்சலால் உலகம் முழுவதும் 20 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, பருவகாலங்களில் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலால் 5 முதல் 10 சதவீதம் வரையிலான இளைஞர்களும், 20 முதல் 30 சதவீத குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 4 சதவீத மக்களையே பாதித்துள்ளது. ஆனால், பல்வேறு நாடுகளில் அந்த நோய்த்தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் இப்போதுதான் அந்த நோய்த்தொற்று முதல்கட்ட அளவில் பரவி வருகிறது.
எனவே, கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உலகம் முழுதும் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வாயிலாக எத்தனை நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது. பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் மூலம் சராசரியாக 1.3 நபர்களுக்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் சராசரியாக இருவருக்கு நோய்த்தொற்று பரவி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த நோய்த்தொற்று தற்போதுதான் புதிதாகப் பரவி வருகிறது என்பதால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்புத் திறனும் பெரும்பாலானவர்களின் உடலில் இருக்காது.
சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் தீவிர பாதிப்புக்கு உள்ளாகினர்; 6 சதவீதம் பேர் கவலைக்கிடமான சூழலுக்குச் சென்றனர். சீனாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 முதல் 3 சதவீதம் பேர் உயிரிழந்தனர். தற்போது வரை உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டனர்.
கரோனா வைரஸ் முதியவர்களைதான் அதிகமாகப் பாதிக்கிறது என்ற அலட்சியப் போக்கை நாம் கைக்கொள்ளக் கூடாது. இளைஞர்களையும் அந்த நோய்த்தொற்று தாக்கி வருகிறது. பல இளைஞர்கள் அந்த நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிரையும் இழந்துவிட்டனர். முக்கியமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளானவர்களை கரோனா நோய்த்தொற்று அதிகமாகத் தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, கரோனா நோய்த்தொற்றால் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவது தெரிய வந்துள்ளது. புகைப் பழக்கம் உள்ளிட்டவற்றை பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் கைக்கொண்டுள்ளதால், அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, புகைப் பிடிப்பதை இளைஞர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
கரோனா வைரஸூக்கு எதிராக மருந்தோ தடுப்பு மருந்தோ இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், தற்போதைய சூழலில் கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதும் அதிலிருந்து விடுபடுவதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தே உள்ளது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவல்ல உணவுப் பொருள்களை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வது அவசியம்.
கரோனா வைரஸூக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் போனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து, அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதுமான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் பலர் உயிரிழந்தனர். எனவே, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோம்... கரோனா வைரûஸ வெல்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...