ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுழல் துப்பாக்கி தந்த சாமுவேல் கோல்ட்!

அகவை 15. மெல்லிய உடம்பு. பழுப்பு நிறக் கண்கள். ஆறடி உயரம். இப்படி ஒரு வடிவம். மரக்கலத்தின் மேல்தளத்தில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தது.

News image
Updated On :14 மே 2020, 11:52 am

அகவை 15. மெல்லிய உடம்பு. பழுப்பு நிறக் கண்கள். ஆறடி உயரம். இப்படி ஒரு வடிவம். மரக்கலத்தின் மேல்தளத்தில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தது. காலைக் கதிரவனின் பொற்கதிர்களால், வெண்ணிற கடல் நீரெல்லாம் பொன்னிறப் பொற்குழம்பாகிப் புதுக்கோலம் பூண்டிருந்தது. மரக்கலத்தின் மேலே பட்டுச் சிதறி வரும் சிறுசிறு நீர்த்திவலைகள் கதிரவன் ஒளிப்பட்டு வானவில்லாக மாறிப் பன்னிற வண்ணப் பந்தல் போட்டன. அந்த நீர்த்திவலைகள் மேலே படுவதால் ஒரு வகைக் குளுமையை உடம்பு பெற்றது. தண்ணென்ற காலை இளங்காற்று உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. மரக்கலம் காற்றில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இத்தனை அழகுகளுக்கும் இடையில் அந்த வடிவத்தின் உள்ளம் மட்டும் ஒன்றிலும் பற்றில்லாமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதை, விரிந்து சுருங்கும் அதனுடைய பரந்த முகம் பளிச்செனக் காட்டியது. கப்பலுக்குத் திசைகாட்ட காற்று. அதனை வழிப்படுத்த ஒரு மீகாமன். ஆனால் அதனுடைய வாழ்க்கைக்கு வழி காட்ட என்ன இருக்கிறது? என்ற எண்ணத்தில் வானத்திலும் வண்ணக்கடலிலும் தனது கவனத்தை மாறி மாறி செலுத்திக் கொண்டிருந்தது.

அதனுடைய 15 ஆவது வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டுப் பொருள் தேட, கடற் செலவை மேற்கொண்ட அதனுடைய நிலையை நினைத்து கலங்கியது; ஏங்கியது. யாரைக் குறை சொல்வது என்று தெரியாமல் விழித்தது அந்த இளம் உள்ளம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறையும் போது உள்ளம் இறந்த காலத்தை நோக்கி ஓடுவது இயற்கை போலும்! அப்படித்தான் வஞ்சமறியாத அந்தப் பிஞ்சு உள்ளத்தின் எண்ணங்களும் பின்னோக்கிப் பறந்தன. மரக்கலம் முன்னோக்கிச் செல்ல, மனக்கலம் பின்னோக்கிச் சென்றது.

சாமுவேல் கோல்ட் . ஆம். அதுதான் அந்த வடிவத்தின் பெயர். சாமுவேல் கோல்ட் 1814- ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 19- ஆம் நாள் அமெரிக்காவின் ஒரு மாநிலமான கனெக்டிகட்டிலுள்ள கார்ட்ஃபோர்ட் நகரில் கிரிஸ்டோபர் - சாரா கால்டுவெல் கோல்ட் இருவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பருத்தி, கம்பளி நூல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். வளமான வாழ்வோடு செல்வாக்கும் பெற்று வாழ்ந்து வந்த காலம் அது. கோல்ட்டின் இளமைக் காலம் இனிமையாகவே கழிந்தது. கோல்ட்டின் ஆறு வயது வரை இந்த வளவாழ்வு அவர்கள் இல்லத்தில் தங்கி இன்னிசை பாடி வந்தது. தென்றல் தவழ்ந்த அந்த இல்லப் பூங்காவில் மெல்ல புயல் வீசத் தொடங்கியது. கோல்ட் ஏழாவது வயது நிறையும் முன்னமேயே அவரது தந்தையின் வணிகம் கவிழ்ந்தது. தந்தையின் நிலைதான் இப்படியென்றால், தாயும் எலும்புருக்கி நோயினால் இயற்கை எய்தினார். இரண்டு ஆண்டுகள் கழித்து தந்தை மறுமணம் செய்து கொண்டார். தாயை இழந்த கோல்ட், தனது தந்தையுடனும் சிற்றன்னையுடனும் வாழ்ந்து வந்தார். பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கனவு கூடக் காணாமல் காலத்தைக் கழித்தார் கோல்ட்.

1824 - ஆம் ஆண்டில் அவரது 10 ஆவது வயதில் மசாசூசெட் மாநிலத்திலுள்ள வேர் என்ற இடத்தில் தான் வைத்திருந்த சாயந்தோய்ப்பதும் துணி வெளுப்பதுமான கடைக்குக் கோல்ட்டை வேலைக்கு அனுப்பினார் அவரது தந்தை. கோல்ட் இங்கே பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபட்டார். தொழிற்சாலைகளுக்கு வேலைக்குப் போதல், பள்ளிக்குச் செல்லல், வேறு பல பண்ணைகளுக்கு வேலைக்குச் செல்லல் என்று பல்வேறு திசைகளில் தனது நேரத்தைக் கழித்து வந்தார் கோல்ட். தனது 13 - ஆவது வயதை எட்டியபோது, மசாசூசெட்டில் ஆம் கெர்ச்ட்டிலுள்ள கல்லூரி தொடக்கப் பள்ளிக்கு (COLLEGE PREPARING SCHOOL) அனுப்பப்பட்டார். பள்ளியில் கோல்ட்டுக்கும் பல தொல்லைகள் ஏற்பட்டன. நடனம் ஆடவும், குதிக்கவும், பந்துகளை உதைத்து விளையாடவும் அவரால் முடியவில்லை. இதனால் மற்ற மாணவர்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர். என்றாலும் வெடி வேடிக்கைகளில் அவருக்கு இருந்த ஆர்வம், அவரது 15 - ஆவது வயதில் பள்ளிப் பிள்ளைகளிடம் அவருக்குப் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. ஆனால் அந்தப் பாராட்டும் மதிப்பும் கூட நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஒருநாள் திடீரென அந்த வெடி வேடிக்கையினால் பள்ளியின் கட்டடம் தீப்பிடித்துக் கொண்டது.

1829 சூலைத் திங்கள் 4 - ஆம் நாள் நடந்த இந்த நிகழ்ச்சி, பள்ளியிலிருந்த அவரை நேராகக் கலத்திற்குப் பணியாளாக அனுப்பி வைத்து. தனது பதினைந்தாவது வயதில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கப்பலில் தனது கல்கத்தா பயணத்தை மேற்கொண்டார் கோல்ட். இப்படி ஒன்றன் பின்னொன்றாக இறந்த கால நிகழ்ச்சிகளில் அவரது எண்ணம் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில், மீகாமனால் வழிப்படுத்தப்பட்ட மரக்கலம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கல்கத்தாவை நோக்கித் தனது நீண்ட பயணத்தை மேற்கொண்டிருந்த அந்தக் கப்பலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த கோல்ட், கப்பலின் சுக்கானைக் கவனித்துக் கொண்டே வந்தார். இடையே, இரண்டு குழல்கள் உள்ள துப்பாக்கிகளைப் பயன்படுத்திய புரட்சிக்காரர்களின் கதையைக் கேட்டுக் கொண்டே வந்தார். சுக்கானைக் கவனித்துக் கொண்டுவந்த கோல்ட், சுக்கான் திரும்புகிற ஒவ்வொரு முறையும் அதிலுள்ள ஆரக்கால் (SPOKE) ஒவ்வொன்றும் அதனைப் பிடித்திருக்கும் கைப்பிடிக்கு நேருக்கு நேர் வந்ததைப் பார்த்தார். அதையே உற்றுப் பார்த்து வந்த கோல்ட்டுக்குத் திடீரென ஓர் எண்ணம் உள்ளத்தில் பளிச்சிட்டது. இத்தனை துன்பச் சூழலுக்கு இடையிலும் அவரது இதழில் புன்னகை ஒன்று பூத்து மலர்ந்தது. உள்ளத்தில் தோன்றிய கருவை வடிவாக்க முயன்றார். அங்கு கிடந்த மரக்கட்டைகளை எடுத்து தான் எண்ணியபடி கோத்துப் பார்த்தார். வெற்றி... வெற்றி என அவரது உதடுகள் மெதுவாக இசைத்தன. மகிழ்ச்சியால் துள்ளியது அந்த இளம் உள்ளம்.

இந்த நிகழ்ச்சி இன்றைக்கு 191 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகும். அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள், அவர்களை விட உயர்ந்த படைக்கருவிகளைப் பயன்படுத்திய பகைவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் படைக்கருவிகள் வேறொன்றுமில்லை. வேலும் வில்லும் அம்பும்தாம். அமெரிக்காவின் மேற்கே இருந்தவர்களிடத்தும் சமவெளியில் வாழ்ந்த இந்தியர்களிடத்தும் இந்தப் படைக்கருவிகள் மிகச் சிறந்தவையாகக் கருதப்பட்டன. அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்கள் மிக நன்றாகத் தெரிந்திருந்தார்கள். ஒரு மணித்துளியில் 20 முதல் 30 அம்புகள் வரை எய்யும் திறமையும், அதே நேரத்தில் குதிரையில் 600 அடித் தொலைவு தாவித் தாவிச் செல்லும் ஆற்றலும் அவர்கள் பெற்றிருந்தார்கள். பகைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் சங்கிலித் தொடர்போல் ஒன்றன்பின் ஒன்றாக அம்புக் கயிறு என்று சொல்லும் அளவுக்கு அம்புகளைத் தொடர்ந்து காற்றில் செலுத்தும் வன்மை பெற்றிருந்தனர். இப்படித் துரத்திச் செல்லும் பகைவர்களிடம் சென்றதும், அவர்களுடைய ஈட்டியினால் பகைவர்களைக் குத்தி இயற்கையோடு சேர்த்துவிடுவார்கள்.

இத்தகைய மிகப் பெரிய ஆற்றலும் வலிமையும் மிக்க பகைவர்களை எதிர்க்க வேண்டிய நிலை அப்போது வாழ்ந்த அமெரிக்கர்களுக்கு இருந்தது. வில்லுக்கும் அம்புக்கும் எதிரே அவர்கள் பயன்படுத்திய படைக்கருவி சிறு கைத்துப்பாக்கியே. அந்தத் துப்பாக்கியில் ஒவ்வொரு முறையும் மருந்து போட்டுச் சுட வேண்டும். ஒரு முறை சுட்டதும் மறுமுறை அவர்கள் மருந்து போடுவதற்குள் வில்லும் அம்பும் ஈட்டியும் அவர்களுடைய உயிருக்கு உலை வைத்தன. சிலநேரங்களில் ஒருமுறை சுடும் பெரிய துப்பாக்கி, சிறு கை துப்பாக்கி இவற்றைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை சுடலாம். அவ்வளவுதான். ஆனால் வில்லும் அம்பும் குதிரைகளிலிருந்தபடியே எய்வதற்கு மிகவும் சிறந்த கருவிகளாக இருந்தன. இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அங்கு வாழ்ந்த இந்தியர்கள், தங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் போகவும் பின் தொடர்ந்து செல்லவும் தாக்கவும் முடிந்தது. ஆனால் அமெரிக்கர்களிடம் இருந்த நீண்ட துப்பாக்கி தரையிலிருந்து சுடுவதற்குத்தான் ஏற்றதாக அமைந்திருந்தது. எனவே எதிரிகளிடம் சண்டைக்குப் போவதைவிடத் தங்களுடைய பாதுகாப்புக்காகவே அமெரிக்கர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். இத்தகைய நெருக்கடியான, இக்கட்டான நேரத்தில்தால் கோல்ட் சுழல் துப்பாக்கியைக் (REVOLVOR) கண்டுபிடித்தார். ஒருமுறைக்குப் பதில் தொடர்ந்து ஐந்து முறை சுடக் கூடிய சுழல்துப்பாக்கியை அமைத்தார். இதையே பின்னர் ஆறுமுறை சுடக் கூடிய சுழல் துப்பாக்கியாக மாற்றினார். கோல்ட்டுக்கு அப்போது வயது 21. இந்தச் சுழல்துப்பாக்கியே அமெரிக்காவின் வரலாற்றை மாற்றி அமைந்தது எனவும் கூறுகின்றனர்.

(அடுத்த இதழில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.