எதிரிகள் இருந்தால்... மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
பொதுவாக எதிரிகள் இல்லாதவர்களே உலகில் இருக்க முடியாது என்ற நிலைதான் இன்றும் உள்ளது.


பொதுவாக எதிரிகள் இல்லாதவர்களே உலகில் இருக்க முடியாது என்ற நிலைதான் இன்றும் உள்ளது.
எதிரிகள் இல்லை என்றால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து விடும் என்பார்கள்.
மற்றவர்களை விட வித்தியாசமான பண்புகளைக் கொண்டவர்களுக்கு எதிரிகள் ஏராளமாக உருவாவது வழக்கம்.
சில சூழ்நிலைகளில் நம்மைப் பற்றி தெரியாதவர்கள் கூட நம்மை எதிரியாகப் பார்ப்பதும் நடந்துதான் வருகிறது.
அப்படி என்றால் எதிரிகளே இல்லாத உலகத்தைப் படைப்பது எப்படி ? என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் யாரையும் எதிரியாக நினைக்காமல் இருந்து விட்டாலே போதுமானது.
அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி நடந்தால் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்? என்பதை யோசித்து செயல்படுத்தினாலே எல்லாம் நன்மையில் முடியும். எதிரிகள் இருப்பதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
கோபத்தைக் கட்டுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கலாம்
பொதுவாக தொழில் என்றாலும் சரி, பணியிடம் என்றாலும் சரி, எதிரிகள்தாம் பல்வேறு பிரச்னைகளுக்கு மூலகாரணமாகஇருப்பார்கள்.
நம் கண் முன்னால் உள்ள எதிரிகளும், முதுகுக்குப் பின்னால் உள்ள எதிரிகளும் நமக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள் .
ஆனால் ஒவ்வொருவரிடமும் நாம் சண்டை போடத் தேவையில்லை. இதை யார் செய்தார்கள் என்பது கூட சில சமயங்களில் தெரியாமல் போகலாம். அத்தகைய நேரங்களில்எதிரிகளால் நமக்கு கோபம் அதிகரிக்கும். இருப்பினும் நாம் நமது கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்ள பழகிக் கொள்வோம். கோபத்தை கட்டுப்படுத்துவது என்பதுஉடனடியாக யாராலும் முடியாது. தினந்தோறும் எதிரிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளை கேட்டுக் கேட்டு நமக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது கை வந்த கலையாகி விடும்.
மொத்தத்தில் கோபத்தை ஏற்படுத்தும்எதிரிகள்தாம் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நமக்கு மறைமுகமாகச் சொல்லித் தருகிறார்கள்.
எதிரிகள் உந்துசக்திகள்!
நம்முடைய எதிரிகள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம் ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் போட்டியாளர் என்ற எண்ணத்தை உயிர்ப்பித்து விடுவார்கள் அல்லது தூண்டிவிடுவார்கள்.
இன்னும் சொல்லப் போனால் எதிரிகள் நமக்கு சரியான உந்துசக்தியாக இருப்பார்கள். இதை அவர்கள் நிச்சயம் யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நமக்கு எதிராகச் செயல்படும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதால் நம்மால் எளிதில் உயரிய நிலையை, வெற்றியை அடைய முடியும்.
எதிரிகள் நம்முடைய நல்ல பண்புகளை எல்லாம் குந்தகம் விளைவிக்க நினைப்பார்கள். நாம் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தைரியமாகச் செயல்பட வேண்டும். மொத்தத்தில் ஆரோக்கியமான போட்டி என்பதை மட்டுமே நாம் மனதில் கொள்ள வேண்டும்.
முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் எதிரிகளின் எண்ணங்கள்
பொதுவாகவே எதிரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருவரின் நல்ல பண்புகளை சொல்லமாட்டார்கள். நேர்மறை கருத்துகளையும் சொல்லமாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.
எப்பொழுதும் எதிர்மறையான கருத்துகளையே நம்மைப் பற்றி சொல்வார்கள். ஆனால் சில சமயங்களில் அது கூட நமக்கு நல்ல முடிவை எடுக்க காரணமாக அமையும். உதாரணமாக "அவன் தொடங்கப் போகும் தொழிலில் யாரெல்லாம் நஷ்டமடைந்தவர்கள் என்று சொல்லி இருக்கிறேன்; இவனும் நஷ்டம் அடைந்து விடுவான்' என்று எதிரி கருத்து சொல்லும்போது, நாம் அதைப்பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்பை அது உருவாக்கிக் கொடுக்கும். தொழிலில் ஏற்கெனவே நஷ்டமடைந்தவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொண்டு நாம் அவர்கள் செய்த தவறுகளைச் செய்யாமல் தவிர்க்க உதவியாகவும் இருக்கக் கூடும்.
எதிரி கூட நண்பன் ஆகலாம்
நம்மைப்பற்றி சுய பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பாகக் கூட எதிரிகளின் கருத்துகள் அமையக்கூடும். அவர்களின் இந்த கருத்துகளால் நாம் நன்கு சிந்தித்து சரியான வழியை தேர்வு செய்து வெற்றியை எட்ட முடியும். அவர்களின் எதிர்மறை கருத்துகளால்தானே நாம் சரியான பாதையைத் தேர்வு செய்தோம். அதன் மூலம் தானே வெற்றி கிடைத்தது என சிந்தித்து நாம் எதிரிகளிடம் நட்பு பாராட்டி அவர்களிடம் நேசத்தை வளர்த்துக் கொள்ள கூட உதவும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஏற்கக்கூடிய தொழிலில் அவர்களைப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள கூட தயங்காத நிலை உருவாகும்.
நேர்மறை எண்ணம் வெளிப்பட வாய்ப்பு
பொதுவாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் நேர்மறை எண்ணங்களும், எதிர்மறை எண்ணங்களும் குவிந்து கிடக்கும். அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த எண்ணங்கள் வெளிப்படும். எதிரிகள் நம்மை பற்றி எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தும் போது, சமூகத்தில் நம்முடைய நேர்மறை எண்ணங்களை நாம் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகும். இது எதிரிகளால் நமக்கு கிடைக்கும் நல்லதொரு வாய்ப்பு.
எதிரி ஒருவன், ""இவன் யாருக்கும் உதவி செய்ய மாட்டான்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தால், "நான் அப்படி இல்லை; நான் உதவுவேன்' என்று சமூகத்திற்கு நல்ல விஷயங்களை செய்யும் படியான சூழல் உருவாகும். நமது எதிரிகளே நமது நேர்மறை எண்ணங்களையும் வெளிப்படுத்த உதவுவார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடியும்.
புரிதல் இன்மை
புரிதல் இல்லாத சூழ்நிலையால் கூட எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. பலருக்கும் எதிரிகள் உருவாவது சரியான புரிதல் இல்லாத தன்மையினால் தான். சில இடங்களில் நல்ல நண்பர்கள் கூட சரியான புரிதல் இல்லாமல் பிரிந்து விடுவார்கள். ஆனால் அது குறித்து அவர்கள் இருவரும் விவாதித்து இருக்கமாட்டார்கள். அதற்காக சற்று நேரம் ஒதுக்கி விவாதித்து இருந்தால் அந்த பிரிவு நடந்திருக்காது. எதிரி உருவாகி இருக்கமாட்டார்.
உதாரணத்திற்கு அந்த மனையை வாங்க வேண்டாம் என்று நண்பன் ஒருவன் சொல்லும்போது நம்முடைய வளர்ச்சி பிடிக்காமல் சொல்கிறான் என்று அவனை எதிரியாக நினைப்போம். சில காலம் கழித்து நாம் வாங்கிய விலையை விட மிகக் குறைவான விலைக்கு தான் அந்த மனையின் மதிப்பிருக்கும். இப்போதுதான் நமக்கு நண்பன் கூறியது நினைவுக்கு வரும். அதன் பின் அவனைச் சந்தித்து நீ அன்று கூறியது போல் செய்திருந்தால் இன்று நஷ்டம் இருந்திருக்காது என்று சொல்லி மீண்டும் நண்பர்களாக மாறி விடுவோம். இதற்குத்தான் புரிந்துகொள்ளும் தன்மை அவசியம்.
வெறுப்பையும் நேசியுங்கள்
அன்பும்,வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. ஒரு சமயத்தில் ஒன்று மட்டும் தான் வெளிப்படும். நம்மீது மீது அன்பு செலுத்துபவர்கள் இருப்பதுபோல் வெறுப்பைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நம்மிடம் அன்பு காட்டுபவர்களை நாம் புகழ்வோம். அதே சமயத்தில் வெறுப்பைக் காட்டுபவர்களைப் பற்றி நாம் பொதுவெளியில் விமர்சிக்காமல் இருந்து விட்டால் அவர்களும் விரைவில் நண்பர்களாகி விடுவார்கள்.
மொத்தத்தில் சமூகம் என்பது நல்லவர்களையும், கெட்டவர்களையும், நண்பர்களையும், எதிரிகளையும் கொண்டதுதான். நாம் எப்பொழுதும் நல்ல விஷயங்களையும், நல்லவர்களையும் மட்டுமே மனதில் சுமந்து செல்ல ஆசைப்பட வேண்டும்.
எதிரிகளையும் ,கெட்ட விஷயங்களையும் மனதிலிருந்து அகற்றி விட்டாலே இரண்டுமே நல்லவைகளாக மாறிவிடும். அவை வெற்றியை நோக்கிய பயணத்தை நமக்குத் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...