இணைய வழிக் கல்வி... எப்படி கற்பது?
மக்களின் இயல்பு வாழ்க்கையை கரோனா நோய்த்தொற்று பெருமளவில் புரட்டிப் போட்டுள்ளது. வேலை செய்யும் முறையிலிருந்து கல்வி கற்பது வரை அனைத்திலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


மக்களின் இயல்பு வாழ்க்கையை கரோனா நோய்த்தொற்று பெருமளவில் புரட்டிப் போட்டுள்ளது. வேலை செய்யும் முறையிலிருந்து கல்வி கற்பது வரை அனைத்திலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தினமும் வகுப்புகளில் ஆசியர்களை நேரடியாகச் சந்தித்தும் நண்பர்களுடன் ஆலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு பாடம் கற்று வந்த மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி புதுமையான அனுபவங்களைத் தந்துள்ளது.
சில மாணவர்கள் இணையவழி கல்வி முறைக்கு தங்களை எளிதில் பழக்கப்
படுத்திக் கொண்டுள்ளனர். பல மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு கணினித் திரை, செல்லிடப்பேசி திரையை உற்று நோக்குவது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கச் செய்கிறது.
எந்தவித உடலுழைப்பும் இல்லாமல் வீட்டிலேயே மாணவர்கள் முடங்கிக் கிடப்பதாலும், ஒரே இடத்தில் அமர்ந்து இணையவழியில் பாடங்களைக் கற்பதும் அவர்களுக்கு அசெüகரியங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் விரைவிலேயே சோர்வடைந்து விடுகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக அவ்வப்போது இடைவேளைகள் வழங்கப்படுகின்றன. மதிய உணவு இடைவேளையும் மாணவர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவி வந்தது.
தற்போது மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் உடலளவில் சோர்வடைவது மட்டுமல்லாமல் மனதளவிலும் தளர்வடைந்து விடுகின்றனர்.
இதிலிருந்து தப்புவதற்காக மாணவர்கள் அவ்வப்போது தங்களுக்கு இடைவேளை அளித்துக் கொள்ள வேண்டும்.
அப்போது, செல்லிடப்பேசி, கணினித் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், இணையவழியில் பாடங்களைக் கற்பதற்கு ஏற்ற சூழலை வீட்டில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் மெத்தையில் படுத்துக் கொண்டே இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய செயல் பாடம் கற்பதில் நமது கவனத்தைச் சிதறடிக்கும்.
இணையவழியில் பாடம் கற்பதற்கென தனி அறையையோ அல்லது தனி இடத்தையோ தேர்ந்தெடுத்து அங்கு தேவையான பொருள்களை வைத்துக் கொள்ள வேண்டும். பாடம் கற்பதற்கான மேஜையில் தின்பண்டங்கள், உணவுப் பொருள்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு அவ்வப்போது அவற்றை உண்பதை மாணவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு செய்வது மாணவர்களின் கவனச்சிதறலை அதிகரிக்கும். படிப்பதற்கான மேஜையிலும் இடத்திலும் தேவையான புத்தகங்கள், பொருள்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
இணையவழியில் கல்வி கற்கும்போது மடிக்கணினியிலோ அல்லது செல்லிடப்பேசியிலோ குறிப்புகளை எடுக்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், அவ்வாறு குறிப்புகள் எடுப்பது போதுமான பலனைத் தராது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் கற்பிக்கும்போது அவற்றைக் கையில் எழுதி குறிப்புகள் எடுப்பதே மனதில் எளிதில் பதியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இணையவழி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக குறிப்புகள் எடுப்பதற்குத் தேவையான பொருள்களைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
இணையவழி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே மடிக்கணினி, செல்லிடப்பேசிக்கான சார்ஜர், தேவையான புத்தகங்கள், ஒலிபெருக்கிக் கருவிகள் உள்ளிட்டவற்றைத் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும். இல்லையேல் வகுப்பு நடைபெறுவதற்கு மத்தியில் மற்ற பொருள்களைத் தேடிக் கொண்டிருந்தால் கவனச்சிதறல் ஏற்பட்டுவிடும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பாடங்களைக் கற்கும்போது நமக்கு ஏற்படும் ஐயங்களை எந்த நேரத்திலும் ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெறுவதற்கான சூழல் நிலவியது. ஆனால், தற்போதைய சூழலில் செல்லிடப்பேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு ஐயங்களைக் கேட்பது சரியா என்று பலருக்கும் தயக்கம் ஏற்படலாம்.
ஆனால், ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். இல்லையெனில் அடுத்து வரும் பாடங்களும் புரியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூக வலைதளம் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எந்தவித தயக்கமும் கொள்ளக் கூடாது.
வீட்டில் இருக்கும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது. அத்தகைய நேரங்களில் இணையவழி வகுப்பில் பங்கேற்காமல் இருக்கலாம். ஏனெனில் உடல்நலக் குறைவுடன் பாடங்களைக் கற்க முயன்றால் உடல்நலன் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, உடல்நலக் கோளாறு ஏற்படும்போது முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். உடல்நலன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு பாடங்களை மீண்டும் கற்கலாம்.
பாடங்களைக் கற்பதில் கவனத்தை குவிப்பதற்காக யோகாசனப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றை மாணவர்கள் மேற்கொள்ளலாம். வீட்டு மாடியிலோ அல்லது தோட்டப் பகுதியிலோ நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். கரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் உடல்நலத்தைக் காப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நாம் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் கல்வி கற்பதில் சோம்பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, பாடம் கற்பதற்கும் படிப்பதற்கும் தேவையான அட்டவணைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு அதன்படி செயல்படுவது நமது செயல்திறனை மேலும் அதிகரிக்கும்.
பாடம் படிப்பதில் தினசரி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவது நமது செயல்திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதற்கு பெருமளவில் உதவி புரியும். கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலிலும் தெளிவான திட்டத்தை வகுத்து செயல்பட்டால் இணையவழியில் பாடம் கற்பதும் எளிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...