கைவிலங்கல்ல... சமூக வலைதளம்!
தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.


தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு ஒரு தகவல் தேவைப்பட்டால் அவர்கள் நூலகத்துக்குச் சென்று பெற வேண்டிய சூழலே நிலவியது.
ஆனால், நமக்கு ஒரு தகவல் தேவைப்பட்டால் அடுத்த நொடியே கூகுளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்பங்களின் உதவியின்றி அன்றாட வாழ்க்கையை நடத்துவதே மிகக் கடினம் என்ற சூழல் தற்போதுஉருவாகியுள்ளது.
தொழில்நுட்பங்கள் நமக்கு எந்த வகையில் பலனளித்து வருகின்றனவோ அதற்கு அதிகமாக நம் காலத்தை விரயம் செய்வதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கவனச் சிதறல்களை அவை நம்மிடம் அதிகப்படுத்துகின்றன. இதனால் புதிய விஷயங்களைக் கற்பதிலோ அல்லது பாடங்களைப் படிப்பதிலோ நம்மால் போதிய அளவில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக நாம் பயன்படுத்தும் தொழில்நுட்ப வசதிகளே உள்ளன. முக்கியமாக சமூக வலைதளங்கள் நமக்குக் கிடைத்துள்ள பொன்னான நேரத்தை வீணடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்துபவர்களால் மற்ற விவகாரங்களில் துல்லியமாகக் கவனம் செலுத்த முடிவதில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால், பலரால் அன்றாடப் பணிகளை முறையாக மேற்கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து மீள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கோ அல்லது பாடம் படிப்பதற்கோ நீங்கள் முடிவு செய்தால் அதற்குத் தகுந்த நேரத்தை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நம்மில் பெரும்பாலானோர் காலையில் அவசர அவசரமாக எழுந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்வதையோ அல்லது அலுவலகத்துக்குச் செல்வதையோதான் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
அதனால், முக்கிய விஷயங்களைச் செய்வதற்கு மாலையிலோ அல்லது இரவிலோ தான் நேரத்தை ஒதுக்கியிருப்போம். ஆனால், நேரம் செல்லச் செல்ல நம்முடைய மனவலிமை குன்றிப் போவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாலை அல்லது இரவில் நாம் மனதளவில் சோர்வடைந்துவிடுகிறோம்.
அதைக் கருத்தில் கொண்டு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதையோ அல்லது பாடங்களைப் படிப்பதையோ காலைப் பொழுதில் மேற்கொள்வது மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நாம் தூங்கி எழுந்த பிறகு நமது மனவலிமை மிகவும் அதிகமாக இருக்கும். அத்தகைய சமயத்தில் நம்மால் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். "காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாரதி கூறியது இதனால்தான். எனவே, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதை காலையிலேயே மேற்கொள்ள வேண்டும். அதற்கும் அதிகாலையிலேயே எழ வேண்டிய அவசியமில்லை. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரத்தை பாடங்களைப் படிப்பதற்கு ஒதுக்குவது மிகவும் பலனளிக்கும்.
பாடங்களைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்கும் வேளையில் அறிதிறன்பேசி, மடிக்கணினி, கையடக்கக் கணினி ஆகியவற்றில் நோட்டிஃபிகேஷன்களை அணைத்து வைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், நம் கவனத்தைச் சிதறடிக்க அவை எந்நேரமும் தயாராக உள்ளன.
சமூக வலைதளங்கள் பெரும் கடல் போன்றவை. அவை நம்மை எளிதில் மூழ்கடித்துவிடும். எனவே, படிக்கும் தருணங்களில் அது தொடர்பான செயலிகளைத் தவிர மற்ற செயலிகளைப் பயன்படுத்தவே கூடாது.
சிலர் படிக்கும்போதும் சமூக வலைதளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதுவே அவர்களின் கவனச்சிதறலாக அமைகிறது. அவர்களால் பாடங்களையும் முறையாகப் படிக்க முடிவதில்லை.
அதிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற நினைப்பவர்கள், பாடங்களைக் காலை வேளையில் படிக்கத் தொடங்கும்போது மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் ஏதேனும் புதிய செய்திகள் வந்துள்ளனவா என்பதை மட்டுமே பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அச்செய்திகளுக்கு எந்தவிதப் பதிலும் அப்போது அளிக்கத் தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அதேபோல் ஒட்டுமொத்த 24 மணி நேரத்தையும் உங்கள் நண்பர்களுக்காக நீங்கள் செலவிட முடியாது. எந்நேரமும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதும் முடியாத காரியம். எனவே, நீங்கள் படிக்கும் நேரங்களில் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்லி விடுவது நல்லது. இவ்வாறு கூறுவதால் நண்பர்கள் உங்களைத் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்த பட்டியலைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அத்தகைய பட்டியல் உங்களை அடுத்தடுத்த பணிகளை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும். சமூக வலைதளங்களால் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதை அவை தடுக்கும். எத்தகைய செயலையும் உரிய திட்டமிடுதலுடன் செய்வது திறனை அதிகரிக்கச் செய்யும்.
சமூக வலைதளங்கள் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில்லை என்பதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதைத் தாண்டி நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்வதற்கு இளமைப் பருவமே அதிபொருத்தமாக இருக்கும். இந்தப் பருவத்தில் மட்டுமே அதிக விஷயங்களை எளிதிலும் விரைவாகவும் புரிந்து கொண்டு கற்றுக் கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...