எஸ்கேப் ஆக நினைப்பவரா நீங்கள்?
""அப்பாடி அதிலிருந்து எஸ்கேப் ஆயிட்டேன். நல்ல வேளை எப்படியோ தப்பிச்சிட்டேன்'' இது போன்ற வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறை மத்தியில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளாக மாறிவிட்டன.


""அப்பாடி அதிலிருந்து எஸ்கேப் ஆயிட்டேன். நல்ல வேளை எப்படியோ தப்பிச்சிட்டேன்'' இது போன்ற வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறை மத்தியில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளாக மாறிவிட்டன.
ஒரு பொறுப்பிலிருந்து தன்னை எந்த வழியிலாவது விடுவித்துக் கொள்வதையோ, அல்லது பொறுப்பை கொடுப்பவர்களே தங்களைக் கழற்றி விடுமாறு சில விஷயங்களை செய்வதையோ பெரும்பாலோனோர் இன்று செய்து வருகின்றனர்.
உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு கூட்டத்திற்கு ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது, தனக்குப் பதிலாக வேறு யாரையோ அனுப்பி வைப்பது அல்லது அன்றைய நாளில் வேறு ஏதோ பெரிய வேலை இருப்பது போல காட்டிக் கொள்வது என்பதன் மூலம் அந்த கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இளைஞர்கள் பலர் செய்து வருகின்றனர். இதைதான் எஸ்கேபிசம் என்கிறார்கள். இதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கூட இளம் தலைமுறையினர்உருவாக்கி வருகிறார்கள்.
"ஒரே மாதிரியான வேலையைத் தொடர்ந்து செய்பவர்கள், சில சூழ்நிலைகளில் மன அழுத்தத்தின் காரணமாக அதை விட்டு வெளியே வர நினைப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் எஸ்கேபிஸம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக மாறி விடுகிறது' என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
"ஒரு சிலர் அந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால் அதை விட்டு வெளியே வர இந்த எஸ்கேபிஸத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்' என்கிறார்கள் வேறு சில ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு விஷயத்தில் இருந்துதங்களை எஸ்கேப் செய்வதையோ அதைவிட்டு தப்பிப்பதையோ செய்யாமல் இருக்கவேமுடியாது என்கிறது சில ஆராய்ச்சி முடிவுகள்.
இந்த தப்பித்தல் என்ற வழக்கம் ஆரம்ப காலம் தொட்டே மக்களிடம் இருந்துள்ளது.
அம்மாவுடன் தொடர்ந்து குழந்தை இருக்கும் நிலையில், அதை விட்டு மற்ற வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அந்த குழந்தையிடம் இருந்து தப்பித்து அடுத்த பணிக்கு செல்வதற்காக ஏதோ ஒரு கதையை அந்த அம்மா கூறுவது வழக்கம். இது எந்த காலகட்டத்திலும் இருந்து வந்துள்ளது. இதனால்தான் மரபுரீதியாகவும் இந்த தப்பிப்பதற்கான கதைகளைக் கூறும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.
ஒரு குறிப்பிட்ட பணியில் இருந்து தப்பிப்பதற்காக, "பைக் பழுதாகிவிட்டது; வீட்டில் விருந்தினர்கள் வந்தார்கள்' என்பன போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கி குறிப்பிட்ட பணியிலிருந்து தப்பிப்பதை இப்போது பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
காலத்துக்கு ஏற்ற வகையில் தப்பிக்கும் திறன்களும் அதற்கான வழிமுறைகளும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு நிறுவனப் பணியில் இருந்து தப்பிப்பது என்பது அவ்வளவுஎளிதன்று. முன்பெல்லாம் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லாமலேயே அங்கு சென்றதாகவும் அங்கு சம்பந்தப்பட்ட நபரைப் பார்க்கமுடியவில்லை என்றும் கூறி அந்த பணியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் இன்றோ ஜிபிஎஸ் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நபர் எங்கிருக்கிறார்? யாரைச் சந்தித்திருக்கிறார்? என்பன போன்ற விவரங்களை அந்த நிறுவன உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள இயலும் என்பதால் தப்பிக்கும் வழி முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது.
டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களும் பெருமளவு வளர்ந்துவிட்டதால் அதற்கேற்ற வகையில் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் மாற்ற வேண்டியதுசிலருக்கு அவசியம் ஆகிவிட்டது. இதன் விளைவாக தப்பித்தலுக்காகப் புதுப்புது உத்திகளை உருவாக்கும் படைப்பாற்றலும் கூட அதிகரித்து விட்டன என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட பணியில்இருந்து தப்பிப்பது என்பது மேற்கொண்ட வழிமுறைகள் மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே பணியைத் தொடர்ந்து செய்யும் போது ஏற்படும்
மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே சின்ன சின்ன தப்பித்தல்களை ஒவ்வொருவரும் செய்வது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ந்து ஒரே பணியைச் செய்து வரும் நபர்கள் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அல்லது அந்த சிந்தனையில் இருந்து வேறு சிந்தனைக்கு தங்கள் மனதைக் கொண்டு செல்ல சிறியஅளவிலான அல்லது பெரிய அளவிலானபயணங்களை மேற்கொள்ளலாம்.
இதன்மூலம் அன்றாட நடவடிக்கையில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.
இது அவர்களுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது.மேலும் பயணங்களின் மூலம் அந்த இடங்களின் பண்பாடு, கலாசாரம் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிவதுடன் கடந்த கால மக்களின் வாழ்க்கை முறையையும் தெரிந்துகொண்டு அதனுடன் ஒத்துப் போவதற்கான வழி முறைகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
இவ்வாறு செல்லும் பயணங்களின் மூலம் மற்றவர்கள் படும் சிரமங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால், "நம் நிறுவனத்தில் நாம்தானே அனைத்திற்கும் பொறுப்பு' என்றசிந்தனை தோன்றி இனிமேல் தேவையின்றி தப்பிப்பதற்கான வழி முறைகளைத் தேடக்கூடாது என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும்.
ஒரு பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பது கூட அவர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். ஓய்வு என்பது தப்பிப்பதற்கான வழிமுறை அல்ல. அது முன்னேற்றத்திற்காக ஒருவர்சிந்திக்கும் நேரமாகக் கூட இருக்கலாம்.
இப்படி ஒரு விஷயத்திலிருந்து தப்பிப்பது என்பதில் கூட அளவுகோல்கள் இருக்கின்றன.
எந்த ஒரு வேலை சொன்னாலும் அதில் இருந்து தப்பிக்க நினைப்பது மிகவும் மோசமானது. இதை நிச்சயம் அனைவரும் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் இருந்து விலகி செல்ல நினைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம்தான்.
அதேசமயம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, வேறொரு செயலை நாம் செய்தால் அது நிறுவனத்திற்கு மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று தெரிந்தால், அதற்காக ஒரு குறிப்பிட்ட பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொண்டு நிறுவனத்திற்கு முன்னேற்றம் அளிக்கும் செயலில் கவனம் செலுத்தினால் அதுதான் ஒருவரின் தப்பிக்கும் தன்மையை, எல்லோரும் ஏற்கக்கூடிய தன்மையாக மாற்றி விடும் என்றால் அது மிகையில்லை.
தப்பிக்க நினைக்கும் வழிமுறை தரமானதாக இருந்தால் தலைமை நமக்கு தனி இடம்கொடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...