இளம் தொழில்முனைவோர்... புதிய வகை காலணி!
உலக அளவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.


உலக அளவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 7 கோடியே 70 லட்சம் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில், குறிப்பாக பாதங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பால் பாதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைந்து, பாதங்கள் கறுப்பாக மாறிவிடுகின்றன. புண் ஏற்பட்டால் ஆறுவதற்கு தாமதமாகிறது. உரிய மருத்துவசிகிச்சை அளிக்காவிட்டால், புண் பெரிதாகி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பாதங்களுக்கு அருகே உள்ள நரம்புகள் உணர்வின்றிப் போகின்றன. ஏதேனும் காலில்குத்தினாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. பாதங்களில் ரத்தம் வழிந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை.
இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அணிந்து கொள்வதற்கென்று காலணிகளைத் தயாரிக்கிறார்கள். 23 வயது நிரம்பிய வேதியியல் பொறியாளரான இளைஞர் விதான் பயா என்பவரும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்காக "டாக்டர் பிரின்ஸ்லீ' என்கிற காலணி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், செய்த ஆராய்ச்சிகள் வியக்க வைக்கின்றன. அது குறித்து அவரிடம் பேசியபோது...
""எங்களுடைய குடும்பத்தில் ஒரு திருமண விழா 2016- இல் நடந்தது.
திருமணத்துக்கு வந்திருந்த என் நெருங்கிய உறவினர் ஒருவரை போட்டோ எடுக்க அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். நான் அவரிடம் பேசியபோது, அதற்கான காரணத்தைச் சொன்னார். அவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர். அதற்கான காலணியை அணிந்திருந்தார். அந்த காலணியை அணிந்து கொண்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்ப வில்லை. பார்க்கவே சகிக்க முடியாத மாதிரி காலணி இருந்தது. பெரிதாக இருந்தது. நல்ல வடிவமைப்புடன் இல்லை.
என் குடும்பத்தினர் தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் சி&இ லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். என் உறவினர் அணிந்திருந்த சர்க்கரை நோயாளிகளுக்கான காலணியைப் பார்த்ததும், மருத்துவரீதியாக சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன் அளிக்கக் கூடிய, அதேசமயம் நல்ல வடிவமைப்புடன் உள்ள காலணிகளை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
2017-இல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் கெமிகல் என்ஜினியரிங் படிக்கப் போனேன். அங்கே படிக்கும் மாணவர்கள் சுயமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
அதற்காக விண்ணப்பித்தேன். பல்கலைக்கழகம் அனுமதி அளித்ததோடு, தேவையான உதவிகளையும் செய்தது.
அங்குள்ள காலணிகள் தயாரிக்கும் 250க்கும் மேற்பட்ட நிறுவனத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 40க்கும்
அதிகமான நோயாளிகளிடம் பேசினேன்.
அதற்குப் பிறகு காலணிகளைத் தயாரிக்கும் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய நிறுவனத்தை நேரில் சென்று பார்த்தேன்.
பாஸ்டன் நகரில் மிகப் பெரிய காலணி தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. அதுபோன்று மருத்துவ கல்வி நிலையங்களும் நிறைய உள்ளன. பாஸ்டனில் உள்ள காலணி தொழிற்சாலைகளில் காலணிகளின் பலவிதமான வடிவங்களைப் பார்த்தேன். சர்க்கரை நோயாளிகளுக்காக அங்கு தயாரிக்கப்படும் காலணிகளை அணிந்த நோயாளிகளிடம் பேசி, அந்த காலணிகளை அணிந்த அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். "காலணி வடிவமைப்பாளர்களின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் இத்தாலி நாட்டில் உள்ள சிவிட்டனோவா மார்ச்சி என்ற நகரத்துக்குச் சென்று அங்குள்ள பல காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளையும் பார்த்தேன். அங்கு பெற்ற அனுபவம், அறிவு ஆகியவற்றின் துணையுடன் 2019 - இல் "டாக்டர் பிரின்ஸ்லீ' என்ற காலணி தயாரிக்கும் நிறுவனத்தை குடும்பத்தினர் உதவியுடன் தொடங்கினேன்.
அதற்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையை முதன்முதலாகத் தொடர்பு கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கான எனது காலணி தயாரிப்பைப் பற்றி பேசினேன். அவர்கள் நாங்கள் தயாரித்த காலணிகளுக்கான ஆர்டர்களைக் கொடுத்ததோடு, பல சர்க்கரை நோயாளிகளுக்கும் எங்களுடைய காலணிகளை அணியுமாறு பரிந்துரைத்தார்கள். அதற்குப் பிறகு பல மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டு காலணி தயாரிப்பில் ஈடுபட்டேன்.
கரோனோ காரணமாக எல்லாத் தொழில்களும் முடங்கிப் போனது. நான் உடனே ஆன்லைன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கான காலணிகளை விற்பனை செய்யத் திட்டமிட்டேன். அமேஸான், ஃபிலிப்கார்ட் போன்ற பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டேன். எங்களுடைய இணையதளம் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலணிகளுக்கான தங்களுடைய தேவையைக் குறிப்பிட்டால், ஆன்லைன் நிறுவனங்களின் மூலம் அவற்றை அவர்களுக்கு வழங்கி வருகிறேன்.
நாங்கள் தயாரிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கான காலணிகள் பிற சர்க்கரை நோயாளிகளுக்கான காலணிகளுடன் பலவிதங்களில் மாறுபட்டுள்ளது. முதலில் அதன் வடிவம். எங்களுடைய காலணிகள் பிற சாதாரண காலணிகளின் வடிவத்தில் இருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டிருக்காது. பார்ப்பதற்கு சாதாரண காலணிகள் போலவே இருக்கும். நாங்கள் தயாரிக்கும் காலணிகளை அணிந்து நடந்து சென்றால் பாதங்களில் பிற காலணிகளை அணிந்து நடந்து செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைவிட குறைவான அழுத்தமே இருக்கும்.
காலணிகளை அணிந்து நடக்கும்போது அதனால் ஏற்படும் காயம் ஏற்படாத அளவுக்கு மென்மையாக இருக்கும். பாதங்களில் ஏற்படும் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும். எலும்புகளிலோ, தோலிலோ எந்த அழுத்தமும், உராய்வும் இருக்காது. இதற்காக காலணிகளைத் தயாரிக்க நல்ல தோல் வகையை நாங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறோம்'' என்கிறார் விதான் பயா.
அவர் தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்திருக்கிறார். "" தொழிற்சாலையைத் தொடங்கிவிட்டு வெளிநாட்டில் படிக்கப் போய்விட்டால் தொழிற்சாலையை யார் பார்த்துக் கொள்வது?'' என்று கேட்டால், ""ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதோடு, அமெரிக்காவில், வெளிநாடுகளில் காலணிகளுக்கான ஆர்டர்களைப் பிடிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்'' என்கிறார் விதான் பயா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...